குடும்பங்களுக்காக பணியாற்றும் அன்னை மரியா இயக்கம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
எக்கிப் நோட்ர டாம் (Équipes Notre-Dame) என்ற அன்னை மரியா பெயரிலான இயக்கத்தின் உயர்மட்ட அங்கத்தினர்களை மே மாதம் 4ஆம் தேதி சனிக்கிழமை, திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குடும்பங்களின் நல்வாழ்வுக்காக அர்ப்பணத்துடன் பணியாற்றும் அவர்களுக்குத் தன் நன்றியை வெளியிட்டார்.
உலகம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான குழுமங்களைக் கொண்டு குடும்பங்கள் திருமணத்தை இறைவனின் ஒரு கொடையாக நோக்கி வாழ இவ்வியக்கம் உதவிவருவதைக் குறித்து மகிழ்ச்சியை வெளியிட்ட திருத்தந்தை, பல்வேறு முனைகளில் இருந்து அச்சுறுத்தல்களை எதிர்நோக்கியிருக்கும் உலக குடும்பங்களுக்கு இத்தகைய இயக்கங்களின் ஆதரவு இன்றியமையாத ஒன்று என்பதையும் சுட்டிக்காட்டினார்.
திருமணமான தம்பதியர் தங்களின் துன்பகர வேளைகளில் தனிமையை உணர்ந்து சோர்ந்து போகாமல் இருக்க உதவுவதன் வழி நாம் ஒரு குடும்பத்தையேக் காப்பாற்றுகிறோம் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருமணத்தைக் காப்பதன் வழி தம்பதியருக்கு இடையேயும், பெற்றோருடனும், குழந்தைகளுடனும் தாத்தா பாட்டிகளுடனும் பேரக்குழந்தைகளுடனும் குடும்பத்தில் உள்ள உறவைக் காப்பாற்றுகிறோம் எனத் தெரிவித்தார்.
கிறிஸ்தவ மணவாழ்வு என்பது இறைவனின் அழைப்பு என்பதை இளையோர் புரிந்துகொள்ள நாம் உதவவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார் திருத்தந்தை.
திருமணம் என்பதில் தம்பதியரிடையே கிறிஸ்து பிரசன்னமாயிருப்பது என்பது அந்த திருமண பந்தம் எளிமையான முறையில் பயணம் செய்வதற்கு உதவுகிறது என்ற திருத்தந்தை, தம்பதியரிடையே ஒருவர் ஒருவரை உற்றுநோக்குவதும், தம்பதியர் ஒன்றிணைந்து கிறிஸ்துவை உற்றுநோக்குவதும் இப்பயணத்தில் முக்கியமானவை என்றார்.
திருமணம் புரிந்த காலத்திலிருந்தே தம்பதியர் ஒன்றிணைந்து செபிக்கத் துவங்குவது இன்றியமையாதது என்பதை எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த விடயத்தில் அருள்பணியாளர்களுடன் இணைந்து எக்கிப் நோட்ர டாம் என்ற அன்னை மரியா பெயரிலான இயக்கத்தின் பணிகள் பாராட்டுக்குரியவை என்றார்.
தனிமையையும், துயர்களை பகிர ஆளின்மையையும், வாழ்வில் நம்பிக்கையின்மையையும் கொண்டு வாழும் தம்பதியர்களை தேடிச் சென்று தொடர்ந்து பணியாற்றுமாறு அவ்வியக்கத்திற்குத் தன் நன்றிகளையும் ஊக்கத்தையும் வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்