நல்ல ஆயனாம் இயேசு போல வாழுங்கள் - திருத்தந்தை
மெரினா ராஜ் – வத்திக்கான்
கிறிஸ்துவின் இதய விருப்பத்தின்படி மேய்ப்பர்களாக மாற தங்களையே உருவாக்கிக் கொண்டிருக்கும் அருள்பணித்துவ மாணவர்கள் அனைவரும் ஆன்மிக வாழ்க்கை, கல்வி, குழுவாழ்வு, மேய்ப்புப்பணி என்னும் நான்கு நிலைகளில் வளர வேண்டும் என்றும், இதன் வழியாக நல்ல ஆயனாம் இயேசுவின் பயணத்தில் உறுதியடைய முடியும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஏப்ரல் 20 சனிக்கிழமை வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் இஸ்பெயினைச் சார்ந்த செவிலா அருள்பணித்துவ மாணவர்கள் ஏறக்குறைய 40 பேரைச் சந்தித்தபோது இவ்வாறு எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், நாளைய தினம் திருஅவையில் சிறப்பிக்கப்பட இருக்கும் நல்ல ஆயன் ஞாயிறு பற்றியும் கூறினார்.
கடவுள், உடன் சகோதர சகோதரிகள், குறிப்பாக மிகவும் துன்பப்படுபவர்களுக்கு முழுமையாகப் பணியாற்றுவதற்கும், பெற்றுக்கொண்ட அழைத்தலுக்குப் பதிலளிக்கவும் மேற்கூறிய நான்கு பண்புகளின் ஒருங்கிணைப்பு கட்டாயம் தேவை மற்றும் மிகவும் அவசரமான தேவை என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.
இஸ்பானிய அருளாளர் கர்தினால் Marcelo Spínola y Maestre அவர்கள் பற்றி எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், அவரின் வார்த்தைகளான “நல்லொழுக்கம் மற்றும் அறிவியல் என்னும் இரண்டும் அருள்பணியாளர்களுக்கு முதன்மையாகக் கற்பிக்கப்படவேண்டும் ஏனெனில், நல்லொழுக்கமற்ற அறிவியல் புத்துணர்ச்சி ஊட்டாது, மேம்படுத்தாது. அறிவியலற்ற நல்லொழுக்கம் நம்மை பண்படுத்தாது கற்பிக்காது” என்பதையும் எடுத்துரைத்தார்.
செபம், கல்வி, சகோதரத்துவம், பணி ஆகிய மூன்றும் ஒன்றிணைந்து செல்ல வேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், திறந்த கைகள், புன்னகை, கடவுளை நோக்கிய இதயம் கொண்டு தாங்கள் சந்திக்கும் அனைவரிடத்திலும் நற்செய்தியின் மகிழ்ச்சியைப் பரப்புபவர்களாக வாழ வேண்டும் என்றும் கூறினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்