முதல் உலக குழந்தைகள் நாள் திருஅவை வரலாற்றில் முக்கியமான நாள்
மெரினா ராஜ் - வத்திக்கான்
திருஅவையில் கொண்டாடப்பட இருக்கும் முதல் உலக குழந்தைகள் நாளானது திருஅவையின் வரலாற்றில் மிக முக்கியமான நாள்களாக இருக்கும் என்றும், தந்தைக்குரிய அன்பு மற்றும் கவனிப்போடு மே 25-26 ஆகிய நாள்களை முதல் உலக குழந்தைகள் நாளாகக் கொண்டாட அர்ப்பணித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு நன்றி என்றும் கூறினார் அருள்பணி என்சோ ஃபொர்த்துனோ.
ஏப்ரல் 14 ஞாயிற்றுக்கிழமை மூவேளை செப உரையின் இறுதியில் திருத்தந்தை அவர்கள், முதல் உலக குழந்தைகள் நாளைக் கொண்டாட உலகெங்கிலும் இருந்து வந்திருக்கும் சிறாரை வாழ்த்தியதைக் குறித்து, செய்தியாளர்களுக்கு இவ்வாறு தனது கருத்துக்களை தெரிவித்தார் முதல் உலக குழந்தைகள் நாளுக்கான ஒருங்கிணைப்பாளர் அருள்பணி என்சோ ஃபொர்த்துனோ.
குழந்தைகளே நான் உங்களுக்காகக் காத்திருக்கிறேன் என்ற முதல் உலக குழந்தைகள் நாளுக்கான திருத்தந்தையின் அழைப்பானது திருஅவையின் வரலாற்றில் மிக முக்கியமான நாளாக இருக்கும் என்ற உணர்வைத் தருகின்றது என்றும் கூறினார் அருள்பணி ஃபொர்த்துனோ.
திருத்தந்தையின் ஞாயிறு மூவேளை செப உரையின்போது, போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் உட்பட பல பகுதிகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட சிறார் பங்கேற்றனர் என்று கூறிய அருள்பணி ஃபொர்த்துனோ அவர்கள், மே மாத நிகழ்வில் பங்கேற்பதற்காக பல இலட்சம் குழந்தைகள் உலகெங்கிலும் இருந்து முன்பதிவு செய்துள்ளனர் என்றும், 80 பகுதிகளிலிருந்து வரும் இலட்சக் கணக்கான குழந்தைகள் தூய பேதுரு வளாகம் மற்றும் ஒலிம்பிக் அரங்கத்தை வண்ணமயமாக்க இருக்கின்றார்கள் என்றும் எடுத்துரைத்தார்.
மேலும் மூவேளை செப உரையின் போது, தொடர்ந்து அமைதிக்காக தனது விண்ணப்பங்களைத் துணிவுடன் எடுத்துரைத்துக் கொண்டிருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வேண்டுகோள்களுக்கு உலகின் தலைவர்கள் செவிசாய்க்க வேண்டும் என்றும் கூறினார் அருள்பணி ஃபொர்த்துனோ.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்