குணப்படுத்த இயலா நோயாளிகள் குறித்த ஜெபக்கருத்து

பேசமுடியா நிலையிலும், நம்மை அடையாளம் காணமுடியாமலும் இருக்கும் நோயாளிகளின் கைகளைத் தொடும்போது, அவர்கள் நம்மோடு தொடர்புகொள்ள முயல்வதை உணரமுடியும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

தீராத நோய்கள் என்பது பற்றி மக்கள் பேசும்போது, குணப்படுத்த முடியாத நோய் மற்றும் அக்கறை காட்டப்படாத நோய் என்பவைகளை தவறாகப் புரிந்துகொள்கிறார்கள் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி லூர்து அன்னை திருவிழாவின்போது சிறப்பிக்கப்படும் உலக நோயாளர் தினத்தையொட்டி தன் பிப்ரவரி மாத செபக்கருத்தை வழங்கியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குணப்படுத்தமுடியாத நோய் என்பதும், அக்கறை காட்டப்படாத நோய் என்பதும் இரண்டும் ஒன்றல்ல என அதில் கூறியுள்ளார்.

குணப்படுத்தப்பட முடியும் என்பதற்கு ஒரு சிறிய வாய்ப்பிருந்தாலும், அனைத்து நோயாளிகளுக்கும் மருத்துவ, உளம் சார்ந்த, ஆன்மீக மற்றும் மனிதாபிமான சிகிச்சைகளைப் பெற உரிமையிருக்கிறது என்பதை தன் பிப்ரவரி மாதச் செபக்கருத்தில் வலியுறுத்தும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பேசமுடியா நிலையிலிருப்போர் மற்றும் நம்மை அடையாளம் காணமுடியாதோரின் கைகளைத் தொடும்போது, அவர்கள் நம்மோடு தொடர்புகொள்ள முயல்வதை உணரமுடியும் என  உரைத்துள்ளார்.  

குணப்படுத்தல் என்பது பல வேளைகளில் இயலாத ஒன்றாக இருக்கலாம், ஆனால், அவர்களை ஆறுதலுடன் தடவிக் கொடுத்து அக்கறையெடுத்துக் கொள்வது இயலக்கூடிய ஒன்றே எனவும் தன் ஜெபக்கருத்தில் கூறியுள்ளார் திருத்தந்தை.

எந்த ஒரு நோயாளிக்கும் மருத்துவ உதவிகள் மட்டுமல்ல, மனிதரின் உதவிகளும் நெருக்கமும் இன்றியமையாத தேவை என்பதையும் எடுத்துரைக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நோயாளிகளின் குடும்பங்கள் இத்தகைய வேளைகளில் ஆதரவற்றவர்களாக கைவிடப்படக் கூடாது என மேலும் கூறியுள்ளார்.

நோயாளிகளுக்கு உதவும் வகையில் அவர்களின் குடும்பங்களுக்குத் தேவையானவைகள் கிடைக்க வழிவகைச் செய்யப்பட வேண்டும் என்பதையும் தன் ஜெபக்கருத்தில் விண்ணப்பிக்கும் திருத்தந்தை, இதற்காக நாம் அனைவரும் செபிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 January 2024, 14:59