103-வது கத்தோலிக்கத் தின நிகழ்வில் பங்கேற்கும் விசுவாசிகள் 103-வது கத்தோலிக்கத் தின நிகழ்வில் பங்கேற்கும் விசுவாசிகள்   (ANSA)

இறைவேண்டல் மற்றும் உரையாடல் வழி, அமைதிக்காக உழைத்திடுங்கள்!

இன்று பலர், குறிப்பாக, இளையோர், உலகில் எதோ தவறு நடப்பதாக உணர்ந்து அதன் திசையில் மாற்றத்தை விரும்புகின்றனர் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

மனிதர் படைப்பை படைப்பாளரின் நோக்கத்தின்படி பயன்படுத்துவதில்லை, ஆனால் அதிகாரம் மற்றும் ஆதாயத்திற்கான தனது சுயநல இலட்சியங்களுக்காக அதை முறைகேடு செய்து தவறாக நடத்துகிறார் என்றும் அதனால்தான் துன்பமும் மரணமும் இவ்வுலகிற்கு வந்தன என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மத்திய ஜெர்மன் மாநிலமான துரிங்கியாவின் தலைநகரமான எர்ஃபர்ட் நகரில், மே 29, இப்புதன் மாலை தொடங்கியுள்ள 103-வது கத்தோலிக்கத் தின நிகழ்வில் பங்கேற்கும் விசுவாசிகளுக்கு அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார் திருத்தந்தை.

இயேசுவின் மலைப் பொழிவில் காணப்படுவது போல், நம்பிக்கையை அளிப்பதன் வழியாகவும், அநீதியை அகற்றுவதன் வழியாகவும், மனித விழுமியங்களை அடிக்கடி  நிலைநிறுத்துவதன் வழியாகவும், அமைதியை இயேசு கொண்டுவந்தார் என்று  உரைத்துள்ளார் திருத்தந்தை.

மேலும் அன்பு மற்றும் பக்தியிலிருந்து பிறந்த அவரது அமைதி, சிலுவை மற்றும் அவரது உயிர்த்தெழுதலால் எடுத்துக்காட்டப்படுகிறது என்றும், இது 'அமைதியின் மனிதருக்கு எதிர்காலம் உள்ளது' என்பதை அடையாளப்படுத்துகிறது என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை.

ஆகவே, ஒடுக்கப்பட்டவர்களுக்கு உதவுவதன் வழியாகவும், அவர்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்த பொது வாழ்க்கையில் ஈடுபடுவதன் வழியாகவும், செவிசாய்க்கப்படாதவர்களுக்கு குரல் கொடுப்பதன் வழியாகவும், இயேசுவின் பணியைத் தொடர கிறிஸ்தவர்கள் அழைக்கப்படுகிறார்கள் என்று விளக்கியுள்ள திருத்தந்தை, நீதி இல்லாமல் அமைதி இருக்க முடியாது என்றும் எடுத்துக்காட்டியுள்ளார்.

இயற்கையின் மீதான அக்கறை, ஏழைகளுக்கான நீதி, சமூகத்தின் மீதான அர்ப்பணிப்பு, வாழ்க்கை மற்றும் குடும்பத்தின்மீதான பாதுகாப்பு, ஒவ்வொரு மனித வாழ்வின் மாண்பைப் பாதுகாத்தல் மற்றும் அக மற்றும் புற அமைதி ஆகியவை ஒன்றோடொன்று கரம்கோர்த்துச் செல்கின்றன என்பதையும் தனது செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை.

‘அமைதியின் மனிதருக்கு எதிர்காலம் உள்ளது' என்ற கருப்பொருளில் நடைபெறும் இவ்விழா 5 நாள்களுக்குக் கொண்டாடப்படுகிறது. ஜெர்மனியில் 1848-ஆம் ஆண்டிலிருந்து நடத்தப்படும் இவ்விழா ஒரு தனித்துவமான பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 May 2024, 13:53