திருத்தந்தை பிரான்சிஸ் அருள்பணியாளர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அருள்பணியாளர்களுடன்  (ANSA)

உரோம் தூய எரிக்கோ பங்குத்தளத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்

உரோமின் வடகிழக்குப் பகுதியைச் சார்ந்த பங்குத்தள அருள்பணியாளர்கள், ரெபிபியா சிறைச்சாலையில் பணிபுரியும் அருள்பணியாளர்கள் என ஏறக்குறைய 35 பேருடன் 30 நிமிடங்கள் உரையாடினார் திருத்தந்தை.

மெரினா ராஜ் - வத்திக்கான்

உரோமின் வடகிழக்குப் பகுதியில் உள்ள தூய எரிக்கோ பங்குத்தளத்திற்கு ஏப்ரல் 5 வெள்ளிக்கிழமை மாலை சென்று அப்பகுதியைச் சார்ந்த ஏறக்குறைய 35 அருள்பணியாளர்களைச் சந்தித்து, இளையோர், யூபிலி ஆண்டு, மேய்ப்புப்பணி, திருஅவையை விட்டு விலகி இருப்பவர்களுடனான உடனிருப்பு ஆகியவை குறித்து உரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உரோம் மறைமாவட்ட ஆயர் என்ற முறையில் அம்மறைமாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று அப்பகுதியின் அருள்பணியாளர்களை ஓரிடத்தில் வரவைத்து சந்தித்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்முறை உரோமின் வடகிழக்கு பகுதியான காசல் மொனாஸ்தேரோ பகுதியில் உள்ள தூய எரிக்கோ பங்குத்தளத்தில் அருள்பணியாளர்களைச் சந்தித்தார்.

அப்பகுதியின் துணை ஆயர் Daniele Salera, பங்குத்தந்தை Massimiliano Memma ஆகியோர் திருத்தந்தையை வரவேற்றனர். உரோமின் வடகிழக்குப் பகுதியைச் சார்ந்த பங்குத்தள அருள்பணியாளர்கள், ரெபிபியா சிறைச்சாலையில் பணிபுரியும் அருள்பணியாளர்கள் என ஏறக்குறைய 35 பேருடன் 30 நிமிடங்கள் உரையாடிய திருத்தந்தை அவர்கள், அப்பகுதியைச் சார்ந்த விசுவாசிகளுக்கு ஆசீரளித்து சாந்தா மார்த்தா இல்லம் திரும்பினார்.

திருத்தந்தையின் இச்சந்திப்பு குறித்து துணை ஆயர் Daniele Salera அவர்கள் கூறுகையில் ரெபிபியா சிறைச்சாலையில் பணிபுரியும் அருள்பணியாளர்கள் பலர் திருத்தந்தையின் மிகவும் அழகான இச்சந்திப்பின்போது தங்களது பணி பற்றியக் கருத்துக்களையும், தங்களது வாழ்க்கைப் பயணத்திற்கான தகுதியைப் புதுப்பித்தல், புதிய வாழ்க்கையை மீண்டும் செயல்படுத்துதல் போன்றவற்றிற்கு சிறைப்பணி வாய்ப்பளித்தது பற்றியும் பகிர்ந்து கொண்டதாகக் கூறினார்.  

எளிய மனம் மற்றும் பொறுமையுள்ளம் கொண்டவர்களாய் சான்றுள்ள வாழ்க்கை வாழும் அருள்பணியாளர்களைக் கொண்ட பங்குத்தளத்தைப் பார்த்து திருத்தந்தை மகிழ்ந்ததாகவும் கூறினார் துணைஆயர் Daniele Salera.

2002 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தவக்காலத்தின் முதல் ஞாயிறன்று திருத்தந்தை தூய இரண்டாம் ஜான் பால் இப்பங்குத்தளத்திற்கு வருகை தந்து “உங்கள் குழுமம் ஓர் இளம் குழுமம்” என்று கூறினார். அவரைத்தொடர்ந்து இரண்டாவது திருத்தந்தையாக இம்முறை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இப்பகுதி அருள்பணியாளர்களைச் சந்தித்தார்.

உரோமின் தென்மேற்குப் பகுதியில் உள்ள சான் ஜார்ஜியோ பங்குதளத்திற்கு 2023ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி மாலையும், நவம்பர் 16ஆம் தேதி உரோம் புறநகர் பகுதியில் உள்ள விருந்தோம்பல் நமதன்னை பங்குதள அருள்பணியாளர்களையும், அப்பங்குத்தளம் வழியாக உதவிகளைப் பெறும் குடும்பங்களையும் சந்தித்து உரையாடினார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 April 2024, 15:17