சமூகமாற்றம் மற்றும் புதுப்பித்தலுக்கு வழிவகுக்கும் கல்வி
மெரினா ராஜ் - வத்திக்கான்
கல்வி என்பது முதலில், நம் முன்னால் இருப்பவர்களுக்கு நம்பிக்கையை வழங்குவது, அவர்களது வாழ்வில் விடியலை உருவாக்குவது, அவர்களது பங்களிப்பினால் சமூக மாற்றத்திற்கும் புதுப்பித்தலுக்கும் வழிவகுப்பது என்றும், கத்தோலிக்கக் கல்வி என்பது அனைத்து நிலைகளிலும் நம்பிக்கையிலிருந்து எழுகின்ற, கலாச்சாரத்தை உருவாக்குகின்ற, தனித்துவமான மற்றும் உண்மையான மனிதமயமாக்கலை உள்ளடக்கியது என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பிப்ரவரி 24 சனிக்கிழமை இஸ்பெயினில் உள்ள Madrid இல் இஸ்பெயின் ஆயர் பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்ட கத்தோலிக்கக் கல்வி மாநாட்டிற்கு அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்து எப்போதும் நம் இல்லங்களில் வாழ்கின்றார், நம் மொழியைப் பேசுகிறார், நம் குடும்பங்கள் மற்றும் நம் மக்களுடன் உடன்நடக்கின்றார் என்றும் கூறியுள்ளார்.
திருஅவையின் கத்தோலிக்கக் கல்வியானது நற்செய்தியிலிருந்து பிறந்த நம்பிக்கையினால் நம்மை இயக்கி, எளியவர்கள் மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களில் இருந்து நம் பணியைத் தொடங்க நம்மை அழைக்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.
கல்வி என்பது முதலில், நம் முன்னால் இருப்பவர்களுக்கு நம்பிக்கையை வழங்குவது, அவர்களது வாழ்வில் விடியலை உருவாக்குவது, அவர்களது பங்களிப்பினால் சமூக மாற்றத்திற்கும் புதுப்பித்தலுக்கும் வழிவகுப்பது என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை அவர்கள், ஒருவரும் ஒதுக்கப்படாமல் நாம் அனைவரும் கல்வி கற்பதற்கான உரிமையைப் பெற்றுள்ளோம் என்றும், போர் மற்றும் வன்முறையினால் எண்ணற்ற குழந்தைகள் மற்றும் இளையோர் கல்வியைப் பெற முடியாத நிலையில் இருக்கின்றனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒருவரையும் ஒதுக்காமல் எல்லாரையும் உள்ளடக்கிய கல்வியை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள திருத்தந்தை அவர்கள், தூக்கி எறியும் கலாச்சாரத்தினால் உருவாகும் செயல்கள் குறித்து கவனமாக இருக்கவேண்டும் என்றும், மக்களிடையே நீதியின் உறவுகளை உருவாக்குதல், தேவையிலிருப்பவர்களுடன் ஒற்றுமை, நமது பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பராமரித்தல் போன்றவை கல்வியறிவு பெற்ற்றவர்களின் இதயங்கள், எண்ணங்கள் மற்றும் கைகளின் வழியாகவே செல்கின்றன என்பதை ஒருபோதும் மறந்துவிட வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
நமது அடையாளத்தையும் நம்பிக்கையையும் மதிப்பீடு செய்யும் வகையில் தொடர்ந்து ஒன்றிணைந்து பயணிக்கவும், சிந்திக்கவும் ஊக்கமூட்டியுள்ள திருத்தந்தை அவர்கள், கல்வி என்பது ஒன்றிணைந்து செய்யப்பட வேண்டிய பணி என்றும், சமூக நட்புறவிற்கான பாதைகள், சந்திப்புக் கலாசாரம் ஆகியவற்றை உள்ளடக்கியது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்