மோதல்களால் பெரும்பான்மையாகப் பாதிக்கப்படுவது குழந்தைகளே!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
யுனிசெப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் Catherine Russell, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்தார் என்றும், இச்சந்திப்பின்போது உலக மோதல்கள் மற்றும் பேரழிவுகளால் பாதிப்புக்குள்ளாகும் குழந்தைகள் குறித்து இருவரும் கலந்துரையாடினர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அனைத்துலகத் திருஅவையில் முதன்முதலாக உலக குழந்தைகள் தினம் மே மாதம் 25, மற்றும் 26 தேதிகளில் சிறப்பிக்கப்பட்ட வேளை, அதனையொட்டி இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது என்றும் அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்புக் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய Russell அவர்கள், குழந்தைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வுக்கான அலட்சியம் அல்லது அவமதிப்பு, எல்லா இடங்களிலும் ஒவ்வொரு குழந்தைக்கும் அமைதி, இரக்கம் மற்றும் அக்கறையாக உலகளவில் மாற்றப்பட வேண்டும் என்று அவர் அனைவரையும் வலியுறுத்தினார்.
அனைத்து மோதல்கள் மற்றும் பேரழிவுகளில், குழந்தைகள்தாம் முதலிலும் பெரும்பான்மையாகவும் பாதிக்கப்படுகின்றனர் என்று எடுத்துக்காட்டிய Russell அவர்கள், நாம் அவர்களின் குரலுக்கு செவிசாய்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
காசா, ஹெய்ட்டி, காங்கோ ஜனநாயகக் குடியரசு, சூடான், உக்ரைன் மற்றும் ஏமன் போன்ற இடங்களிலுள்ள ஏறத்தாழ 40 கோடி குழந்தைகளில், ஐந்தில் ஒரு குழந்தை, மோதல் பகுதிகளில் வாழ்கின்றது அல்லது அங்கிருந்து வெளியேறி வருகின்றது என்றும் எடுத்துக்காட்டினார் Russell.
மேலும் 100 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் தற்போது காலநிலை மாற்றத்தினால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள ஆபத்தான நாடுகளில் வாழ்கின்றனர் என்றும் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார் Russell.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்