திருப்பீட மறைத்தளப்பணி அமைப்பின் அதிகாரிகளுடன் திருத்தந்தை திருப்பீட மறைத்தளப்பணி அமைப்பின் அதிகாரிகளுடன் திருத்தந்தை  (Vatican Media)

மறைப்பணி நோக்கிய மனமாற்றம் ஒவ்வொருவருக்கும் தேவை

இயேசுவுடன் ஆன ஒன்றிப்பு என்பது சோர்வடையாத ஒரு படைப்பாற்றலை நமக்கு வழங்கி நற்செய்தியை அறிவிக்கும் புதிய வழிகளைக் கற்றுத் தருகிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

நற்செய்திக்கான ஒன்றிப்பு உணர்வுடனும், படைப்பாற்றலுடனும், விடாமுயற்சியுடனும் மறைப்பணிகளை ஏற்று நடத்துமாறு PMS எனப்படும் திருப்பீட மறைத்தளப்பணி அமைப்பின் அங்கத்தினர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசுவுடன் ஆன ஒன்றிப்பு என்பது சோர்வடையாத ஒரு படைப்பாற்றலை நமக்கு வழங்கி நற்செய்தியை அறிவிக்கும் புதிய வழிகளையும், ஏழைகளுக்குப் பணிபுரியும் மனநிலையையும் வழங்குகிறது என கூறிய திருத்தந்தை, ஒன்றிப்பு உணர்வு, படைப்பாற்றல், விடாமுயற்சி என்ற மூன்று தலைப்புகளில் தன் உரையை வழங்கினார். ஒன்றிப்பு உணர்வு, அதாவது ஆன்மிக கூட்டுறவு என்பது இறை அன்பின் அடிப்படை அனுபவத்தை பிறர் நம்மில் கண்டுகொள்வதாகும், எனெனில், இறையன்பிற்கு நாம் சான்றுகளாக மிளிரவேண்டும் என்பதை வலியுறுத்தினார் திருத்தந்தை.

மறைப்பணியாற்றுவது என்பது பிறரை திருமறைக்கு மனம் திருப்புவதைக் குறிப்பிடாது என்பதையும் தெளிவுபடுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மறைப்பணியில் ஒன்றிணைந்து ஆன்மிகக் கூட்டுறவில் செயலாற்றுவதே இங்கு முக்கியம் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

மறைப்பணி நோக்கிய மனமாற்றம் நம் ஒவ்வொருவருக்கும் தேவை என்பதால் ஆன்மிக பயிற்சிமுறைகளின் அவசியம் குறித்தும் எடுத்துரைத்து, ஒன்றிணைந்து நடத்தல், ஒருவர் ஒருவருக்கு செவி மடுத்தல், ஒருவர் ஒருவரோடு உரையாடுதல் போன்றவைகளையும் வழிமுறைகளாகக் காட்டினார்.

மறைப்பணிகளில் படைப்பாற்றலுடன் செயல்படுவதற்கான சுதந்திரத்தையும் கைவிட்டு விடாதீர்கள் என்ற திருத்தந்தை, அனைத்துப் படைப்பாற்றலின் ஆதாரமாக இயேசுவின் பிறரன்பு இருக்கட்டும் எனவும் கேட்டுக்கொண்டார். 

இறுதியாக, விடாமுயற்சியுடன் தொடர்ந்து மனத்தளர்வின்றி செயல்படுதல் பற்றிக் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக காங்கோ குடியரசில் அண்மையில் கொல்லப்பட்ட விசுவாசிகள் குறித்தும், இஸ்லாம் மதத்திற்கு மாற மறுத்த 21 கிறிஸ்தவர்கள் லிபிய கடற்கரையில் 5 ஆண்டுகளுக்கு முன்னர் கழுத்து அறுக்கப்பட்டு கொல்லப்பட்டது குறித்தும் எடுத்துரைத்து, மறைப்பணிகளில் உறுதியுடன் மனந்தளராமல் செயல்படவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 May 2024, 15:58