திருத்தந்தையின் பணியில் அவருக்கு ஆதரவளிப்போம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
ஜூன் 30, வரும் ஞாயிறன்று, திருத்தந்தையின் பிறரன்பு பணிக்கான உலக நாளை அனுசரிக்கும் வேளை, கத்தோலிக்கர்கள் ஒரு சிறிய அளவிலான ஒரு நன்கொடையுடன் அவரது பணியில் ஆதரவளிக்க அழைக்கப்படுவதாக செய்திக் குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்நாளில் இத்தகையதொரு உதவியைத் திருத்தந்தைக்கு வழங்குவதன் வழியாக, திருத்தந்தையின் பிறரன்புப் பணிக்கான நமது ஆதரவை வழங்குகிறோம் என்றும், இந்த நன்கொடை உலகெங்கினும் துயருறுவோருக்கும் தேவையில் இருப்போருக்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்படும் என்றும் அச்செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்தச் சிறப்பு நாளிலோ அல்லது ஆண்டின் வேறு எந்த நாளிலோ வழங்கப்படும் நன்கொடை வழியாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உலகளாவியப் பணிக்கு எவரும் தீவிரமாக பங்களிக்க முடியும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போர்கள், ஆயுதப் போட்டிகள், அநீதிகள், பல ஏழை மக்களின் துயரங்கள் மற்றும் மனித வாழ்க்கையின் புனிதத்தன்மை மற்றும் தனிப்பட்ட மனித மாண்பின் மீதான தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள உலகில், இந்தப் பணி முன்னெப்போதையும் விட மிகவும் அவசியமானதாக உள்ளது என்றும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
திருப்பீடத் துறைகளின் செயல்பாடுகள், பல்வேறு கடினமான சூழ்நிலைகளில் திருத்தந்தையின் குரலையும் உறுதியான ஆதரவையும் கொண்டு வருவதற்கும், இயற்கை பேரழிவுகள் மற்றும் போர்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி தேவைப்படும் தனிநபர்கள் மற்றும் குடும்பங்களுக்கான பிறரன்புப் பணிகளை ஆதரிப்பதற்கும் தினமும் உதவுகிறது என்றும் உரைக்கிறது அச்செய்திக் குறிப்பு.
இத்தகைய நன்கொடை அளிப்பதன் வழியாக, துயருறுவோருக்கு உதவும் திருத்தந்தையின் பிறரன்புப் பணிகளுக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், நற்செய்தி அறிவிப்புப் பணிகளுக்கும், திருப்பீடத் துறைகள் மற்றும் உலகெங்கிலும் உள்ள அவரது பிரதிநிதிகளின் வலையமைப்பு வழியாக தலத்திருஅவைகளுக்கு உதவுவதற்கும், ஒருங்கிணைந்த மனித வளர்ச்சி, கல்வி, அமைதி, நீதி மற்றும் சகோதரத்துவத்தை மேம்படுத்துதவதற்கும் அவருடைய பணியில் பங்கேற்கிறோம் என்றும் அச்செய்திக் குறிப்பில் விளக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்