வாழ்வின் நிறைவை நமக்குத் தருபவர் இயேசுவே
மெரினா ராஜ் - வத்திக்கான்
வாழ்வின் நிறைவை நமக்குத் தருபவர் இயேசுவே என்பதை உணர நாம் அழைக்கப்படுகின்றோம் என்றும், நம்மைத் தேடும் இயேசுவை நாமும் தேட வேண்டும், அவரைச் சந்திக்க நம்மை அனுமதிக்கவேண்டும், நமது இதயங்களை அவருக்காகத் திறக்கவேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஏப்ரல் 7 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய பாஸ்கா கால மூவேளை செப உரையின்போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிறன்று கொண்டாடப்படும் இறை இரக்க ஞாயிறு பற்றியும் எடுத்துரைத்தார்.
திருத்தந்தை தூய இரண்டாம் ஜான் பால் அவர்களால் இறை இரக்கத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த பாஸ்கா கால இரண்டாம் ஞாயிறானது இயேசுவே இறைமகனாகிய மெசியா என நாம் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே கொண்டாடப்படுகின்றது என்று கூறினார் திருத்தந்தை.
வாழ்வைப் பெறுதல்
வாழ்வைப்பெறுதல் என்றால் என்ன? என்ற கேள்வியுடன் தனது மூவேளை செப உரையைத் தொடங்கிய திருத்தந்தை அவர்கள், உண்ணுதல், குடித்தல், பொழுதுபோக்குதல், பணம் மற்றும் பொருள்களைக் குவித்தல், புதிய மற்றும் உறுதியான உணர்வுகளைக் கொண்டிருத்தல் போன்ற பல வழிகளில் பலர் வாழ்க்கையை வாழ்கின்றனர் என்றும் எடுத்துரைத்தார்.
முதலில் இனிமையாகத் தோன்றும் இந்த பாதைகள் இதயத்திற்கு மகிழ்வைத் தராது என்றும், இப்பாதையில் தொடர்ந்து பயணிக்கும்போது அன்பு, துன்பம், மரணம் போன்றவற்றின் தவிர்க்க முடியாத அனுபவங்கள் பதிலளிக்கப்படாத்தாகவும் அனைவரையும் ஒன்றிணைக்கும் நமது கனவுகள் நிறைவேறப்படாததாகவும் இருக்கும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
என்றென்றும் நம்பிக்கையில் வாழ்வது என்பது, முடிவில்லாத வகையில் அன்பு செய்யப்படுவது என்று கூறிய திருத்தந்தை அவர்கள், இன்றைய நற்செய்தியின் வழியாக நிறைவான வாழ்க்கையைத் தரும் இயேசுவை உணர நாம் அழைக்கப்படுகின்றோம் என்றும், அவரே வாழ்வின் நிறைவு என்றும் கூறினார்.
உயிர்த்த இயேசுவைக் கண்ட சீடர்களின் வாழ்வு
இயேசு இறந்த பின் வீடுகளில் பயந்து முடங்கிக் கிடந்த சீடர்களைக் காண வந்த இயேசு வலி மற்றும் துன்பத்தின் அடையாளமாக இருந்த தனது காயங்களைக் காட்டுகின்றார் அவைகள் மன்னிப்பு மற்றும் இரக்கத்தின் வழிகளாக மாறின என்று கூறிய திருத்தந்தை அவர்கள், தோல்வியைத் தரும் மரணம் மற்றும் பாவத்தை வென்று, வாழ்வைக் கொண்டு வந்தவர் இயேசு என்றும், இதனை சீடர்கள் அவரது காயங்களைத் தங்களது கைகளால் தொட்டு உணர்ந்து கொண்டனர் என்றும் கூறினார்.
உயிர்த்த இயேசுவைக் கண்ட சீடர்கள், தூய ஆவியாரைப் பெற்றுக்கொள்கின்றனர், மகிழ்ச்சி, அன்பு மற்றும் நம்பிக்கையால் நிரப்பப்பட்டவர்களாய் மாறுகின்றனர் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், நம்பிக்கை நம்மிடம் உள்ளதா? நமது நம்பிக்கை எப்படி இருக்கின்றது என்பதைப் பற்றி சிந்திப்போம் என்றும் கூறினார்.
சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த இயேசுவின் மீது நமது பார்வையை நிலைநிறுத்த வேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், அருளடையாளங்கள் மற்றும் செபங்களின் வழியாக அவரைச் சந்திக்கவும், அவரை அடையாளம் காணவும், நம்பிக்கை கொள்ளவும், அவருடைய அருளால் நாம் தொடப்பட்டு வழிநடத்தப்படவும் செபிப்போம் என்றும் கூறினார்.
இயேசுவைப்போல அன்பையும் மகிழ்வையும் வெளிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், இயேசுவுடனான சந்திப்பு உயிருள்ள சந்திப்பாக இருக்கவும், புதிய வாழ்க்கையைப் பெறவும் நமது இதயங்களை அவருக்குத் திறப்போம் என்றும் கூறினார்.
இயேசுவின் உயிர்த்தெழுதலின் வல்லமையை நான் நம்புகிறேனா? இயேசு உயிர்த்தெழுந்தார் என்று நான் நம்புகிறேனா? பாவம், அச்சம் மற்றும் மரணத்தின் மீதான அவரது வெற்றியை நான் நம்புகிறேனா? ஆண்டவரோடு, இயேசுவோடு இணைந்திருக்க நான் என்னை அனுமதிக்கிறேனா? என் சகோதர சகோதரிகளை அன்பு செய்யவும் நம்பிக்கை கொள்ளவும் இயேசுவால் உந்தித்தள்ளப்பட அனுமதிக்கிறேனா? என்று சிந்தித்துப் பார்க்க அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்வாறு தனது மூவேளை செப உரையினை நிறைவு செய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கூடியிருந்த அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்