திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை - பேராசை என்னும் தீயொழுக்கம்

பேராசை கொண்ட வாழ்க்கை, கஞ்சத்தனம் கொண்ட வாழ்க்கை மிக மோசமானது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

நல்லொழுக்கம் மற்றும் தீயொழுக்கம் என்னும் தலைப்பின் கீழ் தனது தொடர் மறைக்கல்வி உரையினை வழங்கி வரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அதன் தொடர்ச்சியாக பேராசை என்னும் தீயொழுக்கம் குறித்த தனது கருத்துக்களை சனவரி 24 புதன்கிழமை வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு எடுத்துரைத்தார்.

உலகின் பல பகுதிகளிலிருந்தும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைக்கல்வி உரைக்கு செவிசாய்க்க வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் திருப்பயணிகள் கூடியிருந்தனர். அரங்கத்தில் நுழைந்த திருத்தந்தையைக் கரவொலி எழுப்பி திருப்பயணிகள் வரவேற்க, சிலுவை அடையாளம் வரைந்து புதன் மறைக்கல்வி உரையினை துவக்கி வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். அதன் பின் திருத்தூதர் திமோத்தேயு எழுதிய முதல் திருமடலில் உள்ள இறைவார்த்தைகள் பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் வாசித்தளிக்கப்பட்டன.

1திமோத்தேயு 6; 8-10

உணவும் உடையும் நமக்கு இருந்தால் அவற்றில் நாம் மனநிறைவு கொள்வோம். செல்வத்தைச் சேர்க்க விரும்புபவர்கள் சோதனையாகிய கண்ணியில் சிக்கிக் கொள்கிறார்கள்; அறிவீனமான, தீமை விளைவிக்கக்கூடிய பல்வேறு தீய நாட்டங்களில் வீழ்ந்து விடுகிறார்கள். இவை மனிதரைக் கேட்டிலும் அழிவிலும் ஆழ்த்துபவை. பொருள் ஆசையே எல்லாத் தீமைகளுக்கும் ஆணிவேர். அந்த ஆசையால் சிலர் விசுவாசத்தினின்று பிறழ்ந்து திரிந்து பல வேதனைகளைத் தாங்களாகவே தங்கள்மேல் வருவித்துக் கொள்கிறார்கள்.

இறைவார்த்தைகள் வாசித்தளிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நல்லொழுக்கம் மற்றும் தீயொழுக்கம் என்னும் தலைப்பின் தொடர்ச்சியாக பேராசை என்னும் தீயொழுக்கம் பற்றிய தனது கருத்துக்களை எடுத்துரைத்தார். திருத்தந்தையின் மறைக்கல்வி உரைக் கருத்துக்களுக்கு இப்போது நாம் செவிசாய்ப்போம்.

திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை

அன்பான சகோதர சகோதரிகளே, காலை வணக்கம்!

நல்லொழுக்கம் மற்றும் தீயொழுக்கம் குறித்த நமது தொடர் மறைக்கல்வி உரையில் இன்று நாம் பேராசை என்னும் தீயொழுக்கம் பற்றிக் காண்போம். மனிதனை தாராள மனப்பான்மை என்னும் பண்பிலிருந்து தடுக்கும் பணத்தின் மீதான பிணைப்பே பேராசை. இது பெரிய சொத்துக்களை தனக்கென்று வைத்திருப்பவர்களைப் பற்றிய ஒரு பாவம் அல்ல. இது இதயத்தின் நோய். 

பாலைவனத் தந்தையர்கள் இந்த பேராசை என்னும் தீமையைப் பற்றி மேற்கொண்ட ஆய்வுகளில், துறவிகள் தங்களது சொத்துக்கள் அனைத்தையும் துறந்து, தனிமையில் வாழ்ந்த போதும் அவர்கள் வைத்திருந்த சிறிய மதிப்புள்ள பொருட்கள் மீது கொண்டிருந்த பேராசையைப் பற்றி எடுத்துரைக்கின்றனர். அவர்கள் அப்பொருள்களை மற்றவர்களுக்குக் கடனாகவோ, பகிர்ந்து கொடுக்கவோ தயாராக இல்லை. அந்த பொருள்கள்  மீது கொண்டிருந்த விருப்பம் ஒரு வகையான பேராசையாக மாறி அதிலிருந்து அவர்களைப் பிரித்து வைக்க முடியாத அளவிற்கு மாறுகின்றது. பொம்மையை வைத்திருக்கும் குழந்தைகள் அதனை தன்னுடையது என்று சொந்தம் கொண்டாடுவதைப் போன்ற நிலையை அடைகின்றனர். இது நோய்வாய்ப்பட்ட உறவிற்கும், பொருள்களைப் பிறருடன் பகிராமல் பதுக்கி வைப்பதற்கும், அளவுக்கு அதிகமாக சேர்த்து வைப்பதற்கும் வழிவகுக்கின்றது.

இந்த நோயிலிருந்து குணமடைய துறவிகள் கடுமையான பயனுள்ள ஒரு முறையான இறப்பு தியானம் என்பதை கடைபிடித்தனர். ஒரு மனிதன் தன்னுடைய வாழ்நாளில் எவ்வளவுதான் பேராசையுடன் சொத்துக்களைக் குவித்தாலும் அவனது இறப்பிற்குபின் தான் வைக்கப்படும் அடக்கப்பெட்டியில் தன்னோடு அவன் எதையும் எடுத்துச் செல்வதில்லை என்பது உண்மை. பேராசையின் அர்த்தமற்ற தன்மை இங்கு புலப்படுகின்றது. எவ்வளவு தான் நாம் நம்முடைய பொருள்களின் மீது பற்று கொண்டிருந்தாலும் அவை நமக்கு சொந்தமல்ல நாம் உலகின் எஜமானர்கள் அல்லர். எனவே தான் லேவியர் நூலில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. “நிலத்தை அறுதியாய் விற்றுவிட வேண்டாம். ஏனெனில், நிலம் என்னுடையது. நீங்களோ என்னைப் பொறுத்தவரையில் அந்நியரும் இரவற்குடிகளுமே”. (லேவி: 25,23)

இந்த எளிமையான கருத்துக்கள் பேராசையின் அறிவற்றத்தனத்தையும் அதன் மறைவான காரணத்தையும் புரியவைக்கின்றன. பேராசையை நாம் உறுதியாகப் பற்றிக்கொள்ள எண்ணும் நேரத்தில் நாம் நொறுங்கிப் போகும் அளவிற்கு பலவீனமடைகின்றோம் என்பதை மனதில் வைத்துக்கொள்வோம். நற்செய்தியில் குறிப்பிடப்படும் அறிவற்ற செல்வன் உவமையை நினைத்துப் பார்ப்போம். செல்வனாயிருந்த அவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது. அவன், ‘நான் என்ன செய்வேன்? என் விளை பொருள்களைச் சேர்த்து வைக்க இடமில்லையே!’ என்று எண்ணி என் களஞ்சியங்களை இடித்து இன்னும் பெரிதாகக் கட்டுவேன்; அங்கு என் தானியத்தையும் பொருள்களையும் சேர்த்து வைப்பேன் என்று கூறிக்கொண்டான். பின்பு, "என் நெஞ்சமே, உனக்குப் பல்லாண்டுகளுக்கு வேண்டிய பல வகைப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன; நீ ஓய்வெடு; உண்டு குடித்து, மகிழ்ச்சியில் திளைத்திடு" எனச் சொல்வேன்’ என்று தனக்குள் கூறிக்கொண்டான். ஆனால், கடவுள் அவனிடம், ‘அறிவிலியே, இன்றிரவே உன் உயிர் உன்னை விட்டுப் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்?’ என்று கேட்டார்

பல சந்தர்ப்பங்களில், திருடர்கள் தான் இந்த செயலைச் செய்கிறார்கள். நற்செய்திகளில் கூட பல இடங்களில் திருடர்கள் பற்றி எடுத்துரைக்கப்படுகின்றது. எனவே தான்  இயேசுவும் தனது மலைப்பொழிவில் “மண்ணுலகில் உங்களுக்கெனச் செல்வத்தைச் சேமித்து வைக்க வேண்டாம். இங்கே பூச்சியும் துருவும் அழித்துவிடும்; திருடரும் அதைக் கன்னமிட்டுத் திருடுவர். ஆனால், விண்ணுலகில் உங்கள் செல்வத்தைச் சேமித்து வையுங்கள்; அங்கே பூச்சியோ துருவோ அழிப்பதில்லை; திருடரும் கன்னமிட்டுத் திருடுவதில்லை என்றுகூறி எச்சரிக்கின்றார். பாலைவனத்தந்தையர்களின் கதைகளில், துறவி ஒருவர் அறையில் நுழைந்த திருடனின் கதை கூறப்படுகின்றது. அதில் தூங்கிக்கொண்டிருந்த துறவியின் அறையில் நுழைந்து அவரது பொருள்களை எடுத்துச் செல்ல முயன்றான் திருடன். கண்விழித்து திருடனைக் கண்ட துறவி திருடிய பொருள்களை திருப்பித் தா என்று கேட்கவில்லை மாறாக திருடன் எடுக்காமல் விட்டுச்சென்ற மீதம் இருந்த பொருள்களை திருடனிடம் கொடுத்து இதை எடுக்காமல் மறந்து சென்று விட்டாயே என்று கூறினாராம்.

நமக்குச் சொந்தமான பொருட்களுக்கு நாம் எஜமானர்களாக தலைவர்களாக இருக்கலாம், ஆனால் பெரும்பாலும் இவை எதிர்மாறாக அவைகள் நமக்கு எஜமானர்களாக மாறிவிடும் சூழல் உருவாகிவிடுகின்றது. சில பணக்காரர்கள் முழு மனசுதந்திரமாக இருப்பதில்லை. ஓய்வெடுக்க நேரமின்றி தங்களது உடைமைகளை சொத்துக்களை பாதுகாக்கவேண்டும் என்று தங்களது நேரத்தை வீணடிக்கின்றனர். தங்களது உழைப்பால் வியர்வையால் விளைந்த பொருள்களை கண்காணிக்க அதிக பரபரப்புடன் கவலையுடனும் செயல்படுகின்றனர். ஆனால் அவை அனைத்தும் ஒரு நொடியில் மறைந்துவிடக்கூடியது என்பதை அவர்கள் அறிவதில்லை. நற்செய்தியை அறிவிக்க அவர்கள் மறந்து விடுகின்றார்கள். கடவுள் ஏழை அல்ல அவர் எல்லாவற்றிற்கும் ஆண்டவர். எனவே தான் திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய மடலில், நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருள்செயலை அறிந்திருக்கிறீர்களே! அவர் செல்வராயிருந்தும் உங்களுக்காக ஏழையானார். அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு இவ்வாறு செய்தார். (2 கொரி 8:9 என்று குறிப்பிடுகின்றார்.

பேராசை கொண்ட வாழ்க்கை, கஞ்சத்தனம் கொண்ட வாழ்க்கை மிக மோசமானது. எனக்கு தெரிந்த ஒரு நபர் வேறு மறைமாவட்டத்தைச் சார்ந்தவர். வயதானவர் மிகப்பெரிய பணக்காரர். திருமணமான அவரும் அவரைடய் மற்ற சகோதரர்களும் ஒருவர் மாற்றி ஒருவர் தங்களது தாயைக் கவனித்துக் கொண்டனர். தனது தாயிற்கு ஒரு சிறிய அளவு தயிரில் (yogurth) பாதியைக் காலை உணவாகவும் மீதியை மதிய உணவாகவும் கொடுப்பார். பொருள்களின் மீது அவ்வளவு பற்று. யாருக்கும் எதையும் கொடுக்காமல் தனக்கென்று சேர்த்து வைக்கும் குணம். அவரும் ஒரு நாள் இறந்து போனார். அவரது இறப்பிற்கு வந்திருந்த அனைவரும், இறக்கும் போது தன்னுடன் ஒன்றும் இவன் எடுத்துச் செல்லவில்லை என்று கூறி சிரித்தார்கள். மற்றும் சிலரோ, பெட்டியை மூடாதீர்கள் இவன்  சேர்த்து வைத்த பொருளை தன்னோடு எடுத்துச் செல்ல விரும்பினான் என்று கூறி சிரித்தார்கள். இது தான் பேராசையின் விளைவு. நம் உடலையும், ஆன்மாவையும் நாம் இறுதியில் இறைவனுக்குக் கொடுக்க வேண்டும், எல்லாவற்றையும் விட்டுவிட வேண்டும். நாம் கவனமாகவும் தாராளமாகவும் இருக்க முயல்வோம். எல்லாரிடமும் குறிப்பாக மிகவும் தேவையில் இருப்பவர்களிடம் தாராளமாக இருப்போம். அனைவருக்கும் நன்றி.  

இவ்வாறு தனது மறைக்கல்வி உரையினை நிறைவு செய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருகின்ற சனிக்கிழமை, ஜனவரி 27 அன்று ஹோலோகாஸ்டில் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் Holocaust பன்னாட்டு நாள் பற்றி எடுத்துரைத்தார். கடந்த நூற்றாண்டின் முதல் பாதியில் இலட்சக் கணக்கான யூத மக்கள் மற்றும் பிற மதங்களைச் சேர்ந்தவர்கள் அழிக்கப்பட்ட நினைவை மறக்கவோ மறுக்கவோ கூடாது என்பதை இந்த நாள் வலியுறுத்துகின்றது என்றும், மனித நேயத்தை மறுத்து கொடூரமான முறையில் வெறுப்பினால் மக்களை அழித்த வன்முறையை நியாயப்படுத்த முடியாது என்பதை நாம் அனைவரும் மறந்துவிடாமல் இருப்போம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களை நினைவுகூர்ந்த திருத்தந்தை அவர்கள், போரும் மனித நேயத்தை மறுக்கும் ஒரு செயல் என்றும் கூறினார். அமைதிக்காகவும், மோதல்கள் முடிவிற்கு வரவும், துன்புறும் மக்களுக்காக செபிக்கவும் சோர்வடைய வேண்டாம் என்றும்  கேட்டுக்கொண்டார். மத்திய கிழக்கு, பாலஸ்தீன் இஸ்ரயேல், துன்புறும் உக்ரைன் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரையும்  நினைவுகூர்ந்த திருத்தந்தை அவர்கள், பொதுமக்கள் அதிகமாக வாழும் இடங்களில் நடைபெறும் குண்டுவெடிப்பானது, மரணம், அழிவு மற்றும் துன்பங்களை விதைக்கிறது என்றும் கூறினார். பாதிக்கப்பட்டவர்கள், அவர்களை அன்பு செய்யும் மக்கள் அனைவருக்காகவும் தான் செபிப்பதாக எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், அரசுப் பொறுப்பில் உள்ளவர்கள், போர்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதன் வழியாக மனித வாழ்க்கையைப் பாதுகாக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும் போர் எப்போதும் தோல்விதான். ஆயுத உற்பத்தியாளர்களுக்கு மட்டுமே போர் வெற்றியைத் தருகின்றது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும் சனவரி 24 அன்று திருஅவையானது தூய பிரான்சிஸ் தேசேல்ஸ்  நினைவு நாளை சிறப்பிக்கும் வேளையில் ஒவ்வொரு நபரின் வாழ்க்கை நிலை மற்றும் சமூக நிலை எதுவாக இருந்தாலும், கிறிஸ்தவ பரிபூரணத்தை எல்லாரும் அணுக முடியும் என்று கற்பித்தவர் தூய சேல்ஸ் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை. 

இவ்வாறு தன் விண்ணப்பங்களை எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 January 2024, 08:51