வரவேற்று உதவுவது ACLI அங்கத்தினர்களின் குணநலன்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
இத்தாலிய கிறிஸ்தவத் தொழிலாளர்களைக் கொண்ட ACLI என்ற அமைப்பு, தான் துவக்கப்பட்டதன் 80ஆம் ஆண்டை சிறப்பிப்பதையொட்டி அவ்வமைப்பின் அங்கத்தினர்களை ஜூன் முதல் தேதி, சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சமூகத்தில் பனியாற்றுவதில் அர்ப்பணத்தைக் கொண்டு செயல்படும் இந்த அமைப்பின் பணிகள் மிகவும் முக்கியத்துவம் நிறைந்தவை எனக் கூறிய திருத்தந்தை, தொழிலாளர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள், இளையோர், புலம்பெயர்ந்தோர் என அனைவருக்கும், இந்த அமைப்பு ஆற்றிவரும் பணிகளைப் பாராட்டினார்.
மக்களுக்கு நெருக்கமாக இருப்பது மட்டுமல்ல, அவர்களின் ஒரு பகுதியாக அவர்களின் அருகிலேயே இருந்து, அவர்களின் துன்பதுயரங்களிலும் மகிழ்ச்சியிலும் பங்கெடுப்பதைப் பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை, தங்கள் கதவுகளைத் திறந்தவர்களாக மற்றவர்களை வரவேற்று உதவுவது ACLI அங்கத்தினர்களின் குணநலன்களுள் ஒன்றாக இருக்கிறது என மேலும் கூறினார்.
அனைவரையும் வரவேற்று ஒருமைப்பாட்டின் சங்கிலிகளைக் கட்டியெழுப்ப இந்த அமைப்பு உதவுவதுடன், சமூகத்தின் ஒரு பகுதியாக அவர்களை உணரவைக்கிறது எனவும் கூறினார் திருத்தந்தை.
ஜனநாயக முறையில் செயல்படுவது ACLIன் சிறந்த குணநலன்களுள் ஒன்று எனவும் எடுத்துரைத்த திருத்தந்தை, பாகுபாட்டுடன் நடத்தப்படல், சரிநிகரற்ற நிலையில் நடத்துதல் போன்றவைகளுக்கு மேலாக செயல்படும் இந்த அமைப்பு, முதியோர் மற்றும் ஓய்வூதியம் பெறுவோரின் உரிமைகளுக்காகவும் போராடுவதைச் சுட்டிக்காட்டினார்.
முதியோரின் உரிமைகளை மட்டும் பாதுகாக்கவில்லை, அவர்களின் மாண்புக்காக மதிப்புடன் செயல்படுவதுடன், சமூகத்திற்கான அவர்களின் பங்களிப்பை அங்கீகரித்து அவைகளை ஊக்குவிப்பதாகவும் ACLIன் பணிகள் உள்ளன என இந்த அமைப்பை பாராட்டினார் திருத்தந்தை.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ACLI அமைப்பு ஆற்றிவரும் பணிகளையும் சுட்டிக்காட்டி இவ்வமைப்பின் பணிகள் அமைதிக்கான பணிகளாக, கிறிஸ்தவ முறையான சேவையாக இருக்கின்றன என்பதையும் எடுத்துரைத்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்