கடவுளுக்கும் மக்களுக்கும் செவிசாய்த்தல் புத்தகம் கடவுளுக்கும் மக்களுக்கும் செவிசாய்த்தல் புத்தகம் 

கடவுளுக்கும் மக்களுக்கும் செவிசாய்த்தல் புத்தகத்திற்கு முன்னுரை

கடவுளால் படைக்கப்பட்ட ஒவ்வொரு ஆணும் பெண்ணும், படைப்புக்கள் ஒவ்வொன்றும் ,கடவுளின் விலையுயர்ந்த பரிசு.

மெரினா ராஜ் - வத்திக்கான்

குடும்பம், தனிப்பட்ட வாழ்வு மற்றும் திருஅவையில் வாழ்வதற்கு அழைக்கப்பட்டுள்ள நாம் ஒவ்வொருவரும் சந்திக்கும் சவால்கள், நற்செய்தியின் விழுமியங்களில் வளர பெற்றுக்கொள்ளும் உற்சாகம் போன்றவற்றிற்கு ஆதாரமாக, கடவுளுக்கும் மக்களுக்கும் செவிசாய்த்தல் என்ற புத்தகத்தில் உள்ள கருத்துக்கள் அமைகின்றன என்று குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிப்ரவரி 12 திங்கள்கிழமை வத்திக்கான் பதிப்பகத்தாரால் (LEV)  வெளியிடப்பட்ட அருளாளர் ENRIQUE ÁNGEL ANGELELLI அவர்களின் மறையுரைகள் அடங்கிய “கடவுளுக்கும் மக்களுக்கும் செவிசாய்த்தல்” (LISTENING TO GOD AND THE PEOPLE) என்னும் புத்தகத்திற்கு எழுதியுள்ள முன்னுரையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அர்ஜெண்டினாவின் La Rioja மறைமாவட்ட ஆயராகப் பணியாற்றி மறைசாட்சியாக இறந்த அருளாளர் ENRIQUE ÁNGEL ANGELELLI அவர்கள் 1968 ஆம் ஆண்டு முதல் 1976 ஆம் ஆண்டு வரை ஆற்றிய மறையுரைகளின் தொகுப்பாக இப்புத்தகம் வெளிவந்துள்ளது.

கடவுளால் படைக்கப்பட்ட ஒவ்வொரு ஆணும் பெண்ணும், படைப்புக்கள் ஒவ்வொன்றும் கடவுளின் விலையுயர்ந்த பரிசு என்றும், ஒற்றுமைக்குத் தடையாக உள்ள முரண்பாடுகளைத் தவிர்த்து, இறைவனோடும் பிறரோடும், நாம் நட்புறவை வளர்த்துக்கொள்ளும்போது, நாம் பிறருக்கு உறுதியான பரிசாக, கொடையாக மாறுகின்றோம் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

எல்லாரும் கடவுளின் கொடை தான் என்றாலும் திருஅவை புனிதர்களிடத்தில் இத்தகைய கொடையைப் பரந்துபட்ட அளவில் காண்கின்றது என்றும், இதன்காரணமாகவே அவர்கள் புனிதர்களாக உயர்த்தப்படுகின்றார்கள், தங்களது முன்மாதிரிகையான வாழ்க்கை, போதனை, நட்புறவு, செபமுறை போன்றவற்றால் நாம் ஒவ்வொருவரும் கடவுளின் பிள்ளைகள் என்பதை அடையாளப்படுத்துகின்றார்கள் என்றும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை.

எளிமையான மேய்ப்பராக, மக்களோடு உடனிருந்து, கிறிஸ்துவோடும் தாய்த்திருஅவையோடும் ஒன்றித்து, சகோதரத்துவத்துடன் வாழ, தனது மறையுரைகளின் வழியாக எடுத்துரைத்தவர் அருளாளர் ENRIQUE என்றும், அனைவரையும் அணுகக்கூடியதாக, அனைவரையும் இலக்காகக் கொண்டதாக அருளாளர் என்ரிக் அவர்களின் மறையுரை இருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.      

சமூக வாழ்க்கையின் உறுதியான சூழ்நிலைகளில் நற்செய்தி என்பது ஒரு யோசனை அல்ல மாறாக நம்பிக்கை என்றும், கிறிஸ்துவில் நம்பிக்கை கொள்வது என்பது நம் இதயங்களில், மனதில் மற்றவர்களையும் நம்மையும் பார்க்கும் மனநிலையை மாற்றுகின்றது என்றும், நற்செய்தி என்பது அன்புடன் நம்மை நாமே பார்க்கவும் பிறரால் பார்க்கப்படவும், பிறரைப் பார்க்கவும் வைக்கின்றது என்றும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 February 2024, 11:19