உரோமை பங்குத்தளம் ஒன்றில் வயதுமுதிர்ந்த குருக்களைச் சந்தித்தார் திருத்தந்தை
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
மே 14, இச்செவ்வாயன்று, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலிலுக்கு மிக அருகிலுள்ள Trionfale புனித வளனார் பங்குத் தளத்திற்குச் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 40 ஆண்டுகளுக்கு முன்பு குருக்களாகத் திருநிலைப்படுத்தப்பட்ட 70 பேரை சந்தித்தார் என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அங்கு மறைக்கல்வி வகுப்புகளில் கலந்துகொள்ளும் தொடக்கப்பள்ளி குழந்தைகளின் குழுவொன்றையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சந்தித்து வாழ்த்தினார் என்றும் அச்செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.
வத்திக்கானிலுள்ள தனது இல்லமான சாந்தா மார்த்தாவிலிருந்து ஏறத்தாழ பத்து நிமிடங்களுக்கு முன்னதாகப் புறப்பட்டு, மாலை 4 மணிக்கு ஒரு நிமிடம் முன்னதாகவே புனித வளனார் பங்குத் தளத்தை வந்தடைந்த திருத்தந்தை, அருள்சகோதரிகள், பங்குத்தள உடன்பணியாளர்கள் மற்றும், பங்கு மக்களால் வரவேற்கப்பட்டார் என்றும் உரைக்கிறது அச்செய்திக்குறிப்பு.
மேலும் உரோம் உயர் மறைமாவட்டத்தின் தலைவர் பேரருள்திரு Baldo Reina, ஆயர் Michele Di Tolve, இருபால் துறவியர் மற்றும் பங்குத்தந்தை Tommaso Gigliola உள்ளிட்ட அனைவரையும் திருத்தந்தை வாழ்த்தினார் என்றும், பின்னர், அங்கு வந்திருந்த பத்திரிக்கையாளர்கள் குழுவிடம், தனக்காக இறைவேண்டல் செய்யுமாறு தனது வழக்கமான கோரிக்கையுடன் அவர்களிடம் உரையாற்றினார் என்றும் விளக்குகிறது அச்செய்திக் குறிப்பு.
இறுதியாக, மூடிய அறை ஒன்றில் 40 ஆண்டுகளுக்கு முன்பு குருக்களாகத் திருநிலைப்படுத்தப்பட்ட 70 பேரை சந்தித்த திருத்தந்தை, அவர்களுடன் அளவளாவி உரையாடி மகிழ்ந்தார் என்றும் அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்