கால்பந்து விளையாட்டு கால்பந்து விளையாட்டு   (USA TODAY Sports)

சமூகத்தில் விளையாட்டு பெருகிய முறையில் முக்கிய பங்கை வகிக்கிறது

விளையாட்டு மற்றும் ஆன்மிகம் பற்றிய இந்த அனைத்துலக மாநாடு, பன்முகப் பார்வையுடன், அதன் நெறிமுறை, சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் ஆன்மிக விழுமியங்களை ஆராய விரும்புகிறது : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

விளையாட்டு என்பது, பலரின் குறிப்பாக, இளைய தலைமுறையினரின் அன்றாட வாழ்க்கையை வடிவமைக்கிறது. இது ஆர்வங்கள் மற்றும் சந்திப்பதற்கான வாய்ப்புகளைத் தூண்டுகிறது, ஒருங்கிணைக்கிறது, சமூகத்தை உருவாக்குகிறது, வாழ்க்கையை ஒழுங்கான முறையில் உற்சாகப்படுத்துகிறது மற்றும் கனவுகளை ஊக்குவிக்கிறது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உரோமையில் மே 16 முதல் 18 வரை,  "வாழ்க்கையை இணையான ஒரே தளத்தில் வைப்பது'  என்ற மையக்கருத்தில், விளையாட்டு மற்றும் ஆன்மிகம் பற்றிய அனைத்துலக மாநாட்டின் பங்கேற்பாளர்களுக்கு வழங்கியுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை.

விளையாட்டு வீரர்களின் ஒழுக்கம் மற்றும் நிதானம், அத்துடன் நலமான போட்டி  பெரும்பாலும் நல்லொழுக்கமுள்ள கிறிஸ்தவ வாழ்க்கைக்கான உருவகங்களாக மதிப்பிடப்படுகின்றன என்று எடுத்துக்காட்டிய திருத்தந்தை, இன்றும்கூட, கடவுளை மகிழ்விக்கவும், அவருடைய நண்பர்களாக இருக்கவும் முயற்சிக்கும் அனைவருக்கும் இந்த உருவகம் பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறினார்.

அதனால்தான், சுயநலம் மற்றும் வெறும் பொருள் நலன்களிலிருந்து தூய்மைப்படுத்தப்பட்ட போட்டியின் உண்மையான மதிப்புகளில் விளையாட்டு மற்றும் கல்வியின் மேய்ப்புப் பணிப் பொறுப்புத் தேவை என்று சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை, இதே காரணத்திற்காக, திருஅவை விளையாட்டு அனுபவத்தைப் பற்றி சிந்தித்து, அதன் நற்செய்தி அறிவிப்பு நடவடிக்கையின் அடிப்படையில் போதுமான மதிப்பைப் பெறுவது முக்கியம் என்றும் குறிப்பிட்டார்.

இந்தச் சூழலில், தற்போதைய விளையாட்டு மற்றும் ஆன்மிகம் தொடர்பான இம்மாநாடு, 'விளையாட்டுக்கு அப்பாற்பட்ட விளையாட்டு (sport beyond sport) என்று நினைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும், பன்முகப் பார்வையுடன், அதன் நெறிமுறை, சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் ஆன்மிக விழுமியங்களை ஆராய விரும்புகிறது என்றும் கோடிட்டுக் காட்டியுள்ளார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 May 2024, 15:21