சீரோ மலபார் கத்தோலிக்க வழிபாட்டு முறை உறுப்பினர்களைத் திருப்பீடத்தில் சந்திக்கும் திருத்தந்தை சீரோ மலபார் கத்தோலிக்க வழிபாட்டு முறை உறுப்பினர்களைத் திருப்பீடத்தில் சந்திக்கும் திருத்தந்தை   (VATICAN MEDIA Divisione Foto)

புனித தோமாவைப்போல இயேசுவின் காயங்களை உற்றுநோக்குவோம்!

சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த இயேசுவை நாம் ஒன்றாகப் பார்க்கிறோம், அவர் நம்மை அன்புகூர்கிறார், நம்மை ஒன்றுபடுத்துகிறார், ஒரே பலிபீடத்தைச் சுற்றி ஒரே குடும்பமாக ஒன்றிணைக்க விரும்புகிறார் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

திருத்தூதர் தோமாவைப் போலவே, இயேசுவின் காயங்களை உற்றுநோக்குவோம் என்றும், பசி, தாகம் மற்றும் நிராகரிக்கப்பட்ட, சிறைகள், மருத்துவமனைகள் மற்றும் தெருக்களில் இருப்பவர்களின் உடல்களில் அவை இன்றும் காணப்படுகின்றன என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மே 13, திங்களன்று, சீரோ மலபார் கத்தோலிக்க வழிபாட்டு முறையின் உரோமைவாழ் உறுப்பினர்களைத் திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாறு கூறியதுடன் அவர்கள் ஒன்றித்து வாழ வேண்டியதன் அவசியத்தையும் தனது உரையில் வலியுறுத்தினார்.

சிரமம் மற்றும் நெருக்கடியின் தருணங்களில், மனச்சோர்வினால் அல்லது பிரச்சனைகளை எதிர்கொள்ளும் இயலாமை உணர்வால் கடந்து செல்லவேண்டாம் என்பதையே தான் அவர்களுக்குச் சொல்ல விரும்புவதாகவும் குறிப்பிட்டார் திருத்தந்தை.

நமது நம்பிக்கை அணைந்துவிடாமல், பொறுமையைக் காப்பதில் சோர்வடைந்துவிடாமல், அல்லது விரோதங்களைத் தூண்டும் தப்பெண்ணங்களுக்கு நாம் அடிமைப்பட்டுவிடாமல் இருப்போம் என்றும் அவர்களைக் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

ஒரு காரியத்தில் முடிவெடுக்கும் போது, ​​ஏழைகள் மற்றும் பிரிந்தவர்கள், இந்தியா மற்றும் புலம்பெயர்ந்தோர் மற்றும் இருத்தலியல் நெருக்கடியில் இருப்பவர்களைப் பற்றி சிந்திப்போம் என்று வலியுறுத்திய திருத்தந்தை, நம்பிக்கை மற்றும் ஆறுதலின் அடையாளங்களுக்காக துன்பப்படுபவர்களையும், காத்திருப்பவர்களையும் கவனத்தில் கொள்வோம் என்றும் விண்ணப்பித்தார்.

பல்வேறு இடங்களிலுள்ள கிறிஸ்தவர்களின் வாழ்க்கை கடினமாக இருப்பதை நான் அறிவேன், ஆனால் இதில் வித்தியாசம் என்னவென்றால், கிறிஸ்தவர்களாகிய நாம் தீமைக்கு நன்மையுடன் பதிலளிக்கிறோம் என்றும்,   மனிதகுலத்தின் நன்மைக்காக அனைத்து விசுவாசிகளுடன் அயராது உழைக்கிறோம் என்றும் குறிப்பிட்டார் திருத்தந்தை.

திருத்தூதர் புனித தோமையைப் போலவே, இயேசுவின் காயங்களை உற்றுநோக்குகிறோம். அது சீடர்களை திகைக்க வைத்தது மட்டுமன்றி, நம்பிக்கையற்ற குற்ற உணர்ச்சியில் அவர்களைத் தள்ளியது, ஆனால் அதேவேளையில், அந்த காயங்களில் இருந்துதான் இறைவன் மன்னிப்பு மற்றும் இரக்கத்தின் வழிகளை உருவாக்கினார் என்றும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.

கேரளாவில் மட்டுமின்றி, இந்தியா முழுவதிலும், உலகம் முழுவதிலும் உங்கள் வழிபாட்டு முறை திருஅவைக்குள்  ஒன்றிப்பிற்காக  ஒரு சிறப்பு வழியில் இறைவேண்டல் செய்யவும், ஒத்துழைக்கவும் நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 May 2024, 14:11