இறைவார்த்தை நம் வாழ்வின் மையமாக இருக்கட்டும்
மெரினா ராஜ் - வத்திக்கான்
உயிருள்ள இறைவார்த்தையான இயேசுவிற்கு செவிசாய்க்கவும், மகிழ்வுடன் நமது நம்பிக்கை வாழ்விற்குத் திரும்பவும் இறைவார்த்தை ஞாயிறு உதவட்டும் என்றும், நமது எண்ணங்கள் மற்றும் பிரச்சனைகள் அல்ல மாறாக இறைவனின் வார்த்தை நமது வாழ்வின் மையமாக இருக்கட்டும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சனவரி 21 ஞாயிற்றுக்கிழமை திருஅவையானது இறைவார்த்தை ஞாயிறை சிறப்பித்த நாளன்று, வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றியபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விட்டுவிடுதல், பின்பற்றுதல் என்னும் இரண்டு கருத்துக்களின் அடிப்படையில் தனது மறையுரையை இறைமக்களுக்கு வழங்கினார்.
வல்லமை மிக்க இறைவார்த்தை
கடவுளின் வார்த்தை அதிக வல்லமை மிக்கது, தூய ஆவியின் ஆற்றலை வெளிப்படுத்துகின்றது என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், என் பின்னே வாருங்கள் என்ற இயேசுவின் குரலைக் கேட்ட சீடர்களால் வலைகளை விட்டு அவரைப் பின் தொடர முடிந்தது என்றும், எழுந்திரு நினிவேக்கு போ என்ற வார்த்தை யோனாவை நினிவேக்கு சென்று கடவுளின் வார்த்தையை எடுத்துரைக்கச் செய்தது என்றும் கூறினார்.
இறைவார்த்தை கடவுளை நோக்கி நம்மை ஈர்க்கும் ஆற்றல் பெற்றது, அவரைப் பற்றி பிறருக்கு எடுத்துரைக்க வைக்கின்றது என்றும், அதன் ஆற்றல், நமக்குள் நாமே நம்மை மூடிக்கொள்ளாமல் நமது இதயத்தை விரிவுபடுத்துகிறது, நமது வாழ்வை, பழக்க வழக்கங்களைத் தலைகீழாக மாற்றுகிறது, புதிய காட்சிகளையும், எதிர்பாராத எல்லைகளையும் நமக்காகத் திறக்கிறது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இயேசுவின் முதல் சீடர்களைப் போல, நமது வாழ்வு என்னும் கரையில், படகு என்னும் குடும்பத்தையும், வலைகள் என்னும் உறவுகளையும் விட்டு, அவரின் வார்த்தைக்கு செவிசாய்க்க, இறைவார்த்தை நம்மை அழைக்கின்றது என்றும், ஆழத்திற்கு அவருடன் செல்லவும், மற்றவர்களுக்காகவும் செல்லவும் அழைக்கின்றது என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், இயேசுவால் அழைக்கப்பட்ட நம்மை கடவுளின் தூதர்களாகவும், உலகின் மறைப்பணியாளர்களாகவும் இறைவார்த்தை மாற்றுகின்றது என்றும் கூறினார்.
விட்டுவிடுதல்
சீடர்கள் தங்களது பழைய வாழ்வை, பழக்க வழக்கங்களை விட்டு விட்டு இயேசுவைப் பின்பற்றினர் என்றும், நாம் நமது பழக்க வழக்கங்களை விட்டு வெளியேற முடியாமல் வலையில் சிக்கிய மீன்கள் போன்று போராடிக் கொண்டிருக்கின்றோம் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
இறைவார்த்தையுடன் நம்மை நாம் இணைத்துக் கொள்ளும்போது நமது வாழ்வு மறுபரிசீலனை செய்யப்படுகின்றது, நமது காயப்பட்ட நினைவுகள் குணமடைகின்றன என்றும், இறைவார்த்தை நமக்கு நலமளித்து நற்குணங்களில் நம்மை நிலை நிறுத்தி, மீட்கப்பட்ட கடவுளின் அன்புப் பிள்ளைகள் நாம் என்பதை எடுத்துரைக்கின்றது என்றும் கூறினார்.
இறைவார்த்தை நம் வாழ்க்கையைத் தேன் போல் இனிமையாக்குகின்றது, கடவுளின் இனிமையை சுவைக்கச்செய்கின்றது, ஆன்மாவை வளர்த்து, பயத்தை விரட்டுகின்றது, தனிமையை வெல்கின்றது என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், நமது தேவையற்ற பழக்க வழக்கங்களிலிருந்து நம்மை விடுவித்து நமது நம்பிக்கையைப் புதுப்பித்து இறைவனுடனான நமது அன்பின் கதையை உலகிற்கு எடுத்துரைக்கின்றது என்றும் கூறினார்.
பின்பற்றுதல்
சீடர்கள் இயேசுவைப் பின் தொடர்ந்தனர் அவருடைய வார்த்தையானது கடந்த கால மற்றும் நிகழ்காலத்தின் சுமையிலிருந்து விடுவித்தது என்றும் சீடர்களைப் போல நம்மையும் உண்மை மற்றும் இரக்கத்தில் வளர்க்கின்றது, இதயத்தை உயிர்ப்பிக்கச் செய்கின்றது, தூய்மைப்படுத்துகின்றது என்றும் எடுத்துரைத்தார்.
இறைவார்த்தையை எப்போதும் என்னுடன் நான் கொண்டு செல்கின்றேனா? எனது பையில் அது இருக்கும்படி பார்த்துக் கொள்கின்றேனா? என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள அறிவுறுத்திய திருத்தந்தை அவர்கள் நான்கு நற்செய்திகளில் ஒன்றையாவது முழுமையாக படித்திருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவும் அழைப்பு விடுத்தார்.
"அழகின் தலையூற்றாகிய கடவுளே என்று சீராக்கின் ஞான நூலில் (13.3) குறிப்பிடப்பட்டிருப்பது போல கடவுளின் இந்த உயிர்ப்பிக்கும் இறைவார்த்தையின் அழகு நம் வாழ்வையும் செழிப்பாக்க நம்மையே நாம் கையளிப்போம் என்றும் கூறினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்