அமைதி ஏற்படுத்துவோர் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
நம் உலகில் அமைதியை ஏற்படுத்துவோர் மோதலின் இடைவிடாத மற்றும் பிடிவாதமான தர்க்கத்தை எதிர்க்கட்டும் மற்றும் சந்திப்பு மற்றும் உரையாடலின் அமைதிக்கான பாதைகளைத் திறக்கட்டும் என்றும், அவர்கள் தங்கள் நோக்கங்களில் அயராது விடாமுயற்சியுடன் இருக்கட்டும், அவர்களின் முயற்சிகள் வெற்றியுடன் முடிசூட்டப்படட்டும் என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்
நேசநாடுகளின் படைகள் பிரான்சின் நார்மண்டி கடற்கரையில் ஜூன் 5 பின்னிரவில் வந்து இறங்கத் தொடங்கியதன் 80 -ஆண்டு நிறைவையொட்டி Bayeux மற்றும் Lisieux ஆயர் Jacques HABERT அவர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியொன்றில் இவ்வாறு உரைத்துள்ளார் திருத்தந்தை.
மக்கள் அமைதி, உறுதித்தன்மை, பாதுகாப்பு, வளமை ஆகியவற்றின் நிலைமைகளை விரும்புகிறார்கள் என்றும், அதில் ஒவ்வொருவரும் அமைதியாகத் தங்கள் கடமை மற்றும் வாழ்வின் நோக்கத்தை நிறைவேற்ற முடியும் என்றும் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, கருத்தியல், தேசியவாத மற்றும், பொருளாதார நோக்கங்களுக்காக இந்த உன்னத ஒழுங்கை அழிப்பது மனிதர்களின் முன் மற்றும் வரலாற்றின் முன் பெரும் தவறு என்றும், கடவுள் முன் பாவம் என்றும் எடுத்துக்காட்டியுள்ளார்.
போர்களை விரும்புபவர்களுக்காகவும், அவற்றைத் தொடங்குபவர்களுக்காகவும், தேவையில்லாமல் அவற்றைத் தூண்டிவிடுபவர்களுக்காகவும், அதனை தக்கவைக்கவும், நீட்டிக்கவும் அல்லது அவர்களிடமிருந்து இலாபம் பெறுபவர்களுக்காகவும் இறைவேண்டல் செய்வோம் என்றும், கடவுள் அவர்களின் இதயங்களை ஒளிரச் செய்வாராக, தீமைகளை விளைவிக்கத் தூண்டும் செயல்களை அவர்களுக்கு வெளிப்படுத்துவராக என்றும் உரைத்துள்ளார்.
இறுதியாக, கடந்த கால மற்றும் நிகழ்கால போர்களில் பாதிக்கப்பட்டவர்களுக்காக செபிப்போம் என்றும், அந்தப் பயங்கரமான மோதல்களில் இறந்த அனைவரையும் கடவுள் தன்பதம் ஏற்றிக்கொள்வாராக என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, இன்றும் போர்களால் துன்பப்படும் அனைவருக்கும் அவர் உதவட்டும் என்றும், ஏழைகள் மற்றும் பலவீனமானவர்கள், முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் எப்போதும் இந்த அவலங்களில் முதலில் பாதிக்கப்படுகின்றனர் என்றும் தனது கவலையை பதிவு செய்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்