மருத்துவப்பணி எப்போதும் நேருக்கு நேராக சந்தித்து உதவும் சேவை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
அமெரிக்க ஐக்கிய நாட்டின் நியூ யார்க் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் SOMOS சமூக அக்கறை அமைப்பின் வத்திக்கான் அங்கத்தினர்களை மே 25, சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
குடும்ப மருத்துவர்கள், சமூகத்திற்கு தன்னலமற்ற சேவை செய்யும் நலப்பணியாளர்கள், நிபுணர்கள் என நலத்துறையில் பணிபுரிபவர்களை அங்கத்தினர்களாகக் கொண்டு செயல்படும் SOMOS அமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்தபோது, குடும்பங்களின் நலவாழ்வில் ஒரு குடும்ப அங்கத்தினர்கள்போல் பழகி நலச்சேவையாற்றும் குடும்ப மருத்துவர்களின் பணியைப் பாராட்டினார்.
அறிவியல் இன்று பெரிய அளவில் முன்னேறி தொழில்நுட்ப சிகிச்சை முறைகள் அதிகரித்துவருவதைக் கண்டாலும், மருத்துவப்பணி என்பது எப்போதும் நேருக்கு நேராக சந்தித்து உதவும் சேவையாகும் என்ற திருத்தந்தை, நாம் உடல்சுகவீனமுற்றிருக்கும்போது, ஒரு திறமையான மருத்துவரை எதிர்பார்ப்பதுபோல் நட்புணர்வுடன் நம்மை அணுகும் மருத்துவரையும் எதிர்பார்க்கின்றோம் என மேலும் கூறினார்.
இயேசு நோயாளிகளை அக்கறையுடனும் கனிவுடனும் அணுகியதைப்போல், ஒவ்வொரு குடும்ப மருத்துவரும் தன் மருத்துவ திறமையுடனும் இதமான நட்புணர்வுடனும் அணுகுகிறார்கள் என்றும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குடும்ப மருத்துவர்கள் என்பவர்கள் அவர்கள் நலப்பணியில் உதவும் குடும்பங்களின் அங்கத்தினர்களாகவே மாறிவிடுகிறார்கள் எனவும் தெரிவித்தார்.
மக்களின் நலன் மற்றும் அக்கறையின் இடத்தில் வியாபார மனப்பான்மை புகுந்து விடாமல் இருக்க மருத்துவப்பணியாளர்கள் கவனமுடன் செயல்படவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்