அனுப்பப்படுபவர்களிடத்தில் இரக்கமுள்ள தந்தையைப் பிரதிபலியுங்கள்
மெரினா ராஜ் - வத்திக்கான்
வறுமை, கவலை, ஏமாற்றம் கொண்ட இளைஞர்கள், வேலையில்லா திண்டாட்டம், எல்லாவிதமான சமூக நெருக்கடிகள் போன்றவை அதிகமாக இருக்கும் உலகின் பகுதிகளில் பணியாற்றுபவர்கள், யாரிடம் அனுப்பப்படுகின்றார்களோ அவர்களுக்குத் தந்தையர்களாகவும், கடவுளின் அன்பான மற்றும் இரக்கமுள்ள முகத்தைப் பிரதிபலிப்பவர்களாகவும் இருக்கவேண்டும் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஏப்ரல் 22 திங்கள்கிழமை வத்திக்கானின் கொன்சிஸ்தோரோ அறையில் கிறிஸ்தவக் கல்வி நிறுவனத்தாரின் பொதுப் பேரவையில் பங்கேற்கும் பிரதிநிதிகள் ஏறக்குறைய 64 பேரைச் சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
குழந்தைகள் மற்றும் இளையோருக்கு கல்வியின் வழியாக நற்செய்திப் பணியினை இறைஆவியாரின் ஆற்றலால் செய்து கொண்டிருக்கும் அந்நிறுவனத்தாருக்கு தன் நன்றியினைத் தெரிவித்த திருத்தந்தை அவர்கள், அருளாளர் Jean-Marie de La Mennais மற்றும் அருள்தந்தை Gabriel Dashayes அவர்களின் தூண்டுதலை அடிப்படையாகக் கொண்டு உருவான அந்நிறுவனத்தின் இருநூறாவது ஆண்டிற்கான தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
உலகெங்கிலும் பல நாடுகளில் பரந்து விரிந்து பணியாற்றும் இந்நிறுவனமானது அதன் முன்னோர்கள், தங்களை முழுவதுமாக இறைவனிடம் கையளித்து ஒவ்வொரு மனிதரின் ஒருங்கிணைந்த மனிதவளர்ச்சிக்கான பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்பவர்களுக்கு எல்லாம் சாத்தியமாகும் என்பதை எடுத்துரைத்தவர்கள் என்றும் கூறினார் திருத்தந்தை.
நாம் எங்கிருந்து வருகின்றோம் என்பதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது, நம்மை முன்னோக்கிச் செல்ல தூண்டும் நினைவுகளை எப்போதும் மனதில் வைத்திருக்க வேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தாராள மனப்பான்மை கொண்ட இளையோருக்கானச் செயல்களில் தங்களை ஈடுபடுத்துவதன் வழியாக கிறிஸ்துவை நோக்கி தங்களது வாழ்வை உயர்த்துகின்றார்கள் என்றும் கூறினார்.
பாதிக்கப்பட்டவர்கள், காயம்பட்டவர்கள், விளிம்புநிலை மக்கள், வெறுத்து ஒதுக்கப்பட்டவர்கள், போன்றவர்களுக்கானப் பணியினை ஆற்றுபவர்களின் உடனிருப்பானது நம்பிக்கையின் ஊற்றைப் பலருக்கும் வழங்குவதாக இருக்க வேண்டும் என்றும், போர், வன்முறை போன்ற பல காரணங்களால் சிதைந்த கனவுகளைக் கொண்டிருக்கும் குழந்தைகள் மற்றும் இளையோரின் கனவுகளை உயிர்ப்பிக்கவும், நம்பிக்கை கொள்ளவும், நனவாக்கவும் அவர்களுக்கு உதவவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
போரினால் தங்களது புன்னகையை இழந்துள்ள குழந்தைகளுக்கு அவர்களின் புன்னகையை மீட்டுத் தரும் பணியினைச் செய்யுங்கள் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், வீண்பெருமை, மூடிய மனம், பிரிவினை, புறம்பேசுதல் போன்றவற்றிலிருந்து விலகி மறைமாவட்டங்கள் மற்றும் இறைமக்களுடன் இணைந்து பணியாற்றவும் கேட்டுக்கொண்டார்.
புறம்பேசுதல் துறவற வாழ்க்கைக்கு மிகுந்த ஆபத்தை விளைவிக்கக்கூடியது என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள் பிறரைப் பற்றி அவதூறு பேசவேண்டும் என்று மனதில் தோன்றும் நேரத்தில் அவ்வாறு பேசாது தங்கள் நாக்கினைக் கட்டுப்படுத்தவேண்டும் என்றும் கூறினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்