Palmarola பங்குதளப் பகுதியில் திருத்தந்தை Palmarola பங்குதளப் பகுதியில் திருத்தந்தை  (ANSA)

குடும்பங்களுக்கு பாதுகாப்பாக நிற்பதிலிருந்து விலகிச் செல்லாதீர்

எத்தகைய கடினமான சூழல்களிலும் குடும்பங்கள் தங்கள் மனவுறுதியைக் கைவிடாமல், திருஅவை மற்றும் சமூகத்தின் துணைகொண்டு துணிந்து நடைபோடவேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

உரோமின் மேற்கு புறநகர்ப் பகுதியில் உள்ள Palmarola என்ற பங்குதளத்தில் ஜூன் 6ஆம் தேதி வியாழன் மாலை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பிரிஜித் பங்குதளத்தின் 30 குடும்பங்கள், குழந்தைகளுடன் தம்பதியர், இளையோர் மற்றும் முதியோரை சந்தித்து உரையாடினார்.

2025ஆம் ஆண்டு யூபிலி ஆண்டிற்கு தயாரிப்பாக இவ்வாண்டு இறைவேண்டல் ஆண்டாக சிறப்பிக்கப்பட்டுவரும் நிலையில், அதன் ஒருபகுதியாக உரோம் பங்குதளங்களைச் சந்தித்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வியாழக்கிழமையன்று தன் மூன்றாவது இறைவேண்டல் கல்வியை உரோம் நகரின் Palmarola பகுதியில் நடத்தினார்.  

தெருமுனையில் சில நாற்காலிகளுடன் நடத்தப்பட்ட இந்த சந்திப்பில் குழந்தைகள் மற்றும் இளையோருடன் முதியோரும் கலந்துகொண்டனர்.

அங்கு குழுமியிருந்த குடும்பத்தினருடன் கேள்வி பதில் பகுதியாகத் துவங்கிய சந்திப்பின்போது, எத்தகைய கடினமான சூழல்களிலும் குடும்பங்கள் தங்கள் மனவுறுதியைக் கைவிடாமல், திருஅவை மற்றும் சமூகத்தின் துணைகொண்டு துணிந்து நடைபோடவேண்டும் என கேட்டுக் கொண்டார்.

குழந்தைகளை வளர்த்தெடுப்பதற்கு குடும்பங்கள் இன்றியமையாதவை என்பதை கோடிட்டுக் காட்டிய திருத்தந்தை, எத்தகைய ஒரு சூழலிலும் நாம் குடும்பங்களுக்கு பாதுகாப்பாக நிற்பதிலிருந்து விலகிச் செல்லக்கூடாது என்பதை வலியுறுத்தினார்.

தம்பதியருக்குள் வாக்குவாதங்கள் இடம்பெறுவது இயல்பேயெனினும், எந்தவொரு மனக்கசப்பும் அன்று இரவுக்குள்  தீர்த்துவைக்கப்பட வேண்டும், ஏனெனில், அமைதியின்றி நாட்கள் தொடர்வது குடும்பங்களை உருக்குலைத்துவிடும் என்றார்.

‘வருந்துகிறேன்’, ‘தயவு செய்து’, ‘நன்றி’ என்ற மூன்று வார்த்தைகள் குடும்பங்களில் மிகவும் முக்கியத்துவம் நிறைந்தவை என்பதையும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.

குழந்தைகள் நம்மை உற்றுநோக்கிப் பார்க்கிறார்கள், நம்மிடமிருந்து கற்றுக் கொள்கிறார்கள் என்பதையும் எடுத்துரைத்த திருத்தந்தை, தம்பதியர் ஒருவரையொருவர் குறைசொல்லாமல் வாழவேண்டும் என்பதையும், இளையோர் வரலாற்றை முன்னோக்கி எடுத்துச் செல்பவர்களாக செயல்படவேண்டும் என்பதையும், சான்று வாழ்வின் வழி ஒவ்வொருவரின் விசுவாசமும் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும், முதியோர் சமூகத்தின் ஞானமாகவும், குழந்தைகள் வாக்குறுதியாகவும் உள்ளார்கள் எனவும், குழந்தைகளுடன்  உரையாட நேரம் ஒதுக்கவேண்டும் எனவும் பல்வேறு கருத்துக்களை பங்கு மக்களுடன் பகிர்ந்துகொண்டதுடன், ஒவ்வொருவருக்கும் ஒரு செபமாலையையும் பரிசாக வழங்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 June 2024, 16:00