புனிதர் நிலைக்கு உயர்த்தப்படும் அருளாளர் மரியா அந்தோனியா!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
அர்ஜென்டினாவின் அருளாளர் மரியா அந்தோனியா பாஸ் ஒய் ஃபிகுரோவா அவர்களை, வத்திகானின் புனித பேதுரு பெருங்கோவிலில் பிப்ரவரி 11-ஆம் தேதி அதாவது, பொதுக்காலத்தின் ஆறாவது ஞாயிற்றுக்கிழமையன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனிதர் நிலைக்கு உயர்த்தவிருக்கிறார் என்று திருத்தந்தையின் திருவழிபாட்டு நிகழ்வுகளுக்கான கால அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அருளாளர் மரியா அந்தோனியா அவர்கள், 18-ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் ஸ்பெயினில் இருந்து இயேசு சபையினர் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து புனித இனிகோவின் பாரம்பரியத்தில் அவரது ஆன்மிகப் பயிற்சிகளின் அடிப்படையில் தியானங்களை ஊக்குவிப்பதில் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை செலவிட்டார். இவர் 2010-ஆம் ஆண்டில் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்களால் ‘வணக்கத்திற்குரியவர்’ என்று அறிவிக்கப்பட்டார், பின்னர் 2016-ஆம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் ‘அருளாளர்’ நிலைக்கு உயர்த்தப்பட்டார்.
ஜனவரி மற்றும் பிப்ரவரி கால அட்டவணை
ஜனவரி 21-ஆம் தேதியன்று, அதாவது, பொதுக்காலத்தின் மூன்றாம் ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இறைவார்த்தை ஞாயிறு திருப்பலியை தலைமையேற்று நடத்துவார் என்று அவரது திருவழிபாட்டு நிகழ்வுகளுக்கான கால அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இந்த இறைவார்த்தை ஞாயிறு கொண்டாட்டத்தை நிறுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இம்மாதம் 25-ஆம் தேதி புனித பவுலடியாரின் மனமாற்றப் பெருவிழாவன்று, கிறிஸ்தவ ஒன்றிப்பு இறைவேண்டல் வாரம் நிறைவடைவதையொட்டி இரண்டாவது திருப்புகழ்மாலை வழிபாட்டை திருத்தந்தை தலைமையேற்று நடத்துவார் என்றும், ‘உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக. உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக’ (லூக் 10:27) என்பது கிறிஸ்தவ ஒன்றிப்பு வார இறைவேண்டலுக்கான மையக்கருத்தாக இருக்கும் என்றும் அவ்வட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி மாதம் 2-ஆம் தேதி, எருசலேம் ஆலயத்தில், ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்த பெருவிழாத் திருப்பலியை வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில் தலைமையேற்று நடத்துவார் என்றும், அன்றைய தினம் அர்ப்பண வாழ்வு வாழ்வோரின் 28-வது உலக நாள் அனுசரிக்கப்படும் வேளை, இப்பெருவிழாத் திருப்பலியில் அர்ப்பண வாழ்வுக்கு அழைக்கப்பட்ட துறவியர் மற்றும் துறவுமடம் சாராத அப்போஸ்தலிக்கக் குழுமங்களும் பங்குபெறுவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இறுதியாக, பிப்ரவரி 14-ஆம் தேதி திருநீற்றுப் புதனன்று மாலை, புனித சபீனா பெருங்கோவிலில் திருத்தந்தை திருப்பலி நிறைவேற்றுவார் என்றும், இவ்வழிபாட்டின் தொடக்கமாக, புனித ஆன்சலேம் கோவிலிலிருந்து புனித சபீனா பேராலயத்தை நோக்கி பவனி புறப்படும் என்றும் அவ்வட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்