மூவொரு கடவுள் ஒரு குடும்பமாக இருக்கின்றார்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
கடவுள் ஒருவரே, அவர் தந்தை, மகன், தூய ஆவியார் என ஒரு குடும்பமாக உறவில் ஒன்றிணைந்திருக்கிறார் என்றும், இந்த மூவொரு கடவுள் அன்பின் அரவணைப்பாக இருக்கின்றார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மே 26, இஞ்ஞாயிறன்று, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில் மூவொரு இறைவனின் பெருவிழாவையும், கத்தோலிக்கத் திருஅவையில் முதன்முறையாக குழந்தைகளுக்கென ஒரு நாளையும் சிறப்பித்த வேளை, தான் வழங்கிய மறையுரையில் அங்குக் குழுமியிருந்த குழந்தைகளிடம் இவ்வாறு தெரிவித்தார் திருத்தந்தை.
உடனிருக்கும் மூவொரு கடவுள்
கடவுள் நம்மை அன்பு கூர்கிறார், நமது வாழ்க்கைப் பயணத்தில் நம்முடன் இருப்பதையும், நம்மை மகிழ்விப்பதையும் அவர் அதிகம் விரும்புகின்றார் என்று கூறிய திருத்தந்தை, இயேசு, தான் விண்ணேற்றம் அடைவதற்கு முன்பாக, "இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்” (காண்க, மத் 28:20) என்று சீடர்களிடம் கூறிய வார்த்தைகளையும் அவர்களுக்கு எடுத்துக்காட்டினார்.
பல நகரங்களிலிருந்தும், பங்குத்தளங்களிலிருந்தும், உலகின் பல பகுதிகளிலிருந்தும் இவ்விழாவைச் சிறப்பிக்க வந்துள்ள உங்கள் அனைவருக்கும், இயேசு மிகவும் இன்றியமையாத ஒரு நண்பராக இருக்கின்றார் என்று கூறிய திருத்தந்தை, ‘உங்களை ஒருபோதும் விட்டுவிலகக்குவதில்லை’ என்று உங்களுக்கு அவர் உறுதிமொழியும் தருகின்றார் என்றும் உரைத்தார்.
நாம் இயேசுவின் நண்பர்கள்
எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் அனைவரும் அவருக்கும் மிகவும் பிடித்தமான அன்புக்குரிய நண்பர்களாக இருக்கின்றீர்கள் என்று கூறிய திருத்தந்தை, “சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள், அவர்களைத் தடுக்காதீர்கள்” என்று இயேசு தனது சீடர்களிடம் சொன்னதையும் குறிப்பிட்டுக்காட்டி, நீங்கள் அனைவரும் அவரின் நண்பர்களாக இருக்க விரும்புகிறீர்களா என்றும் இருமுறை கேள்வி எழுப்பினார்.
அர்ப்பணிப்புடன் இருப்போம்
நாம் இயேசுவின் நண்பர்களாக இருக்க வேண்டுமெனில் ஓர் அர்ப்பணம் நமக்குத் தேவைப்படுகிறது என்று குறிப்பிட்ட திருத்தந்தை, நாம் செபத்தில் அவரைத் தேடவேண்டும், ஒவ்வொரு நாளும் அவரை நினைவுகூர்ந்து, ஒரு நண்பரிடம் பேசுவதைப் போன்று அவரிடம் நாம் உரையாட வேண்டும் என்றும் அவர்களிடம் கேட்டுக்கொண்டார்.
மேலும் இது மட்டும் போதுமானதன்று, அவருடைய நண்பர்களாக இருப்பது என்பது, அவரைப் போன்று நாமும் ஒருவர் மற்றவரிடம் அன்புகூர வேண்டும் என்றும் அவர்களிடம் அறிவுறுத்தினார் திருத்தந்தை.
உலகத்தை மாற்றவோம்
இயேசு கூறியதைப் போன்று நாம் ஒருவர் மற்றவரிடம் அன்புகூர்ந்தால், இந்த உலகமே முழுவதுமாக மாற்றம் காணும், அதாவது, போர்கள் இல்லாத உலகம் ஏற்படும் என்றும், அதில் நீங்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழமுடியும் என்றும் கூறிய திருத்தந்தை, ‘கடவுள் எல்லாவற்றையும் புதியதாக்குகின்றார்’ என்ற இன்றையப் பெருவிழாவின் மையக்கருத்தையும் எடுத்துக்காட்டினார்.
உங்களைப்போன்ற எத்தனையோ குழந்தைகள் இங்கே வரமுடியாத சூழலில் இருக்கின்றனர் என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை, அவர்களில் சிலர் போர் நிகழும் இடங்களில் வாழ்கின்றனர், சிலர் துயரங்களில் வாழ்கின்றனர், இன்னும் சிலர் தங்கள் பெற்றோரை இழந்து தனித்துவிடப்பட்டுள்ளனர் என்றும் விளக்கினார்.
போர்களில்லா உலகம் படைப்போம்
போர்கள், வறுமை மற்றும் துன்பங்கள் நிறைந்த உலகம் நமக்கு வேண்டாம்; ஆனால் அது வேண்டாம் என்று சொன்னால் மட்டும் போதாது, அதை மாற்ற நாம் அனைவரும் நம்மை அர்ப்பணிக்க வேண்டும் என்றும் விண்ணப்பித்த திருத்தந்தை, நாம் ஒருவரையொருவர் அன்புகூரும்போது, ஒருவருக்கொருவர் சண்டையிடாதபோது, இயேசு நம்முடன் இருப்பதைப் போல நல்ல மற்றும் உண்மையுள்ள நண்பர்களாக இருக்க முயற்சிக்கும்போது போர்களில்லா உலகத்தை நம்மால் உருவாக்க முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
இப்படிப்பட்ட போர்களில்லா உலகத்தில் நாம் அனைவரும் ஒரே குடும்பமாக மாறிவிடுவோம் என்றும், அத்தகையதொரு சூழலில், மூவொரு கடவுளைப்போல அனைவருடனும் நாம் அன்புடன் வாழ முடியும் என்றும் எடுத்துக்காட்டி, தனது மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.
கத்தோலிக்கத் திருஅவையில் முதன்முறையாக குழந்தைகளுக்கென ஒரு தினம் சிறப்பிக்கப்படும் என கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8-ஆம் தேதி அமல உற்பவ அன்னை திருவிழா மூவேளை செப உரையின்போது திருத்தந்தை அறிவித்ததைத் தொடர்ந்து, கலாச்சாரம் மற்றும் கல்விக்கான திருப்பீடத்துறை இந்த நிகழ்வுக்கு ஏற்பாடுச் செய்துள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்