தூய ஆவியாரால் நாம் உதவியும் வலிமையும் பெறுகிறோம்!

அமைதி, உடன்பிறந்த உறவு மற்றும் ஒன்றிப்பு நோக்கிய நமது பாதையில் நாம் தனியாக இல்லை. தூய ஆவியார் மற்றும் அவருடைய கொடைகளின் அருளால், நாம் ஒன்றித்துப் பயணித்து, அந்தப் பாதையை மேலும் மேலும் உருவாக்க முடியும் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

நமது வாழ்வின் மிகவும் சவாலான நேரங்களிலும் அல்லது அன்றாடப் போராட்டங்களுக்கு மத்தியிலும் கூட, தூய ஆவியாரும் அவருடைய அருள்கொடைகளும்  நாம் அவருக்குள் ஆட்பட்டிருக்க நமக்கு உதவுகின்றன என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மே 19, இஞ்ஞாயிறன்று, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில் நிகழ்ந்த பெந்தக்கோஸ்து பெருவிழாத் திருப்பலியை தலைமையேற்று சிறப்பித்த வேளை, தனது மறையுரையில் இவ்வாறு தெரிவித்த திருத்தந்தை, இவ்விழா, தூய ஆவியார் திருஅவையில் நம்மிலும், நமது பணியிலும், வலிமை மற்றும் மென்மையின் பண்புகளுடன் செயல்படுவதைக் காட்டுகிறது என்றும் உரைத்தார்.

திருத்தூதர்கள்மீது இறங்கி வந்து அவர்களது இதயங்களை மாற்றம்பெறச் செய்து, அவர்களுக்குள் குழப்பமற்ற வலிமையை ஏற்படுத்திய தூய ஆவியார், இயேசுவைப் பற்றிய தங்கள் அனுபவத்தையும், அவர்களைத் தூண்டிய நம்பிக்கையையும் மற்றவர்களுக்குக் கொடுக்கத் தூண்டினார் என்றும் தனது மறையுரையில் நினைவுகூர்ந்தார் திருத்தந்தை.

இந்தப் பேராலயத்தின் மேலறையிலிருந்து, திருத்தூதர்களைப் போலவே நாமும் அனைவருக்கும் நற்செய்தியை அறிவிக்க அனுப்பப்படுகிறோம் என்று எடுத்துக்காட்டிய திருத்தந்தை, ஆணவம், திணிப்புகள் அல்லது கணக்குப் பார்த்து செயல்படுவதை விடுத்து,  தூய ஆவியார் நம் இதயங்களில் நமக்குக் கற்பிக்கும் உண்மையின் விசுவாசத்தால் பிறந்த ஆற்றலுடன் நாம் இந்த நற்செய்தி அறிவிப்புப் பணியை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மனதளர்வின்றி அமைதிக்குறித்து பேசுவோம்

போரை விரும்புபவர்களிடத்தில் அமைதியைப் பற்றியும், பழிவாங்க விரும்புவோரிடத்தில் மன்னிப்பைப் பற்றியும், கதவுகளை அடைத்து தடைகளை ஏற்படுத்துபவர்களிடம் ஒன்றிப்புப் பற்றியும், மரணத்தைத் தேர்ந்தெடுப்பவர்களிடத்தில் வாழ்க்கையைப் பற்றியும், அவமானப்படுத்துவதற்கும், அவமதிப்பதற்கும், நிராகரிப்பதற்கும் விரும்புபவர்களிடத்தில் மரியாதை பற்றியும், உறவின் பிணைப்புகளைத் துண்டிப்பவர்களிடத்தில் பிரமாணிக்கம் பற்றியும் நாம் மனந்தளராமல் பேசுவோம் என்றும் விசுவாசிகளிடம் பரிந்துரைத்தார் திருத்தந்தை.

உதவியும் ஊக்கமும் அருளும் தூய ஆவியார்

நாம் தூய ஆவியாரை நம்முள் அனுமதிக்கும்போது, இந்த முயற்சியில் அவர் நம்மை ஊக்குவிக்கிறார், உதவுகிறார் மற்றும் ஆதரிக்கிறார் என்று உறுதியளித்த திருத்தந்தை,  இதனால் நமது போராட்ட தருணங்கள் வளர்ச்சியின் சந்தர்ப்பங்களாக மாறும் என்றும், வலிமையானதும் அதிக சுதந்திரத்துடன் மற்றவர்களை அன்புகூரும் திறன் கொண்டதுமான ஆரோக்கியமான நெருக்கடிகளில் நம்மை சிறப்பாக வெளிப்படுத்த முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

இயேசுவும், 40 நாட்கள் பாலைநிலத்தில் சோதிக்கப்பட்டபோது, ​​​​மனிதகுலத்தை மீட்கும் அவரது மனித இயல்பு வலிமைபெற்று, மக்கள் பணிக்குத் தன்னை தயார்படுத்திக்கொள்ள தூய ஆவியார் அவருக்குத் துணை நின்றார் என்றும் எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.

அமைதி, உடன்பிறந்த உறவு மற்றும் ஒன்றிப்பு நோக்கிய நமது பாதையில் நாம் தனியாக இல்லை என்றும், தூய ஆவியார் மற்றும் அவருடைய கொடைகளின் அருளால், நாம் ஒன்றித்துப் பயணித்து, அந்தப் பாதையை மேலும் மேலும் உருவாக்க முடியும் என்றும் உறுதியளித்தார் திருத்தந்தை

இந்த உணர்வோடு, நம்முடைய மனங்களைத் தெளிவுபடுத்தவும், நம் இதயங்களை அருளால் நிரப்பவும், நம்மை வழிநடத்தவும், உலகிற்கு அமைதி அளிக்கவும், நமக்கு  அருகிலிருந்து நம்மை ஆறுதல்படுத்தும் தூய ஆவியாரின் முன்னிலையில் நமது நம்பிக்கையை புதுப்பித்துக்கொள்வோம் என அழைப்புவிடுத்து தனது மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 May 2024, 12:52