பாரம்பரிய நகரங்களின் வரலாறுகள் வாழ்க்கைப் பாடங்களாக....
மெரினா ராஜ் - வத்திக்கான்
வரலாற்றுச் சூழ்நிலைகள், அவற்றின் ஒளிகள் மற்றும் நிழல்கள், நிகழ்காலத்தை எடுத்துரைக்கும் ஆண்கள் மற்றும் பெண்களின் வாழ்க்கை, அவர்களின் உண்மையான உணர்வுகள் போன்றவை அருங்காட்சியகப் பொருள்களாக மாறுவதற்கு முன் வாழ்க்கையின் பாடங்களாக மாற வேண்டும் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஏப்ரல் 13 சனிக்கிழமை இஸ்பெயினில் உள்ள மனித பாரம்பரிய நகரங்களின் மேயர்கள் (Ciudades Patrimonio de la Humanidad) ஏறக்குறைய 15 பேரை வத்திக்கானில் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செழுமையான பாரம்பரியத்தை பாதுகாக்கும் காவலர்களான அம்மேயர்கள் அதைக் காக்கும் பொறுப்பை அழகான பணியாகச் செய்கின்றார்கள் என்று வாழ்த்தினார்.
பாரம்பரியத்தின் மீதான நமது ஆர்வத்தை கலை மற்றும் கலாச்சாரத் துறையுடன் நிறைவுபடுத்த முடியாது என்றும், அதனைப் பெறுபவர், அதனை நமக்கு வழங்கியவர்கள் என அனைவரையும் நேர்மையுடன் பார்க்கும் ஒரு பரந்த கண்ணோட்டம் நமக்குத் தேவை என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பாரம்பரிய நகரங்களை காலப்போக்கில் உருவாக்கிய மக்களின் துன்பம், ஏக்கம், கலாச்சாரம், நாகரீகம், கடவுள் மேல் கொண்ட நம்பிக்கை போன்றவை அவர்களின் இதயங்களை உணர்வால் துடிக்கச் செய்கின்றன என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நம்பிக்கை, எதிர்நோக்கு, மக்களின் தொண்டுப்பணிகள் போன்றவற்றின் வழியாக நகரின் அழகை மேம்படுத்த வேண்டும் என்றும், பாரம்பரியச் செழுமை நிறைந்த நகரில் வாழ்பவர்கள், அங்குள்ள நினைவுச்சின்னங்களைப் பார்வையிடுபவர்கள் அனைவரும் ஞானம் மற்றும் வலிமையால் உருவான படைப்பாற்றலில் தங்கள் கவனத்தை செலுத்தட்டும் என்றும் கூறினார்.
திருத்தந்தையின் கருத்துக்கள் அமைப்பாளர்களுக்கு எழுத்து வடிவில் வழங்கப்பட்டன
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்