அமைதியை ஏற்படுத்துபவர்கள் பேறுபெற்றவர்கள்
மெரினா ராஜ் – வத்திக்கான்
கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பில் வானதூதர்கள் எடுத்துரைத்ததும் கிறிஸ்வின் உயிர்ப்பின் போது எடுத்துரைக்கப்பட்டதும் அமைதி என்ற வார்த்தையே என்றும் அமைதியை ஏற்படுத்துபவர்கள் பேறுபெற்றவர்கள் என்ற முறையில் திருப்பீடத்துடனான உறவிற்கு உதவும் அரசு தூதுவர்கள் அனைவரும் அமைதியைக் கொண்டு வர உழைக்கவேண்டியது அவர்களின் கடமை என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சனவரி 8 திங்கள் கிழமை வத்திக்கானில் திருப்பீட அரசுத்தூதர்களை சந்தித்த போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாண்டில், திருப்பீடத்துடனான உறவின் சிறப்பான ஆண்டுகளை நிறைவு செய்யும் கஜகஸ்தான், பனாமா, ஈரான் குடியரசு, மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளை நினைவுகூர்ந்து வாழ்த்தினார்.
பனாமா குடியரசுடனான திருப்பீட உறவுகளின் நூற்றாண்டு, ஈரான் இஸ்லாமியக் குடியரசுடன் எழுபதாவது ஆண்டு, கொரியா குடியரசுடன் அறுபதாம் ஆண்டு மற்றும் ஆஸ்திரேலியாவுடனான ஐம்பதாம் ஆண்டினை திருஅவை கொண்டாடுகின்றது என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அமைதி இன்றைய காலகட்டத்தில் மிகவும் பலவீனமடைந்து, இழக்கப்பட்டு வரும் சூழலில், பன்னாட்டு சமூகத்தில் இறைவாக்கினர் குரலாகவும், உள்மனத்தூண்டுதலின் நினைவாகவும் அரசுத்தூதர்கள் செயல்படுவது அவர்கள் கடமை என்றும் வலியுறுத்தினார்.
2024 ஆம் ஆண்டில் பல மாநிலங்களில் தேர்தல் நடத்தப்பட உள்ளது என்பதை வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமைதிக்கான பாதை அரசியல் மற்றும் சமூக உரையாடல் வழியாக செல்கிறது என்றும், ஒரு நவீன அரசியல் சமூகவாழ்வின் அடிப்படை என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அனைத்து குடிமக்களும் தங்கள் ஆட்சியாளர்களை பொறுப்புடன் தேர்ந்தெடுக்க உதவும் தேர்தல்கள் ஒரு நாட்டின் வாழ்க்கையில் முக்கியமான மற்றும் அடிப்படையான தருணம் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், குடிமக்கள் மற்றும் அரசு இரண்டிற்கும் இடையிலான தொடர்பின் உறுதியான நல்லிணக்கம் மற்றும் நல்ல பலன்களிலிருந்து, ஒரு ஜனநாயகம் உண்மையிலேயே ஆரோக்கியமானதா, சமநிலையானதா என்பதை அறிய முடியும் என்றும், நாட்டின் வாழ்க்கை மற்றும் வளர்ச்சிக்கான பலம் என்ன என்பதை அடையாளம் காண முடியும் என்றும் கூறினார்.
யூபிலி ஆண்டு தயரிப்புக்கள்
2024 ஆம் ஆண்டு கிறிஸ்து பிறப்புடன் தொடங்க இருக்கும் யூபிலி ஆண்டு குறித்து எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏராளமான திருப்பயணிகளை வரவேற்கவும் ஆன்மிக பலன்களைப் பெறவும், உரோம் நகரத்தை தயார்படுத்துவதில் அதிக ஈடுபாட்டுடன் செயல்படும் இத்தாலிய அரசின் தேசிய மற்றும் உள்ளூர் அதிகாரிகள் அனைவருக்கும் தன் நன்றியினையும் தெரிவித்தார்.
இந்த யூபிலி ஆண்டானது துன்பங்களை எதிர்கொள்பவர்கள், சமூக சூழல்களால் விரக்தி மன நிலையில் இருக்கும் மக்கள், சிறந்த எதிர்காலத்தைக் கனவு காண்பதற்குப் பதிலாக உதவியற்றவர்களாக உணரும் இளையோர் ஆகிய அனைவருக்காகவும் செபிப்பதற்கான ஆண்டு என்றும் கூறினார்.
நாடுகளுடன் திருப்பீட உறவுகள்
1998 செப்டம்பர் 24 அன்று திருப்பீடம் மற்றும் கஜகஸ்தான் அரசுக்கு இடையிலான ஒப்பந்தம் மற்றும் துணை ஒப்பந்தமானது 2023 ஆம் ஆண்டு புதுப்பிக்கக்கட்டது.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் மால்டா என தற்போது திருப்பீடத்துடன் 184 நாடுகள் முழுமையான அரசியல் உறவுகளைப் பேணுகின்றன. உரோமில் அங்கீகாரம் பெற்ற 91 தூதரகப் பணிகள் உள்ளன.
2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 23 அன்று, திருப்பீடமானது ஓமன் சுல்தானகத்துடன் முழுமையான திருப்பீட அரசியல் உறவுகளை நிறுவியது. ஜூலை 19 அன்று, கஜகஸ்தான் குடியரசுக்கும் திருப்பீடத்திற்கும் இடையேயான உறவுகள் தொடர்பான ஒப்பந்தம் மற்றும் துணை ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது.
ஜூலை 27 அன்று வியட்நாம் அரசுடனான அரசியல் உறவுகளுக்கான ஒப்பந்தமும் திருப்பீடம் சார்பில் பணியாற்ற ஒரு பிரதிநிதியும் நியமிக்கப்பட்டது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்