பாப்பிறை மறைத்தூதுக் கழகங்களின் பொதுப்பேரவையின் பங்கேற்பாளர்களைச் சந்திக்கும் திருத்தந்தை பாப்பிறை மறைத்தூதுக் கழகங்களின் பொதுப்பேரவையின் பங்கேற்பாளர்களைச் சந்திக்கும் திருத்தந்தை  (Vatican Media)

நமது நோக்கத்திலும் செயலிலும் உறுதியுடன் இருப்போம்!

திருஅவையின் தற்போதைய ஒன்றிணைந்த பயணத்தின் அடித்தளமான மறைத்தூது ஒன்றிப்பின் ஆன்மிகத்தில் வளர அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இறைபணி பணி என்பது, எல்லா ஆண்களிடமும் பெண்களிடமும் அயராது பயணித்துச் சென்று, கடவுளை சந்திக்கவும், அவருடன் உறவில் ஈடுபடவும் அவர்களை அழைப்பது என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மே 25, இச்சனிக்கிழமையன்று, பாப்பிறை மறைத்தூதுக் கழகங்களின் பொதுப்பேரவையின் பங்கேற்பாளர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது, இவ்வாறு கூறிய திருத்தந்தை, நமது நோக்கத்திலும் செயலிலும் விடாமுயற்சியுடன் இருக்கவும், உறுதியுடன் இருக்கவும் நாம் அழைக்கப்படுகிறோம் என்றும் உரைத்தார்.

மீட்புப் பணிகளின் அடைப்படையில், தொடக்கத்திலிருந்த இறைபணியின் மூன்று சிறப்பு அம்சங்களான உறவு ஒன்றிப்பு, படைப்பாற்றல் மற்றும் உறுதிப்பாடு குறித்து தனது சிந்தனைகளைப் அவர்களுடன் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை.

உறவு ஒன்றிப்பு

நாம் மூவொரு கடவுளைப் பற்றி சிந்திக்கும்போது, ​​கடவுள் என்பவர் மூன்று நபர்களுடைய உறவின் ஒன்றிப்பு மற்றும் அன்பின்  மறைபொருள்  என்பதை நாம் காண்கிறோம் என்று கூறிய திருத்தந்தை,  நம்மைத் தேடி, மீட்பளிக்க வரும் அன்பான கடவுள், ஒருவராகவும் மூவொருவராகவும் இருப்பதில் வேரூன்றியவர் என்றும். இதுவே இம்மண்ணகத்திலுள்ள பயணிக்கும் திருஅவையின் மறைத்தூது இயல்புக்கு அடிப்படையாகும் என்றும் எடுத்துக்காட்டினார்.

இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, நாம் கடவுளுடனும் நமது சகோதரர் சகோதரிகளுடனும் ஓர் ஆன்மிக உறவில் வாழ்வதற்கு அழைக்கப்படுகிறோம் என்றும் தெளிவுபடுத்தினார் திருத்தந்தை.

கிறிஸ்தவப் பணி என்பது சில புலனாகாத உண்மைகளையோ (abstract truth) அல்லது மத நம்பிக்கையையோ கடத்துவது அல்ல, ஆனால், நாம் சந்திப்பவர்கள் கடவுளின் அன்பின் அடிப்படை அனுபவத்தைப் பெறுவதற்கு உதவுகிறது என்பதுதான் இதில் முதன்மையானது என்பதையும் குறிப்பிட்டார் திருத்தந்தை.

ஆகவே, திருஅவையின் தற்போதைய ஒன்றிணைந்த பயணத்தின் (synodal journey) அடித்தளமான மறைத்தூது ஒன்றிப்பின் ஆன்மிகத்தில் வளர அனைவரையும் தான் கேட்டுக்கொளவதாகவும் கூறினார் திருத்தந்தை.

படைப்பாற்றல்

படைப்பாற்றல் குறித்து இருவேறு விடயங்களைக் கூற விரும்புவதாகத் தெரிவித்த திருத்தந்தை, முதலாவதாக, படைப்பாற்றல் கடவுளின் சொந்த சுதந்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது, இது கிறிஸ்துவிலும் தூய ஆவியாரிலும் அவர் நமக்குத் தருவது என்றும், ஆண்டவரின் ஆவியார் இருக்குமிடத்தில் விடுதலை உண்டு (காண்க. 2 கொரி 3:17) என்றும் விளக்கினார்.

இரண்டாவதாக, 'அன்பு மட்டுமே உருவாக்குகிறது' என்று கூறிய மாக்சிமில்லியன் மரிய கோல்பேயின் கூற்றைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, நற்செய்தி படைப்பாற்றல் தெய்வீக அன்பிலிருந்து உருவாகிறது என்பதை நினைவில் கொள்வோம். மேலும் கிறிஸ்துவின் பிறரன்புப் பணி, அதன் தோற்றம், வடிவம் மற்றும் முடிவாக இருக்கும் அளவிற்கு அனைத்து மறைத்தூது நடவடிக்கைகளும் ஆக்கப்பூர்வமானவையாக இருக்கின்றன என்றும் தெளிவுபடுத்தினார்.

உறுதிப்பாடு

மூன்றாவதாக, நமது நோக்கம் மற்றும் செயலில் உறுதிப்பாடு மற்றும் விடாமுயற்சி அவசியம் என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை, மீட்புத்திட்டத்தில் மூவொரு இறைவனின் செயல்பாடுகளையும், குறிப்பாக, இயேசுவின் வழியாக இறைத்தந்தையின் தியாகமேற்றலையும் எடுத்துக்காட்டினார்.

இறைபணி பணி என்பது, எல்லா ஆண்களிடமும் பெண்களிடமும் அயராது பயணித்துச் சென்று, கடவுளை சந்திக்கவும், அவருடன் உறவில் ஈடுபடவும் அவர்களை அழைப்பது என்று கூறிய திருத்தந்தை நமது நோக்கத்திலும் செயலிலும் விடாமுயற்சியுடன் இருக்கவும், உறுதியுடன் இருக்கவும் நாம் அழைக்கப்படுகிறோம் என்றும் உரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 May 2024, 15:14