இறந்தவர்களுக்கு அஞ்சலி! இறந்தவர்களுக்கு அஞ்சலி!  (AFP or licensors)

இரான் அரசுத் தலைவரின் மரணத்திற்குத் திருத்தந்தை இரங்கல்!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணம் செய்த ஹெலிகாப்டர் வனப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் அவர் உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்தனர். தற்போது ஒன்பது பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை அடையாளம் காணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

மே 19, இத்திங்களான்று நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த, ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, மற்றும் அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் உட்பட அனைவருக்கும் இரங்கல் தெரிவித்து செய்தியொன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மே 20, இத்திங்களன்று, ஈரான் இஸ்லாமிய குடியரசின் பெரும் தலைவர் அயத்துல்லா சயீத் அலி ஹொசைனி கமேனி அவர்களுக்கு அனுப்பியுள்ள இந்த இரங்கல் செய்தியில், இவ்விபத்தில் இறந்த அனைத்து ஆன்மாக்களையும் இறைவனின் இரக்கமிகு கரங்களில் ஒப்புக்கொடுத்து செபிப்பதாகவும், இவர்களின் இழப்பால் துயருறும் அவர்தம் குடும்ப உறவினர்களுக்கும், அந்நாட்டு மக்களுக்கும் தனது ஆன்மிக நெருக்கத்தை வெளிப்படுத்துவதாகவும் கூறியுள்ளார் திருத்தந்தை.

இப்ராஹிம் ரைசி, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன், ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாநில ஆளுநர் மற்றும் பிற அதிகாரிகள் மற்றும் பாதுகாவலர்கள் அதில் இருந்ததாக அரசு தெரிவித்துள்ளது. இவர்கள் எல்லோரும் விபத்தில் பலியாகி உள்ளனர் என்பது மிகவும் கவலைக்குரியது.

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் பெரும் வெற்றி பெற்றார். ஏறத்தாழ 2 கோடியே 80 இலட்சம் வாக்குகள் பதிவான அந்தத் தேர்தலில் 62 விழுக்காடு வாக்குகளை அவர் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 May 2024, 09:13