ஒளி நிறைந்த மகிழ்ச்சி நம்மிலும் நம்மைச் சுற்றிலும்...

நாம் கிறிஸ்தவர்களாக இருக்கவே இறைவன் நம்மை அழைத்தார்

மெரினா ராஜ் – வத்திக்கான்

அனைவருக்கும் கடவுளின் மீட்பைக் கொண்டுவருதலே இயேசுவின் மகிழ்ச்சி, அவருடைய மறைப்பணியின் அர்த்தம் என்றும், நமது சொல் செயலில் அவருடன் ஒன்றிணைந்து, அன்பை பிறருக்கு வழங்குவதன் வழியாக, ஒளி நிறைந்த மகிழ்வானது நம்மைச்சுற்றி மட்டுமல்லாது நமக்குள்ளும் பெருகுகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை அவர்கள்

சனவரி 21 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய மூவேளை செப உரையின்போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுள் தனது மீட்கும் பணியில் அவரோடு இணைந்து பயணிக்கவே நம்மை அழைத்தார் என்றும் கூறினார்.    

இயேசுவால் அழைக்கப்பட்ட சீடர்கள் அவரது வார்த்தைகளைப் பலவேளைகளில் புரிந்து கொள்ளாமல் இருந்தபோதும், அவர்கள் மீது நம்பிக்கை கொண்டு தனது பணியினை அவர்களுக்கு அளித்தார் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், நாம் பாவிகளாக இருந்தபோதிலும், அவர் நம்மேல் நம்பிக்கைக் கொண்டு அழைத்தார் என்றும் எடுத்துரைத்தார்.

நற்செய்தியை அறிவிப்பது என்பது நேரத்தை வீணடிப்பதல்ல மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருக்க உதவுவதன் வழியாக நாம் மகிழ்ச்சியாக இருப்பது; மற்றவர்கள் சுதந்திரமாக இருக்க உதவுவதன் வழியாக நம்மை நாமே விடுவித்துக் கொள்வது; மற்றவர்களை மேன்மையடையச் செய்வதன் வழியாக நம்மை  நாமே மேன்மைப்படுத்திக் கொள்வது என்றும் கூறினார் திருத்தந்தை.

நாம் கிறிஸ்தவர்களாக இருக்கவே இறைவன் நம்மை அழைத்தார் என்றும், இறைப்பணி செய்ய ஆர்வமின்றி, பொறுப்பற்று, நம்பிக்கையற்று இருக்கும் நபர் உண்மையான கிறிஸ்தவர் அல்லர் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசுவை அறிந்துகொள்ளவும், அவருக்கு சாட்சியாக இருப்பதற்கும் அழைக்கப்பட்ட நாம், நம்மிலும் நம்மைச் சுற்றிலும் மகிழ்ச்சியை வளர்க்கின்றோமா? நமது செபத்தில் அழைத்த இறைவனுக்கு நன்றி கூறுகின்றோமா? நமது மகிழ்ச்சி மற்றும் சான்றுள்ள வாழ்க்கையின் வழியாக பிறரும் இறைவனின் அன்பை சுவைக்க உதவுகின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவும் அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 January 2024, 13:54