இளகிய மனம் கொண்டவர் நம் அன்னை மரியா!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
உங்கள் மறைமாவட்டம், பங்குத்தளம், இதயம், மனச்சாட்சி, இல்லம், குடும்பம் ஆகியவற்றின் கதவைத் தட்டும் நம் அன்னை மரியாவுக்கு நீங்கள் ஒவ்வொருவரும் பதில்மொழி தரவேண்டும் என்றும், ‘உள்ளே வாருங்கள் அன்னையே!’ என்று அவரை வாயார அழைக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஏப்ரல் மாதம் 27-ஆம் தேதி முதல் மே மாதம் 5-ஆம் தேதி வரை இத்தாலியிலுள்ள டெர்மோலிக்குப் (Termoli) பாத்திமா அன்னையின் திருவுருவம் தாங்கிச்செல்லும் திருப்பயணிகளுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு உரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் இதயக் கதவுகளைத் தட்டும் அன்னை மரியா, மிகவும் மென்மையானவர் மற்றும் கோபம் கொள்ளாது நம்மீது அன்பு காட்டுபவர் என்றும் எடுத்துக்காட்டியுள்ளார்.
நம் அன்னை மரியா நம் இதயக் கதவுகளைத் தட்டும்போது, நாம் விழிப்பாய் இருந்து அவரை வாருங்கள் என்று அன்புடன் வரவேற்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நீங்கள்தான் என் குடும்பம், நான் செய்துள்ள செயல்கள், எனது பிரச்சனைகள் எல்லாவற்றையும் என்னைவிட நீங்கள் நன்றாக அறிந்தவர் என்று நீங்கள் ஒவ்வொருவரும் அவரிடம் கூறுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார்.
அன்னை மரியா இன்று நம்முடன் இருக்கிறார், பலரின் இதயக் கதவுகளை மட்டுமல்ல, என் இதயக் கதவினையும் தட்டும் அவருக்கு நாம் எப்படிப் பதில் தரப்போகிறோம் என்று கேள்வி எழுப்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கவலை வேண்டாம் துணிவுகொள்ளுங்கள், அவரின் மகன் இயேசு நம் பாவங்கள் அனைத்தையும் மன்னித்துவிட்டார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்