இயேசு உயிர்த்துவிட்டார், மகிழ்ச்சியின் குரல் ஒலிக்கட்டும்!

இதுதான் இயேசுவின் பாஸ்கா. கடவுளின் வல்லமையின் வெளிப்பாடு. மரணத்தின் மீதான வாழ்க்கையின் வெற்றி, இருளின்மீதான ஒளியின் வெற்றி, தோல்வியின் இடிபாடுகளுக்கிடையே எழுந்த நம்பிக்கையின் மறுபிறப்பு : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

மார்ச் 31, இச்சனிக்கிழமை இரவு வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் நிகழ்ந்த ஆண்டவரின் உயிர்ப்புப் பெருவிழாத் திருவிழிப்புத் திருப்பலியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிகழ்த்திய மறையுரை.

அன்பான சகோதரர் சகோதரிகளே, உயிர்த்த ஆண்டவரை நோக்கி நம் கண்களை உயர்த்தி, அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமை, நம் ஆன்மாக்களை அழுத்தும் கனமான கற்களை உருட்டி அகற்ற வேண்டுமென மன்றாடுவோம். ஏனென்றால் நம்முடன் இயேசு இருக்கும்போது, எந்தக் கல்லறையும் நம் வாழ்வின் மகிழ்ச்சியை தடைபடுத்த முடியாது.

மாற்கு நற்செய்தியிலிருந்து (காண்க. மாற் 16:1-8) இன்று நாம் வாசித்த, “கல்லறை வாயிலிலிருந்து கல்லை நமக்கு யார் புரட்டுவார்?” என்று அவர்கள் ஒருவரோடு ஒருவர் கேட்டுக் கொண்டார்கள். ஆனால் அவர்கள் நிமிர்ந்து உற்று நோக்கியபொழுது கல் புரட்டப்பட்டிருப்பதைக் கண்டார்கள்” (வச 3-4), என்ற இறைவசனங்களை மையப்படுத்தி எனது மறையுரைச் சிந்தனைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விழைகின்றேன்.

“கல்லறை வாயிலிலிருந்து கல்லை நமக்கு யார் புரட்டுவார்?”

முதலாவதாக, “கல்லறை வாயிலிலிருந்து கல்லை நமக்கு யார் புரட்டுவார்?” என்ற இறைவார்த்தைகள் குறித்துச் சிந்திப்போம். இயேசுவைக் காணச் சென்ற பெண்களின் இந்த வார்த்தைகள் அவர்களின் நம்பிக்கையினை இழக்கச் செய்தது என்றாலும், இயேசுவின் மறைபொருளான இந்த உயிர்ப்பு அவர்களின் நம்பிக்கை கனவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தெளிவற்ற மற்றும் துயரமான நிலையை அழித்தொழித்தது.

இயேசுவின் கல்லறையை மூடியிருந்த பெரியதொரு கல்போன்று, நம் இதயத்தின் கதவுகளை அடைத்து, வாழ்க்கையைத் திணறடித்து, நம்பிக்கையை அணைத்து, நம் பயம் மற்றும் துயரங்களின் கல்லறையில் நம்மைச் சிறைபிடித்து, நம் மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கையை தடைபடுத்தும் கற்களும் நம் வாழ்வில் வரலாம். மேலும் உற்சாகத்தையும் விடாமுயற்சியையும் பறிக்கும் எல்லா அனுபவங்களிலும் சூழ்நிலைகளிலும் நம் வாழ்க்கைப் பயணத்தில் நம்மை சமாதியாக்க நினைக்கும் இதுபோன்ற கற்களை நாம் சந்திக்கலாம்.

நம் வாழ்வின் துயரங்களின்போதும், நம் அன்புக்குரியவர்களின் மரணத்தால் நாம் பெறும் வெறுமை, தோல்விகள் மற்றும் பயங்களின்போதும், நாம் செய்ய நினைக்கும் நல்லதைச் செய்வதிலிருந்து இத்தகைய கற்கள் நம்மைத் தடைசெய்கின்றன என்பதை உணர்வோம்.

தாராள மனப்பான்மை மற்றும் நேர்மையான அன்பிற்கான நமது தூண்டுதல்களைத் தடுக்கும் அனைத்து வகையான சுயநல செயல்பாடுகளிலும், நமது சுயநலம் மற்றும் அலட்சியத்தின் பலமற்ற சுவர்களிலும், நியாயமான மற்றும் மனிதாபிமான நகரங்கள் மற்றும் சமூகங்களை உருவாக்குவதற்கான நமது முயற்சிகளிலும், வெறுப்பு மற்றும் போரின் கொடூரத்தால் சிதைந்த அமைதியை மீட்டெடுக்கும் நமது முயற்சிகளிலும் இத்தகைய கற்கள் நம்மைத் தடைபடுத்துகின்றன என்பதை அறிவோம்.

அவர்கள் நிமிர்ந்து உற்று நோக்கியபொழுது கல் புரட்டப்பட்டிருப்பதைக் கண்டார்கள்

இரண்டாவதாக, ‘அவர்கள் நிமிர்ந்து உற்று நோக்கியபொழுது கல் புரட்டப்பட்டிருப்பதைக் கண்டார்கள்’ என்ற இறைவார்த்தைகள் குறித்துச் சிந்சிப்போம்.

நம்பிக்கையிழந்த அந்த இருளை தங்கள் இதயங்களில் சுமந்த அதே பெண்கள் நமக்கு அசாதாரணமான ஒன்றைச் சொல்கிறார்கள். அதாவது, ‘அவர்கள் நிமிர்ந்து உற்று நோக்கியபொழுது கல் புரட்டப்பட்டிருப்பதைக் கண்டார்கள்’ என்ற வார்த்தைகள், அப்பெண்கள் இழந்திருந்த நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் மீட்டுக்கொடுத்தது என்பதை நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

இதுதான் இயேசுவின் பாஸ்கா, அதாவது, கடவுளின் வல்லமையின்  வெளிப்பாடு, மரணத்தின் மீதான வாழ்க்கையின் வெற்றி, இருளின்மீதான ஒளியின் வெற்றி, தோல்வியின் இடிபாடுகளுக்கு மத்தியில் எழுந்த நம்பிக்கையின் மறுபிறப்பு.

அன்று கல்லறையின் கல்லை புரட்டிப்போட்ட இறைவன், இப்போதும், அவர் நம் கல்லறைகளைத் திறக்கிறார், அதனால் நமது நம்பிக்கை புதிதாகப் பிறக்கும். அப்படியானால், நாமும் அப்பெண்களைப்போன்று நிமிர்ந்தெழுந்து அவரை உற்றுப்பார்க்க வேண்டும்.

இறைத்தந்தையின் வல்லமையால் அவருடைய மற்றும் நம்முடைய உடலில் உயிருடன் எழுப்பப்பட்ட நமதாண்டவர் இயேசு, தூய ஆவியாரின் ஆற்றலால் மனித இனத்தின் வரலாற்றில் ஒரு புதிய பக்கத்தை ஏற்படுத்தினார்.

உயிர்த்த ஆண்டவர் நம்மை இருளிலிருந்து ஒளிக்குக் கொண்டு வருபவர்

இனிமேல், இயேசு நம்மோடு கரம்கோர்க்க நாம் அனுமதித்தால், தோல்வி அல்லது துயரம், அது எவ்வளவு வேதனையாக இருந்தாலும், நம் வாழ்வின் அர்த்தத்தை இழக்கச் செய்ய முடியாது. இனிமேல், உயிர்த்த இயேசுவுடன் இணைந்த நிலையில் நம்மையும் அவருடன் உயிர்த்தெழ நாம் அனுமதித்தால், எந்தப் பின்னடைவும், துயரமும், எந்த மரணமும் வாழ்வின் முழுமையை நோக்கிய நமது முன்னேற்றத்தை தடுத்து நிறுத்த முடியாது.

உயிர்த்த ஆண்டவர் நம்மை இருளிலிருந்து ஒளிக்குக் கொண்டு வருபவர், எப்போதும் நம்முடன் அன்பால் பிணைக்கப்படுபவர், பாவம் மற்றும் மரணத்தின் படுகுழியில் இருந்து நம்மை விடுவித்து, மன்னிப்பு மற்றும் என்றுமுள்ள இறைவனின் ஒளிமயமான வாழ்விற்குள் நம்மை ஈர்ப்பவர். ஆகவே, அவரில் நமது பார்வையைப் பதிப்போம்.

வாழ்வின் கடவுளாகிய இயேசுவை நம் வாழ்வில் வரவேற்போம், இன்று மீண்டும் அவருக்கு "ஆம்" என்று கூறுவோம். அப்போது எந்தக் கல்லும் நம் இதயங்களுக்குச் செல்லும் வழியைத் தடைபடுத்தாது, எந்தக் கல்லறையும் நமது வாழ்க்கையின் மகிழ்ச்சியை அடக்காது, எந்தத் தோல்வியும் நம்மை விரக்தியில் ஆழ்த்தாது.

ஆகவே, அன்புக்குரிய சகோதரர் சகோகதரிகளே, உயிர்த்தெழுந்த இயேசு ஆண்டவரை நோக்கி நம் கண்களை உயர்த்தி, நமது தோல்வியுற்ற நம்பிக்கைகள் மற்றும் நமது மரணங்களின் தெளிவற்ற பின்னணியில், அவர் கொண்டு வர வந்த நிலைவாழ்வு இப்போதும் நம் நடுவில் உள்ளது என்ற நம்பிக்கையில் நாம் தொடர்ந்து உறுதியாக முன்னேறுவோம்.

துயரத்தின் மனிதர் இப்போது சிறை என்னும் கல்லறையில் இல்லை, அவர் அதனை உடைத்தெறிந்து உங்களைச் சந்திக்க விரைகிறார். இருளில், எதிர்பாராத மகிழ்ச்சிக் குரல் ஒலிக்கட்டும்: அவர் உயிருடன் இருக்கிறார்; அவர் உயிர்த்துவிட்டார்.

வெற்றி வீரராய் உயிர்த்தெழுந்த நமது ஆண்டவர் இயேசு, உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 March 2024, 14:10