லக்ஸம்பர்க், பெல்ஜியம் திருப்பயண விருதுவாக்குகளும் சின்னங்களும்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
இவ்வாண்டு செப்டம்பர் மாதம் 26 முதல் 29 வரை லக்ஸம்பர்க் மற்றும் பெல்ஜியம் நாடுகளில் திருத்தந்தை திருப்பயணம் மேற்கொள்வதையொட்டி அத்திருப்பயணங்களுக்கான விருதுவாக்குகள் மற்றும் அடையாளச் சின்னங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ல்க்ஸம்பர்க்கிற்கான அடையாளச் சின்னத்தில் திருத்தந்தை தன் ஆசீரை வழங்குவதுபோல் அவரின் படமிருக்க, அதன் பின்புறத்தில் நமதன்னை பேராலயத்தின் வரைபடம் உள்ளது.
இதில் பயன்படுத்தப்பட்டுள்ள மஞ்சள் வெள்ளை நிறங்கள் வத்திக்கான் நாட்டு கொடியின் நிறங்களாகவும், நீல நிறக்கோடுகள் ல்க்சம்பர்க் கத்தோலிக்கர்களில் ஊறியுள்ள அன்னை மரியா பக்தியின் வெளிப்பாடாகவும் உள்ளன.
லக்சம்பர்க் பயணத்தின் விருதுவாக்காக, ‘பணிபுரியவே’, அதாவது இயேசுவின் வார்த்தைகளான, பணிவிடை பெற அல்ல, மாறாக பணிவிடை புரியவே (மத் 20:28) என்பதைக் கொண்டுள்ளது.
லக்ஸம்பர்க்கில் ஒரே நாளில் திருப்பயணத்தை முடித்து பெல்ஜியம் நாட்டிற்குச் செல்லும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 29ஆம் தேதிவரை அந்நாட்டில் பல்வேறு நகர்களுக்குச் சென்று விசுவாசிகளைச் சந்திப்பார்.
அந்நாட்டிற்கான திருப்பயணத்தின் அடையாளச் சின்னமாக, பெல்ஜியம் நில வரைபடத்தில் வெண்ணிறத்தில் திருத்தந்தையை மையமாகக் கொண்டு, பல வயதினரைக் குறிக்கும் சில சிறு மனித உருவங்களும், பல்வேறு கலாச்சாரங்களைக் குறிக்கும் வண்ணம் வெவ்வேறு நிறங்களில் மனித உருவங்களும் வரையப்பட்டுள்ளன.
பெல்ஜியம் நாட்டிற்கான திருப்பயணத்தின் விருதுவாக்காக, நாட்டின் வரலாற்றுப் பாதையில், அதேவேளை நம் நம்பிக்கையான இயேசுவின் நற்செய்தியின் பாதையில் நடைபோடுவதைக் குறிக்கும் விதமாக, ‘நம்பிக்கையுடன் பாதையில்’ என்பது எடுக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதம் 26 முதல் 29 வரை லக்சம்பர்க் மற்றும் பெல்ஜியம் நாடுகளில் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதே மாதத்தில் 2ஆம் தேதி முதல் 13 வரை, இந்தோனேசியா, பாப்புவா நியு கினி, கிழக்கு திமோர் மற்றும் சிங்கப்பூரில் திருத்தூதுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்