தாஜிகிஸ்தான் அரசுத்தலைவருடன் திருத்தந்தை தாஜிகிஸ்தான் அரசுத்தலைவருடன் திருத்தந்தை  (Vatican Media)

திருத்தந்தையுடன் தாஜிகிஸ்தான் நாட்டு அரசுத் தலைவர் சந்திப்பு

உலகில் நிலையான தன்மையையும் அமைதியையும் ஊக்குவிக்கும் நோக்கத்தில் மக்களுக்கும் கலாச்சாரங்களுக்கும் இடையே உரையாடல் இடம்பெறவேண்டும்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

தாஜிகிஸ்தான் நாட்டு அரசுத் தலைவர் Emomali Rahmon அவர்களை ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

1991ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி தனி நாடாக தன்னை அறிவித்த தாஜிகிஸ்தான் நாட்டின் அரசுத்தலைவர் Emomali Rahmon அவர்கள் திருத்தந்தையுடன் மேற்கொண்ட 25 நிமிட உரையாடலின்போது இரு தலைவர்களுக்குமிடையே நினைவுப் பரிசுகளும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

திருத்தந்தையுடனான சந்திப்புக்குப்பின் திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின், திருப்பீட வெளியுறவுத்துறையின் செயலர், பேராயர் பால் ரிச்சர்டு கல்லகர் ஆகியோரையும் சந்தித்து பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டார் தாஜிகிஸ்தான் அரசுத்தலைவர்.

இருதரப்பினரிடையேயான சந்திப்பின்போது, வத்திக்கானுக்கும் தாஜிகிஸ்தான் நாட்டிற்கும் இடையே நிலவிவரும் உறவு குறித்தும், அந்நாட்டின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார நிலைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.

உலகில் நிலையான தன்மையையும் அமைதியையும் ஊக்குவிக்கும் நோக்கத்தில் மக்களுக்கும் கலாச்சாரங்களுக்கும் இடையே உரையாடல் இடம்பெறவேண்டியது குறித்தும் சிறப்பான முறையில் இச்சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டன.

96 விழுக்காட்டு மக்கள் இஸ்லாமிய மதத்தை பின்பற்றும் தாஜிகிஸ்தான் நாட்டில் 90 விழுக்காட்டு நிலப்பரப்பு மலைகளைக் கொண்டுள்ளது.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 April 2024, 14:31