தகவல் தொடர்பு பணியாளர்களுடன் திருத்தந்தை தகவல் தொடர்பு பணியாளர்களுடன் திருத்தந்தை   (VATICAN MEDIA Divisione Foto)

சமூகத்தின் காயங்களைக் குணப்படுத்தும் தகவல் தொடர்புப்பணி

கடினமான பணி மட்டுமல்ல, மனிதர்களை அன்பு செய்தல் மற்றும் தாழ்ச்சியில் வளர்தலுக்கான ஊக்கத்தை தரும் பணி தகவல் தொடர்புப்பணி.

மெரினா ராஜ் - வத்திக்கான்

பத்திரிக்கையாளர் பணி என்பது நோய்களைக் குணப்படுத்துவதன் வழியாக மனித குலத்தை அன்பு செய்யும் ஒரு மருத்துவரின் பணி போன்றது என்றும், உலகம் மற்றும் சமூகத்தின் காயங்களைத் தன் கரங்களால் தொட விரும்பும் பத்திரிக்கையாளர்கள் செய்திகளை முழுமையாகப் புரிந்துகொள்ளவும், முன்னிலைப்படுத்தவும், எடுத்துரைக்கவும் அழைக்கப்படுகின்றார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சனவரி 22 திங்கள் கிழமை வத்திக்கானின் தூய கிளமெந்தினா அறையில் வத்திக்கான் அங்கீகாரம் பெற்ற பன்னாட்டு பத்திரிக்கையாளர்கள் இயக்கத்தின் உறுப்பினர்கள் ஏறக்குறைய 150 பேரை சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உண்மையின் மீது அளவற்ற அன்பை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.

ஞாயிற்றுக்கிழமைகளிலும் முக்கியமான திருஅவை நாள்களிலும் தங்களது பணியினை சிறப்பாக செய்து கொண்டிருக்கும் வத்திக்கான் பத்திரிக்கையாளர்களுக்குத் தன் நன்றியினைத் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையின் பாதையை விவரித்தல், பிளவு மற்றும் அவநம்பிக்கைகளுக்குப் பதிலாக அறிவு மற்றும் தகவல்தொடர்பு பாலங்களை அமைப்பதில் பத்திரிக்கையாளர்கள் மேற்கொள்ளும் சிரமங்களைப் பற்றி சிந்திப்பதற்கான ஒரு வாய்ப்பாக இச்சந்திப்பு உள்ளது என்றும் கூறினார்.

வாழ்வின் கதைகளைத் தேடுகின்ற மற்றும் விவரிக்கின்ற கலையை, வத்திக்கான் தகவல் தொடர்பு துறையில் பணியாற்றுவதன் வழியாகக் கற்றுக்கொண்டேன் என்ற ஓய்வுபெற்ற பத்திரிக்கையாரின் கருத்துக்களை எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், கடினமான பணி மட்டுமல்ல மனிதர்களை அன்பு செய்தல் மற்றும் தாழ்ச்சியில் வளர்தலுக்கான ஊக்கத்தை தரும் பணி பத்திரிக்கையாளர் பணி என்றும் எடுத்துரைத்தார்.

திருஅவையின் அவதூறுகள் பற்றி பேச வேண்டிய சூழல்களில் நிதானம் மற்றும் மரியாதையுடன் எளிமையாக பதிலளிக்கும் விதத்திற்காக பத்திரிக்கையாளர்களை வாழ்த்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஊழல்கள் மற்றும் அவதூறுகளுக்கான கருத்துக்கள் பற்றிய அவர்களின் அணுமுறை பாராட்டத்தக்கது என்றும் கூறினார்.

சிந்தனையுடன் கூடிய தகவல்கள், செவிசாய்த்தலுடன் கூடிய பேசுதல், அன்புடன் கூடிய அர்ப்பணிப்புடன் தங்களது பணியினைத் தொடர்ந்து செய்ய அவர்களுக்கு ஊக்கமளித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உண்மையின் பொறுப்பு என்னும் உறுதியான பாறையில் தகவல் தொடர்பாளர்களின் பணி நிறுவப்பட வேண்டும் மாறாக வீண் உரையாடல் மற்றும் கருத்தியல் என்னும் மணலில் அல்ல என்றும் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 January 2024, 13:22