திருத்தந்தையின் மார்ச் மாத செபக் கருத்து!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
உலகின் பல்வேறு பகுதிகளிலும் நற்செய்திக்காகத் தங்கள் இன்னுயிரையும் பணையம் வைப்பவர்கள் அனைவரும், தங்களின் துணிவுமிகு செயல்களாலும் திருத்தூதுப் பணி பேரார்வத்தாலும் திருஅவையைப் பற்றியெரியச் செய்ய நாம் ஒன்றிணைந்து இறைவேண்டல் செய்வோம் எனக் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பிப்ரவரி 27, இச்செவ்வாயன்று, வெளியிட்டுள்ள மார்ச் மாதத்திற்கான தனது செபக் கருத்தில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு நிகழ்வொன்றின் வழியாகத் தனது இறைவேண்டலுக்கான சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.
Lesbos-விலுள்ள புலம்பெயர்ந்தோர் முகாமுக்குத் தான் சென்றபோது ஒருவர் தன்னிடம், “தந்தையே, நான் ஒரு முஸ்லிம். என் மனைவி கிறிஸ்தவர். பயங்கரவாதிகள் எங்கள் இடத்திற்கு வந்து, எங்களைப் பார்த்து எங்கள் மதம் என்ன என்று கேட்டார்கள். அப்போது சிலுவையை கையில் வைத்திருந்த என் மனைவியை அணுகி அதைத் தரையில் வீசி எறியச் சொன்னார்கள். ஆனால் அவள் அதைச் செய்ய மறுத்துவிட்டாள். அதனால், அவர்கள் என் கண் முன்பாகவே அவள் கழுத்தை அறுத்துக்கொன்றனர்" என்று கூறியதாகத் தனது செபக் கருத்தில் தனது வேதனையைப் பகிர்ந்துள்ளார் திருத்தந்தை.
மேலும் அவர் அந்தப் பயங்கரவாதிகள்மீது எவ்வித வெறுப்பும் கொண்டிருக்கவில்லை என்பது தனக்குத் தெரியும் என்று கூறியுள்ள திருத்தந்தை, அவர் தனது மனைவி கொண்டிருந்த கிறிஸ்துவின் முன்மாதிரியான அன்பில் தனது முழுக்கவனத்தையும் செலுத்தினார் என்றும், கிறிஸ்துவின் மீதான அவரின் அன்பு, அவர் தம் மனைவியை ஏற்றுக்கொள்ளவும், மரணம் வரை அவருக்கு உண்மையாக இருக்கவும் வழிவகுத்தது என்றும் உரைத்துள்ளார்.
அன்பான சகோதரர் சகோதரிகளே, நம்மிடையே எப்போதும் மறைச்சாட்சிகள் இருப்பார்கள். நாம் சரியான பாதையில் பயணிக்கிறோம் என்பதற்கான அறிகுறிதான் இது என்று சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை, கிறிஸ்தவத்தின் தொடக்க காலத்தில் இருந்ததை விட இன்று அதிகமான மறைச்சாட்சிகள் இருப்பதாக இந்த உண்மையறிந்த ஒருவர் தன்னிடம் கூறினார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
திருத்தந்தையின் உலகளாவிய செப வலைதள (PWPN) அமைப்பு, இம்மாதத்திற்கான திருத்தந்தையின் செபக் கருத்துக்கள் அடங்கிய காணொளிக் காட்சியை ACN எனப்படும் தேவையில் இருக்கும் திருஅவைக்கு உதவும் பிறரன்பு அமைப்புடன் இணைந்து வெளியிட்டுள்ளது. விசுவாசிகள் எங்குத் துன்புறுத்தப்பட்டாலும், ஒடுக்கப்பட்டாலும் அல்லது தேவை ஏற்பட்டாலும், தகவல், இறைவேண்டல் மற்றும் பல்வேறு பணிகள் வழியாக அவர்களுக்கு உதவுவதே இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாகும்.
அனைத்துலகளவில் ஏறத்தாழ 36 கோடியே 50 இலட்சம் கிறிஸ்தவர்கள் அதிக அளவிலான துன்புறுத்தல் மற்றும் பாகுபாடுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும், இது 2021-ஆம் ஆண்டில் 34 கோடியாக இருந்தது என்றும் தெரிவிக்கும் 2023-ஆம் ஆண்டிற்கான அறிக்கையொன்று, ஆப்பிரிக்காவில் 5 பேரில் ஒருவர், ஆசியாவில் 7 பேரில் ஒருவர், மற்றும் உலகளவில் 7 பேரில் ஒருவர் என்ற விகிதத்தில் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டுள்ளனர் என்றும் கூறுகின்றது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்