திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ் 

உரோமை ஆயர், ஒன்றிப்பின் பணியாளர்!

முதல் நூற்றாண்டுகளில் முழு ஒன்றிப்புடன் வாழ்ந்த தலத்திருஅவைகளால் பகிர்ந்து கொள்ளப்பட்ட முதன்மையான நடைமுறையின் ஒரு வடிவத்தை தேடுவதே இந்த ஆவணத்தின் நோக்கமாக அமைந்துள்ளது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

திருத்தந்தையின் பங்களிப்பு மற்றும் பேதுரு வழி தலைமைத்துவப் பணிகள் துறையின் செயல்பாடுகள் குறித்து நடந்துகொண்டிருக்கும் கிறிஸ்தவ ஒன்றிப்பு உரையாடலை ஆய்வு செய்யும் புதிய ஆவணம் ஒன்றை வெளியிட்டுள்ளது கிறிஸ்தவ ஒன்றிப்பை ஊக்குவிப்பதற்கான திருப்பீடத் துறை.

இறையியல் உரையாடல்களின் பலன்களில் ஒன்று, பேதுரு தலைமைத்துவம் பற்றிய நூல்களின் புதுப்பிக்கப்பட்ட வாசிப்பு ஆகும், இது வரலாற்று ரீதியாக கிறிஸ்தவர்களிடையே ஒற்றுமைக்கு தடையாக உள்ளது என்று எண்ணப்பட்டாலும், இந்தப் புதிய ஆவணம் அதைக் கடந்து செல்லவும் கிறிஸ்தவ ஒன்றிப்பை ஊக்குவிக்கவும் வழிகாட்டுகிறது.

பேதுரு வழி தலைமைத்துவப் பணிகள் துறையின் செயல்பாடுகள் குறித்து விளக்கும் இந்தப் புதிய ஆவணம் புதிய ஏற்பாட்டிலிருந்து பல்வேறு எடுத்துக்காட்டுகள் மேற்கோள்காட்டப்பட்டு விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மேலும் இது அதிகமான புரிதலை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.

முதன்மையானதாகக் கருதப்படும் உரோமை ஆயர் பணியின் தோற்றம், முதல் வத்திக்கான் திருச்சங்கம், ஒப்புரவு திருஅவைக்கானப் பணிகள், பல்வேறு ஆயர்ப்பேரவைகளின் கடமைகள், மரபுகள் மற்றும் துணையமைப்புகள், நடைமுறை பரிந்துரைகள் ஆகிய தலைப்புகளின் கீழ் இந்த ஆவணம் குறித்து ஆழமாக விளக்கப்பட்டுள்ளது.

The Bishop of Rome அதாவது, ‘உரோமை ஆயர்’ என்பது கிறிஸ்தவ ஒன்றிப்பை ஊக்குவிப்பதற்கான திருப்பீடத் துறையின் ஒரு புதிய ஆவணமாகும், இது முன்னேற்றங்களின் பின்னணியில் ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு முன்பு திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்கள் விடுத்த அழைப்பின் பேரில் திருத்தந்தையின் பணிகள் குறித்த கிறிஸ்தவ உரையாடல்களின் பலன்களை ஒன்றிணைக்கிறது. மேலும் முதல் நூற்றாண்டுகளில் முழு ஒன்றிப்புடன் வாழ்ந்த தலத்திருஅவைகளால் பகிர்ந்து கொள்ளப்பட்ட முதன்மையான நடைமுறையின் ஒரு வடிவத்தை தேடுவதே இந்த ஆவணத்தின் நோக்கமாக அமைந்துள்ளது.

The Bishop of Rome என்ற இந்தப் புதிய ஆவணம் குறித்த முழு விபரங்களையும் கிறிஸ்தவ ஒன்றிப்பை ஊக்குவிப்பதற்கான திருப்பீடத் துறையின் இணையத்தில் தேடி அறிந்துகொள்ளலாம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 June 2024, 14:59