லக்சம்பர்க் மற்றும் பெல்ஜியத்திற்குத் திருத்தந்தையின் திருப்பயணம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாண்டு செப்டம்பர் மாத இறுதியில் லக்சம்பர்க் மற்றும் பெல்ஜியத்திற்குத் திருப்பயணம் மேற்கொள்கிறார் என்று மே 20, இத்திங்களன்று, அறிவித்தது திருப்பீடச் செய்தித் தொடர்பகம்.
இரு நாடுகளின் அரசுத் தலைவர்கள் மற்றும் தலத்திருஅவைகளின் அதிகாரிகளின் அழைப்பை ஏற்று, செப்டம்பர் 26-ஆம் தேதி லக்சம்பர்க்கிற்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பயணம் மேற்கொள்கிறார் என்று மேலும் உரைக்கிறது திருப்பீடச் செய்தித் தொடர்பகம்.
பின்னர் அவர் பெல்ஜியத்திற்குச் சென்று செப்டம்பர் 29 வரை அங்கு இருப்பார் என்றும், அங்கு Brussels, Leuven மற்றும் Louvain-la-Neuve நகரங்களுக்குச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளார் என்றும் உரைக்கும் அச்செய்திக் குறிப்பு, திருத்தந்தையின் முழுப்பயணத் திட்ட விபரங்களும் பின்னர் வெளியிடப்படும் என்றும் கூறுகிறது.
அதற்கு முன்னதாக செப்டம்பர் மாதம், 2-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தோனேசியா, பப்புவா நியூ கினியா, கிழக்கு திமோர் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்கிறார் என்றும், இது அவரது நீண்ட பயணமாக இருக்கும் என்றும் தெரிவிக்கிறது அதன் செய்திக் குறிப்பு.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்