பாப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட நிலச்சரிவு பாப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட நிலச்சரிவு 

பாப்புவா நியூ கினியா நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு திருத்தந்தை இரங்கல்!

பப்புவா நியூ கினியாவில் அண்மையில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஆயிரக்கணக்கானோர் புதையுண்டு போயுள்ளதால், இறப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான் 

பாப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலையும், அவர்களை இழந்து தவிக்கும் அவர்தம் உறவினர்களுக்கு ஆறுதலையும் நெருக்கத்தையும் இரங்கல் செய்தி ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்

மே 27, இத்திங்களன்று, திருத்தந்தையின் பெயரில், திருப்பீடச் செயலர் பியெத்ரோ பரோலின் அவர்கள் அனுப்பியுள்ள இந்த இரங்கல் செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை.

மேலும் இந்த இயற்கைப் பேரழிவில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தனது ஆன்மிக நெருக்கத்தை வெளிப்படுத்தியுள்ள அதேவேளை, இன்னும் காணாமல் போன பலர் மீட்கப்படவும் தான் இறைவேண்டல் செய்வதாகவும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.  

அத்துடன் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அரசு அதிகாரிகள், அவசரகாலப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் அனைவரையும் தான் ஊக்கப்படுத்துவதாகவும், அவர்களுக்கு ஆறுதல் மற்றும் மனவலிமையின் அனைத்து தெய்வீக ஆசீர்வாதங்களை வழங்குவதாகவும் அச்செய்தியில் உரைத்துள்ளார் திருத்தந்தை.

தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது (ஆஸ்திரேலியாவுக்கு அருகில்) பாப்புவா நியூ கினியா. என்னும் தீவு நாடு. அதன் எங்கா மாநிலத்தில் கடந்த வாரம் பெய்த பெருமழையில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவால், பல வீடுகள் மண்ணில் புதையுண்டன. குறிப்பாக காகோலாம் என்ற கிராமமே மண்ணில் புதையுண்டது. அதிகாலை நேரம் என்பதால் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். இதனால் அங்கு வசித்த பலரும் உயிருடன் மண்ணில் புதையுண்டனர்.

மேலும் பாறைகள் விழுந்து அவர்களால் வெளியேற முடியவில்லை. இதனையடுத்து அங்கு விரைந்த மீட்பு படையினர் மீட்பு பணியை துரிதப்படுத்தியுள்ளனர். எனினும் இந்த நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டி உள்ளதாக தேசிய பேரிடர் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 May 2024, 14:44