இலயோலா பல்கலைக்கழகத்தின் அறங்காவலர் குழு உறுப்பினர்களைத் திருப்பீடத்தில் சந்திக்கும் திருத்தந்தை இலயோலா பல்கலைக்கழகத்தின் அறங்காவலர் குழு உறுப்பினர்களைத் திருப்பீடத்தில் சந்திக்கும் திருத்தந்தை   (Vatican Media)

புனித இனிகோவின் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லுங்கள்!

புனித இனிகோவின் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் உங்கள் அறிவார்ந்த ஆர்வத்தையும், ஒத்துழைக்கும் உணர்வையும், சமகால சவால்களுக்குப் பதிலளிக்கும் உங்களின் உணர்திறனையும் வளர்த்துக் கொள்ள நான் உங்களை ஊக்குவிக்கிறேன் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கல்வி என்பது அறிவைப் பரப்புவது மட்டுமல்ல, மாணவர்களுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு கண்ணோட்டத்திலும் நல்லிணக்கம் மற்றும் நீதியின் மதிப்புகளை உள்ளடக்கிய மக்களை உருவாக்கும் அர்ப்பணிப்பு மற்றும் முறையாகும் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்

மே 20, இத்திங்களன்று, சிக்காகோ இலயோலா பல்கலைக்கழகத்தின் அறங்காவலர் குழு உறுப்பினர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு தெரிவித்த திருத்தந்தை, இப்பல்கலைக் கழகம் தெளிந்து தேர்தல் மற்றும் செயல்பாட்டின் அடிப்படையில் இயேசு சபையின் பாரம்பரியத்தால் ஈர்க்கப்பட்ட ஒன்று என்பதையும் சுட்டிக்காட்டினார்.

நீங்கள் முன்னோக்கிச் செல்ல, எப்போதும் உங்கள் வேர்களுக்குத் (roots) திரும்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை, இந்த வேர்கள் என்பது உங்கள் நிறுவனத்தின் நிறுவுனரான புனித இலயோலாவின் அனுபவத்தில் உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

மேலும் புனித இனிகோ எப்போதும் கடவுளுக்கு முதலிடம் கொடுத்து, தொடர்ந்து கடவுளின் விருப்பத்தைத் நிறைவேற்ற முனைந்தவர் என்றும், தெளிந்து தேர்தல் மற்றும் நீதிக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றால் குறிக்கப்பட்ட அவரது ஆன்மிக பாதை, உங்கள் வாழ்க்கையையும் செயல்பாட்டையும் ஊக்குவித்து வழிநடத்தட்டும் என்றும் உரைத்தார்.

இந்தப் பாதையில் விடாமுயற்சியுடன் இருக்கவும், பிளவு மற்றும் மோதல்களால் அடிக்கடி பாதிக்கப்படும் இவ்வுலகில் நம்பிக்கையின் சாட்சிகளாக இருக்கவும் நான் உங்களை ஊக்குவிக்கிறேன் என்று உரைத்த திருத்தந்தை, உலகளாவிய சவால்களுக்கு ஒரு விமர்சன உணர்வை, தெளிந்து தேர்தல் மற்றும் உணர்திறனை வளர்த்துக் கொள்ளுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார்.

கல்வி என்பது அறிவைப் பரப்புவது மட்டுமல்ல, மாணவர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு கண்ணோட்டத்திலும் நல்லிணக்கம் மற்றும் நீதியின் மதிப்புகளை உள்ளடக்கிய மக்களை உருவாக்கும் அர்ப்பணிப்பு மற்றும் முறையாகும் என்று கூறினார் திருத்தந்தை.

மேலும் தாராள மனம் கொண்டு, எதார்த்தம் மற்றும் காலத்தின் தேவையின் அடிப்படையில் சுறுசுறுப்பாக செயல்பட உங்கள் மனம் உருவாக்கப்பட வேண்டும் என்று விண்ணப்பித்த திருத்தந்தை, கடினமாக உழைக்கக் கூடியவர்களையும், கனவு காண்பவர்களையும் உருவாக்குங்கள் என்றும் அறிவுறுத்தினார்.

புனித இனிகோவின் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் உங்கள் அறிவார்ந்த ஆர்வத்தையும், ஒத்துழைக்கும் உணர்வையும், சமகால சவால்களுக்குப் பதிலளிக்கும் உங்களின் உணர்திறனையும் வளர்த்துக் கொள்ள நான் உங்களை ஊக்குவிக்கிறேன் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 May 2024, 14:34