உங்கள் பணிகளில் இறைவேண்டல் முதன்மைத்துவம் பெறட்டும்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
உங்களுடைய துறவு வாழ்விலும், அப்போஸ்தலிக்கப் பணியிலும் உங்களை கடவுளுக்கான கொடையாக மாற்றுங்கள், கடவுளின் கொடையாக இருங்கள் என்று கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்தாலியின் மையப்பகுதியிலுள்ள Montevergine துறவுப் பெருமடத்துத் திருக்கோவில் நிறுவப்பட்டதன் 9-ஆம் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அதன் தலைவர், துறவியர் மற்றும், உடன்பணியாளர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
அவர்களின் துறவு வாழ்வு மற்றும் அப்போஸ்தலிக்கப் பணிகளைக் கருத்தில் கொண்டு, புனித அகுஸ்தினாருக்கு வழங்கப்பட்ட 'கடவுளுக்கான கொடையாக உன்னை மாற்று, கடவுளின் கொடையாக இரு' (make yourself a gift for God, to be a gift of God) என்ற இரண்டு வார்த்தைகளின் அடிப்படியில் தனது மேலான சிந்தனைகளை அவர்களுடன் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை.
கடவுளுக்கான கொடையாக மாற்றுங்கள்
முதலாவதாக, ‘கடவுளுக்கான கொடையாக மாற்றுங்கள்’ என்ற வார்த்தைக் குறித்து பேசிய திருத்தந்தை, இது துறவு வாழ்விற்கான அழைத்தலை அர்த்தப்படுத்துகிறது என்றும், கடவுளுக்கான பணிகள் அனைத்திலும் இறைவேண்டலே முதன்மைத்துவம் பெறவேண்டும் (opus Dei) என்ற புனித பெனடிக்ட்டின் பரிந்துரை செய்ததையும் குறிக்கின்றது என்றும் எடுத்துக்காட்டினார்.
மேலும் ‘உங்களை கடவுளுக்கான கொடையாக மாற்றுங்கள்’ என்பதன் அர்த்தம், நீங்கள் பணியாற்றும் இந்தத் திருத்தலத்திற்குக் கண்ணீரோடும் கவலையோடும் திருப்பயணமாக வரும் அனைவருக்கும் இறைவேண்டல் செய்வது என்று கூறிய திருத்தந்தை, நீங்கள் சந்திக்கும் அனைவருக்கும் உங்கள் இதயங்களில் குடிகொண்டிருக்கும் அன்னை மரியாவையும் அவரது மகன் இயேசுவையும் காண்பிக்க வேண்டும் என்றும் விண்ணப்பித்தார் திருத்தந்தை.
கடவுளின் கொடையாக இருங்கள்
இரண்டாவதாக, ‘கடவுளின் கொடையாக இருங்கள்’ என்பது, இந்த அன்னையின் திருத்தலத்திற்கு வருபவர்களுக்கு உங்களை தாராளமாகக் கொடுப்பது என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை, இதனால், நற்கருணை மற்றும் நல்லிணக்கத்தின் அருளடையாளங்களை அணுகும்போது, அவர்கள் கவனத்துடனும் செபத்துடனும், கடவுளின் தாயாம் அன்னை மரியாவின் பாதுகாப்பின்கீழ் வரவேற்று அழைத்துச் செல்லப்படுவதை நீங்கள் உணரலாம் என்றும் எடுத்துரைத்தார்.
ஆகையால், உலகத்தின் மனநிலை மற்றும் பாணிகளுக்கு இணங்குவதற்கான சோதனைக்கு அடிபணிய வேண்டாம் என்று நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன் என்று உரைத்த திருத்தந்தை, கடவுளால் தொடர்ந்து மாற்றப்படுவதற்கு உங்களை அனுமதியுங்கள், மற்றும், உங்கள் இதயங்களைப் புதுப்பித்து, அவரில் வளருங்கள், அப்போதுதான் ஒளியைத் தேடி உங்களிடம் வருபவர்கள் ஏமாற்றமடைய மாட்டார்கள் என்று அறிவுறுத்தினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்