பிரேசில் பெருவெள்ளம் பிரேசில் பெருவெள்ளம்   (ANSA)

பிரேசில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் திருத்தந்தை ஆறுதல்!

பிரேசில் நாட்டின் Rio Grande do Sul மாநிலத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் குறைந்தது 137 பேர் இறந்துள்ளனர் மற்றும் 6,00,000-க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பிரேசிலின் Rio Grande do Sul மாநிலத்தின் அனைத்து மக்களுக்கும் தனது உடனிருப்பையும் செபத்தையும் தெரிவிப்பதாக தொலைபேசி அழைப்பு ஒன்றில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மே 11, இச்சனிக்கிழமையன்று, போர்டோ அலெக்ரேவின் பேராயரும் பிரேசில் ஆயர்பேரவையின் தலைவருமான Jaime Spengler அவர்களுடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலின்போது இத்தகையதொரு உறுதிப்பாட்டை வழங்கனார்  திருத்தந்தை.

அதேவேளையில், திருத்தந்தையின் இந்த அழைப்பு தனக்கு மிகவும் நெகிழ்ச்சியான அனுபவத்தைத் தந்ததாகவும், ஒரு தந்தைக்குரிய அன்பையும் பாசத்தையும் புரிந்துகொள்ள முடிந்ததாகவும் கூறிய ஆயர் Spengler அவர்கள், இப்பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மக்களுடனும் தனது ஒன்றிப்பையும் இறைவேண்டலையும் திருத்தந்தை தெரிவித்ததாகவும் உரைத்தார்.

மேலும் திருத்தந்தை தனது உடனிருப்பையும் செபத்தையும் தெரிவித்திருப்பது மட்டுமன்றி, இந்தப் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் பிரேசில் நாட்டு திருத்தூதரகம் வழியாக சிறியதொரு தொகையையும் வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார் பேராயர் Spengler

கடந்த ஏப்ரல் மாத இறுதியிலிருந்து தெற்கு பிரேசிலில் பெய்து வரும் கனமழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 137 ஆக உயர்ந்துள்ளது. இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 6,00,000-ஐ தாண்டியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 May 2024, 14:36