திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை - தீயொழுக்கம்-சிற்றின்பஆசை
மெரினா ராஜ் – வத்திக்கான்
நல்லொழுக்கம் மற்றும் தீயொழுக்கம் என்னும் தலைப்பில் தனது புதிய தொடர் மறைக்கல்வி உரையை வழங்கி வரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி மாதத்தின் மூன்றாம் வாரமாகிய இப்புதன்கிழமை தியொழுக்கங்களில் ஒன்றான சிற்றின்ப ஆசை என்பது குறித்த தனது கருத்துக்களைத் திருப்பயணிகளுக்கு வழங்கினார். சனவரி 17 புதன்கிழமை தூய வனத்து அந்தோணியார் திருநாளை திருஅவை நினைவுகூரும் வேளையில் வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு சிற்றின்ப ஆசை என்னும் தீயொழுக்கம் பற்றிய தனது கருத்துக்களை திருப்பயணிகளிடம் பகிர்ந்து கொண்டார்.
குளிர்காலத்தின் குளுமையும் இனிய மழைச்சாரலின் இனிமையும் சேர்ந்த சனவரி 17 புதன்கிழமை காலை வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளுக்கு உரையாற்ற வந்த திருத்தந்தை அவர்களை, மக்கள் மிகுந்த ஆர்வத்துடனும் மகிழ்வுடனும் கரவொலி எழுப்பி வரவேற்றனர். புதன் மறைக்கல்வி உரையை வழங்குமிடத்தை வந்தடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிலுவை அடையாளம் வரைந்து கூட்டத்தை ஆரம்பித்தார்.
அதன்பின் திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமடலில் கடவுளுக்கு உகந்த வாழ்க்கை என்னும் தலைப்பின் கீழ் உள்ள இறைவார்த்தைகள் பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் வாசித்தளிக்கப்பட்டன.
1 தெசலோனிக்கர் : 4: 3-5
நீங்கள் தூயோராவதே கடவுளுடைய திருவுளம்; பரத்தைமையை நீங்கள் தவிர்க்க வேண்டும். உங்களில் ஒவ்வொருவரும் தம் மனைவியைத் தூயவராகக் கருதி, மதிப்புடன் நடத்த அறிந்திருக்க வேண்டும். கடவுளை அறியாத பிற இனத்தாரைப் போன்று நீங்கள் கட்டுக்கடங்காப் பாலுணர்வுக்கு இடம் கொடுக்கலாகாது.
இறைவார்த்தைகள் வாசித்தளிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது புதன் மறைக்கல்வி உரையினை தொடங்கினார். திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரைக்கு இப்போது நாம் செவிமடுப்போம்.
அன்பான சகோதர சகோதரிகளே, காலை வணக்கம்!
நல்லொழுக்கங்கள் மற்றும் தீயொழுக்கங்கள் பற்றிய நமது தொடர் மறைக்கல்வி உரையில் கடந்த வாரம் பெருந்தீனி என்பது குறித்து நாம் அறிந்து கொண்டோம். நமது பழங்காலத் தந்தையர்கள், தீயொழுக்கங்களில் பெருந்தீனியை அடுத்து அதன் மிக அருகில் இருப்பது சிற்றின்பம் என்னும் அலகை என்று கூறுகின்றனர். பெருந்தீனி என்பது உணவின் மீதான ஒரு வேட்கையாக இருந்தாலும், சிற்றின்ப ஆசை என்பது அருகில் இருக்கும் மற்றொரு நபரின் மீதான வேட்கையாகக் கருதப்படுகின்றது. பாலியல் உணர்வுகளுடன் ஒருவர் மற்றவரோடு ஏற்படுத்தும் பிணைப்பானது கொடிய விடம் கொண்டதாக மாறுகின்றது.
கிறிஸ்தவத்தில் பாலியல் உணர்வானது கண்டனம் செய்ய்யபடுவது இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். திருவிவிலியத்தின் இனிமைமிகு பாடல்கள் என்ற நூல் அன்புறவு கொண்ட இருவருக்கு இடையே உள்ள அற்புதமான காதல் கவிதை பற்றி எடுத்துரைக்கின்றது. மிக அழகான காதல் மற்றும் அன்புறவின் இத்தகைய பரிமாணம் மனிதகுலத்தின் ஆபத்துக்களிலிருந்து விடுபடவில்லை. எனவே தான் திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமடலில் இவ்வாறு கூறுகின்றார். "உங்களிடையே பரத்தைமை உண்டெனக் கேள்விப்படுகிறேன். ஒருவன் தன் தந்தையின் மறுமனைவியை வைத்துக் கொண்டிருக்கிறானாம். இத்தகைய பரத்தைமை பிற இனத்தாரிடையே கூடக் காணப்படவில்லை". இவ்வாறு ஒரு சில கிறிஸ்தவர்களிடையே நிலவி வந்த சிற்றின்ப உணர்வினைப் பற்றி சாடுகின்றார் தூய பவுல்.
மனித அனுபவத்தை, காதல் உணர்வு பெறும் அனுபவத்தை இங்குள்ள புதிய திருணத் தம்பதிகள் எளிதாக எடுத்துரைக்கலாம். எதற்காக இத்தகைய சிறப்பான காதல் உணர்வு நம்மில் நிகழ்கிறது? மக்களின் வாழ்க்கையில் இது போன்ற ஆச்சர்யம் தரக்கூடிய அனுபவம் ஏன் நிகழ்கின்றது? என்பது நம்மில் யாருக்கும் தெரியாது. ஒருவர், மற்றொருவரை அன்பு செய்வதை வெளிப்படுத்துகின்றார். இருவருக்கும் இடையே அன்புறவு உருவாகின்றது. ஒருவரை ஒருவர் அளவுகடந்து அன்பு செய்கின்றனர். உடன்இருப்பின் மிக ஆச்சரியமான உண்மைகளில் ஒன்றாக இந்த அன்புறவு விளங்குகின்றது. அந்நேரத்தில் வானொலியில் அவர்கள் கேட்கும் பெரும்பாலான பாடல்கள் இதைப் பற்றியதாகவே இருக்கும். இத்தகைய அன்பு ஒளிவிடக்கூடியதாக, தேடப்படக்கூடியதாக, மகிழ்ச்சி நிறைந்ததாக, அல்லது சிலவேளைகளில் கண்ணீர் சிந்தும் அளவிற்கு வேதனை கொண்டதாகவும் இருக்கும்.
தூய அன்பு, தீயொழுக்கங்களினால் மாசுபடுவதில்லை. மாறாக அது தூய்மையான உணர்வுகளில் ஒன்றாகின்றது. காதல் உணர்வு பெறும் நபர், தாராளமனம் உடையவராக மாறுகின்றார். பரிசுப்பொருள்கள் வழங்குவதில் மகிழ்ச்சி அடைகின்றார். கடிதங்கள் மற்றும் கவிதைகளை எழுதி தான் அன்பு செய்யும் நபரை மகிழ்விக்கின்றார். தன்னைப் பற்றி சிந்திப்பதை நிறுத்திவிட்டு தான் அன்பு செய்யும் நபரைப் பற்றி அதிகமாக சிந்திக்கின்றார். காதலிக்கும் நபரிடம் ஏன் காதலிக்கின்றீர்கள் என்று கேட்டால், அவர்களுக்கு காரணம் கூறத்தெரியாது ஏனெனில் எந்த விதமான காரண காரியமும் இன்றி நிபந்தனையற்ற முறையில் அன்பு செய்தலே காதல். அந்த அன்பு மிகவும் வலிமை வாய்ந்தது மட்டுமன்று கொஞ்சம் எளிமையானது. ஒருவர் மற்றவரை வேறுபடுத்தாத, அலட்சியப்படுத்தாத இத்தகைய ஆச்சர்யம் அளிக்கும் உணர்வுகள் கொண்ட அன்பின் தோட்டமானது தீயொழுக்கம் என்னும் நச்சினாலும், சிற்றின்ப வேட்கை என்னும் அலகையினாலும் பாதிக்கப்படுகின்றது. குறிப்பாக வெறுக்கத்தக்க இரண்டு விளைவுகளைத் தருகின்றது.
முதலாவதாக, இது மக்களிடையேயான உறவுகளை அழிக்கிறது என்பதை அன்றாடம் நாம் காணும் தினசரி நிகழ்வுகளே எடுத்துரைக்கின்றன. மிகச் சிறந்த முறையில் தொடங்கிய எத்தனை உறவுகள் பின்னர் நச்சு உறவுகளாகவும், ஒருவர் மற்றவர் மேல் கொள்ளும் அதீத வேட்கையாகவும் மாறுகின்றன. மரியாதை மற்றும் வரம்புகள் இல்லாததாகவும், கற்பு இல்லாத காதல்களாகவும் மாறுகின்றன. கற்பு என்பது ஒரு நல்லொழுக்கம். மற்றொருவருக்கு உரியதை தனக்கென்று ஒருபோதும் வைத்திருக்கக்கூடாது என்ற எண்ணமுடையது. அன்பு செய்தல் என்பது ஒருவர் மற்றவரை மதிப்பது, அவர்களின் மகிழ்ச்சியைத் தேடுவது, அவர்களின் உணர்வுகள் மீதான இரக்கத்தை வளர்த்துக்கொள்வது, நமக்குச் சொந்தமில்லாத உடல், உளவியல் மற்றும் ஆன்மா பற்றிய அறிவில் நம்மை ஈடுபடுத்திக் கொள்வது, ஒருவர் மற்றவரை தாங்கி ஏற்று வாழ்வது. இவை போன்ற அன்புறவின் அழகைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். இத்தகைய அன்புறவு, காதல் என்பது மிக அழகானது. காமம், சிற்றின்பம் என்பது இதற்கு எதிரானது. மேற்கூறிய அனைத்தையும் கேளி செய்கிறது. தனது சொந்த தேவைகளையும் மகிழ்ச்சியையும் மட்டுமே விரும்புகின்ற சிற்றின்ப உணர்வானது மற்றொருவரின் விருப்பத்தையும் மகிழ்வையும் காண விரும்புவதில்லை. மாறாக ஒவ்வொரு காதலையும் சலிப்பூட்டக் கூடியதாகக் கருதுகிறது. பகுத்தறிவு, உந்துதல், உணர்வு ஆகியவற்றுக்கு இடையேயான ஒருங்கிணைப்பையோ புத்திசாலித்தனமாக வழிநடத்துதலையோ, உடன் இருப்பையோ தேடுவதில்லை. மாறாக, குறுக்குவழிகளை மட்டுமே தேடுகின்றது. அன்பின் பாதையில் மெதுவாக பொறுமையாக பயணிக்க வேண்டும் என்பதை அது புரிந்து கொள்ளவில்லை. இந்த பொறுமை தான் சலிப்பிற்கு எதிர்பதமாக அமைந்து காதலிக்கும் நபர்களிடத்தில் அவர்கள் உறவில் மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றது.
இரண்டாவது, காம உணர்வு மனிதனின் அனைத்து இன்பங்களுக்கிடையில், ஒரு சக்திவாய்ந்த குரலைக் கொண்டுள்ளது. அனைத்து புலன்களையும் உள்ளடக்கிய இக்குரலானது உடல் மற்றும் ஆன்மா இரண்டிலும் வாழ்கிறது. பாலியல் இன்பம் என்பது கடவுளின் பரிசு ஆனால், ஆபாசத்தால் அது குறைமதிப்பிற்கு உட்படுத்தப்பட்டது. அடிமைத்தனத்தின் வடிவங்களை உருவாக்கக்கூடிய, திருப்தி இல்லாத உறவாக மாறுகின்றது. இதயத்தின் அன்பு, ஆன்மாவின் அன்பு, உடல் அன்பு என்னும் தூய அன்பினை நாம் பாதுகாக்கவேண்டும். ஒருவருக்கொருவர் நம்மையேக் கொடுப்பதில் அடங்கியுள்ளது தூய அன்பு. அதுவே உண்மை அழகு.
காமத்திற்கு எதிரான போரில் வெற்றி பெறுவது, போரின் பரிசு எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது. ஏனென்றால் ஒருவரையொருவர் உபயோகப்படுத்திக் கொள்ளாமல் வாழும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான அன்பை கற்பனை செய்த கடவுள் தனது படைப்பில் அந்த அழகைக் காப்பாற்றுவதைப் பற்றி குறிப்பிடும் போது ஒருவரை ஒருவர் அன்பு செய்ய வேண்டும் என்று கூறுகின்றார். ஆட்கொள்ளுதல் என்ற அலகையை வணங்குவதை விட மென்மையை வளர்ப்பது சிறந்தது. உண்மையான காதல் தனக்கு மட்டும் என்று ஒருவரை ஆட்கொள்வதில்லை. மாறாக அது பிறருக்குத் தன்னைக் கொடுக்கிறது. பிறரை வென்று ஆட்கொள்வதை விட பணியாற்றுவதே சிறந்தது. ஏனெனில் காதல் இல்லையென்றால் வாழ்க்கை சோகமாகவும் தனிமையாகவும் இருக்கும். நன்றி.
இவ்வாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது மறைக்கல்வி உரையினை நிறைவு செய்ய அதனைத் தொடர்ந்து இராயல் சர்க்கஸ் கலைக்குழுவினர் தங்களது சாகசங்களைத் திருத்தந்தையின் முன் நிகழ்த்தினர். சிறார் இளையோர் என கலைக்குழுவினர் களிப்பூட்டும் செயல்கள் மற்றும் அசைவுகளினால் ஆறாம் பவுல் அரங்கத்தில் கூடியிருந்த திருப்பயணிகள் அனைவரையும் மகிழ்வித்தனர்.
கலைக்குழுவினரின் நிகழ்ச்சிக்குப் பின்பு தனது செப விண்ணப்பங்களை எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், சனவரி 18 வியாழக்கிழமை தொடங்க உள்ள கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம் பற்றி கூறினார். லூக்கா நற்செய்தியின் இறைவார்த்தைகளான, “உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக” என்ற கருப்பொருளில் சிறப்பிக்கப்பட உள்ளதாக எடுத்துரைத்து அனைவருடனும் குறிப்பாக பலவீனமானவர்களிடத்தில் ஒருங்கிணைந்த அன்பின் சாட்சியாக விளங்க செபிக்கும்படிக் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
இத்தாலிய மொழி பேசும் திருப்பயணிகளை வாழ்த்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பெல்லிஸி திருப்பயணிகள், ஃபெடர்காசா குழுவினர், உரோமையில் உள்ள தூய ஒன்பதாம் பியோ நிறுவனத்தார் ஆகியோரை வாழ்த்தினார். இளைஞர்கள், நோயாளிகள், முதியவர்கள் மற்றும் புதுமணத் தம்பதிகளை நினைவுகூர்ந்து வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், துறவறத்தை நிறுவிய தந்தையர்களில் ஒருவரான புனித அந்தோணி அபாத்தே எனப்படும் வனத்து அந்தோணியாரின் நினைவு நாளான இன்று புனிதரின் எடுத்துக்காட்டான வாழ்க்கை நற்செய்தியை நம் வாழ்வில் வரவேற்க ஊக்குவிக்கிறது என்றும் கூறினார்.
போரினால் துன்புறும் மக்களுக்காக செபிக்க மறக்கவேண்டாம், உக்ரைன் பாலஸ்தீனம் இஸ்ரயேல் காசா பகுதியில் வாழும் மக்கள் என போரினால் துன்புறும் மக்கள் அனைவருக்காகவும் செபிப்போம் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், போர் எப்போதும் அழிவையேத் தருகின்றது, அன்பை விதைக்காது, வெறுப்பையே விதைக்கின்றது. உண்மையான மனித தோல்வி போர் எனவே போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக செபிப்போம் என்று கூறினார். இவ்வாறு தனது விண்ணப்பங்களை திருத்தந்தை எடுத்துரைத்ததைத்தொடர்ந்து கூடியிருந்த மக்களுக்கு தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்