பாப்பிறை விவிலிப் பணிக்குழுவினருக்கு உரை வழங்கும் திருத்தந்தை பாப்பிறை விவிலிப் பணிக்குழுவினருக்கு உரை வழங்கும் திருத்தந்தை   (VATICAN MEDIA Divisione Foto)

பரிவிரக்கமும் இணைத்தலும் இயேசுவின் அடையாளங்கள்!

பாவி, காணாமல்போனவர், ஒதுக்கப்பட்டவர், இழிவுபடுத்தப்பட்டவர் ஆகியோரைத் தேடிச் சென்று அனைவரையும் ஒன்றிணைத்தவர் இயேசு. அவரைப் பொறுத்தவரை, கடவுளின் மீட்பிலிருந்து யாரும் விலக்கப்படக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார் :திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

துன்பம் மற்றும் நோயின் அனுபவத்தின் வழியாக, திருஅவையாகிய நாம், கிறிஸ்தவ மற்றும் மனித ஒன்றிப்புடன், பொதுவான பலவீனம், உரையாடல் மற்றும் நம்பிக்கைக்கான வாய்ப்புகள் என்ற பெயரில், அனைவருடனும் இணைந்து பயணிக்க அழைக்கப்பட்டுள்ளோம் என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏப்ரல் 11, இவ்வியாழனன்று, பாப்பிறை விவிலிப் பணிக்குழுவினர் 25 பேரை அவர்தம் ஆண்டு நிறையமர்வு கூட்டத்தின்போது திருப்பீடத்தில் சந்தித்தவேளை இவ்வாறு கூறினார் திருத்தந்தை.

திருவிவிலியத்தில் நோய் மற்றும் துன்பம் என்ற கருப்பொருளில் உங்கள் ஆண்டு நிறையமர்வு கூட்டம் நடைபெற்றதில் நான் மிகவும் மகிழ்வடைகிறேன் என்றும், உங்களின் மையக்கருத்து எனது இதயத்திற்கு மிகவும் நெருக்கமானதாக இருக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.

நோயை வெல்லும் உறுதியுடன், நோய்வாய்ப்பட்ட சூழ்நிலைகளில் வாழ்பவர்களைக் கவனித்துக்கொள்ளும்படி இயேசு நமக்கு அறிவுறுத்துகிறார்; அதேவேளை, கனி தரும் விதையாக, நமது துன்பங்களை அவருடைய மீட்பின் காணிக்கையாக இணைக்கும்படி மென்மையாக நம்மை அழைக்கிறார் என்றும் எடுத்துரைத்த திருத்தந்தை, பரிவிரக்கம் மற்றும் இணைத்தல் (compassion and inclusion).என்ற இரண்டு கருத்துக்களின் அடைப்படையில் தனது சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டார்.

பரிவிரக்கம் (compassion)

முதலாவதாக, பரிவிரக்கம் என்பது, அவர் சந்திக்கும் பலவீனமான மற்றும் தேவையுள்ள மக்கள் மீது இறைவனின் தொடர்ச்சியான மற்றும் குணாதிசயமான அணுகுமுறையைக் குறிக்கிறது என்று குறிப்பிட்ட திருத்தந்தை, தங்கள் வாழ்க்கையின் வழியைக் கண்டுபிடிக்க போராடும் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்த மக்களின் முகங்களைப் பார்த்து இயேசு நெகிழ்கிறார் (காண்க. மாற் 6:34) என்றும் விளக்கினார்.

இயேசு துன்பத்தை விளக்கவில்லை, ஆனால் அதனை நோக்கி வளைந்திருக்கிறார் என்றும், அவர் துன்பத்தின் வலியை பொதுவான ஊக்கம் மற்றும் விளைவற்ற ஆறுதலுடன் அணுகவில்லை, ஆனால் அதன் சூழலை வரவேற்கிறார், அது தன்னைத் தொட அனுமதிக்கிறார் என்றும் கூறினார் திருத்தந்தை.

துன்பத்தில் வாழ்வதன் வழியாகவும், துயருறுவதன் வழியாகவும், அதனை அன்பின் கொடையாக வழங்குவதன் வழியாகவும், கிறிஸ்து நம் வலியை தனக்கே உரியதாக மாற்றிக்கொண்டு அதை மாற்றினார் என்று உரைத்த திருத்தந்தை, நம்முடைய துன்பம்  "ஏன்" என்பதற்கு அவர் எளிதான பதில்களைக் கொடுக்கவில்லை, ஆனால் சிலுவையில் நமது துன்பத்தை தனக்குரியதாக மாற்றிக்காட்டி அக்கேள்விக்குப் பதிலளித்தார் (காண்க. மாற்  15:34) என்றும் விளக்கினார்.

இணைத்தல் (inclusion)

இது விவிலிய வார்த்தையாக இல்லாவிட்டாலும், இந்த வார்த்தை இயேசுவின் பாணியின் ஒரு முக்கிய அம்சத்தை நன்கு வெளிப்படுத்துகிறது, அதாவது,  பாவி, காணாமல்போனவர், ஒதுக்கப்பட்டவர், இழிவுபடுத்தப்பட்டவர் ஆகியோரைத் தேடிச் சென்று அவர் அனைவரையும் ஒன்றிணைத்தார் என்று கூறிய திருத்தந்தை, அவரைப் பொறுத்தவரை, கடவுளின் மீட்பிலிருந்து யாரும் விலக்கப்படக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார் (காண்க. மாற் 1:40-42) என்று எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.

இணைப்பது என்ற இந்தக் கண்ணோட்டம் நம்மை பகிர்ந்து கொள்ளும் மனப்பான்மைக்கு இட்டுச் செல்கிறது, அதாவது, மக்கள் மத்தியில் நன்மை செய்து, நோயுற்றவர்களைக் குணப்படுத்திய இயேசு, நோயுற்றவர்களைக் கவனித்து, தனது பெயரில் அவர்களை ஆசீர்வதிக்கும்படி தம் சீடர்களுக்குக் கட்டளையிட்டார் (காண்க மத் 10:8; லூக் 10:9) என்றும், தனது ஆறுதல் பணியை அவர்களுடன் பகிர்ந்து கொண்டார் என்றும் உரைத்தார் திருத்தந்தை.

ஆகவே, துன்பம் மற்றும் நோயின் அனுபவத்தின் வழியாக, திருஅவையாகிய நாம், கிறிஸ்தவ மற்றும் மனித ஒன்றிப்புடன், பொதுவான பலவீனம், உரையாடல் மற்றும் நம்பிக்கைக்கான வாய்ப்புகள் என்ற பெயரில், அனைவருடனும் இணைந்து பயணிக்க அழைக்கப்பட்டுள்ளோம் என்று குறிப்பிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 April 2024, 14:28