பாப்பிறை நிறுவன அங்கத்தினர்களுடன் திருத்தந்தை பாப்பிறை நிறுவன அங்கத்தினர்களுடன் திருத்தந்தை  (Vatican Media)

திருஅவை பணிகளில் இணைந்து பணியாற்றும் பாப்பிறை நிறுவனம்

போர்கள் மற்றும் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், ஏழைகளுக்கும், அகதிகளுக்கும், புலம்பெயர்ந்தோருக்கும் பாப்பிறை நிறுவனத்தின் உதவிகள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

திருத்தந்தைக்கும் திருஅவைக்கும் சேவையாற்றும் நோக்கத்துடன் அமெரிக்க ஐக்கிய நாட்டிலிருந்து இயங்கும் பாப்பிறை நிறுவனம் என்ற அமைப்பின் அங்கத்தினர்களை ஏப்ரல் 12 வெள்ளிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உயிர்த்த கிறிஸ்து கொணர்ந்த மகிழ்வைப் பகிர்ந்ததுடன் அவர்களின் சேவைக்கு தன் நன்றியையும் வெளியிட்டார்.

இந்த பாப்பிறை நிறுவனம் துவங்கப்பட்டதிலிருந்து உயிர்ப்புவிழா மகிழ்ச்சியில் படகாகச் செயல்பட்டு, கருணை, கனிவான அன்பு மற்றும் நெருக்கத்தினை உலக மக்கள் அனைவருக்கும் கொணர்ந்து சேவையாற்றிவருகிறது என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  பல கல்வி நிறுவனங்கள், பிறரன்பு அமைப்புக்கள் மற்றும் திருஅவைத் திட்டங்ளுக்கு உதவுவதுடன், இக்காலப் போர்கள் மற்றும் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், ஏழைகளுக்கும், அகதிகளுக்கும், புலம்பெயர்ந்தோருக்கும் இவ்வமைப்பு தொடர்ந்து உதவி வருவதைப் பாராட்டினார்.

இத்தகைய பிறரன்பு உதவிகளை ஆற்றிவரும் அதேவேளை, உரோம் நகரின் பாப்பிறை பல்கலைக்கழகங்களில் படிப்பைத் தொடர்வதற்கு உதவும் வகையில் பொதுநிலையினருக்கும், குருமட மாணவர்களுக்கும், அருள்பணியாளர்களுக்கும் நிதியுதவிகளை ஆற்றிவருவதையும் குறிப்பிட்டுப் பாராட்டிய திருத்தந்தை, இத்தகைய பல்வேறு பிறன்பு உதவிகள் மற்றும் கல்வித் திட்டங்கள் வழி இந்த அமைப்பு திருத்தந்தை மற்றும் திருஅவையின் பணிகளில் இணைந்து செயல்பட்டு வருகின்றது எனப் பாராட்டுதல்களை வெளியிட்டார். 

பாப்பிறை நிறுவனத்தின் பணிகளுக்கு ஆதாரமாகவும் தூண்டுதலாகவும் இருக்கும் கத்தோலிக்க விசுவாசம், தொடர்ந்து திருஅவை வாழ்வில் பங்கேற்பதிலும், திருஅருளடையாளங்களை வரவேற்பதிலும், இறைவேண்டல் மற்றும் ஆராதனையில் நேரத்தை மௌனமாகச் செலவிடுவதிலும் மேலும் பலப்படுத்தப்படுகிறது என்பதை எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

2025 ஜூபிலி ஆண்டிற்கான தயாரிப்பாக இறைவேண்டல் ஆண்டை நாம் சிறப்பித்துவரும் இவ்வேளையில், செபத்தின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்த திருத்தந்தை, பல்வேறு கலாச்சாரங்களிடையே, மொழிகளிடையே, நிலப்பகுதிகளிடையே ஆன்மீக மற்றும் உடன்பிறந்த இணைப்பை உருவாக்கிவரும் பாப்பிறை நிறுவனத்திற்கு தன் நன்றியையும் வெளியிட்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 April 2024, 14:51