நம்பிக்கையுடன் இறைவார்த்தையின் விதைகளை விதைப்போம்!

தனது மூவேளை செபவுரையில், இன்றைய நற்செய்தியை மையப்படுத்தி தனது பகிர்தலை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறையாட்சி என்னும் மண்ணில் நாம் பலன்தரும் விதைகளாக மாறவும், அதேவேளையில் நாம் பிறரில் விதைக்கும் நற்செய்தி என்னும் விதைகள் பலன்தரும் வரை பொறுமையுடன் காத்திருக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

பெற்றோராக, அருள்பணியாளர்களாக, இருபால் துறவியராக, ஆசிரியர்களாக, மறைக்கல்வியாளர்களாக,  பயிற்றுநர்களாக நாம் எந்தச் சூழ்நிலையில் வாழ்ந்தாலும், நற்செய்தியை நம்பிக்கையுடன் விதைக்க இயேசு நமக்குக் கற்றுக்கொடுக்கிறார் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜூன் 16, இஞ்ஞாயிறன்று, வத்திக்கானின், புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு வழங்கிய மூவேளை செப உரையில் இவ்வாறு கூறினார் திருத்தந்தை.

இன்றைய ஞாயிறு நற்செய்தி வாசகத்தை (மாற் 4:26-34) மையமாகக் கொண்டு தனது மூவேளை செப உரை சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம்பிக்கையான எதிர்பார்ப்பு என்ற முக்கியமான மனப்பாங்கு குறித்து சிந்திக்க இயேசு நம்மை அழைக்கிறார் என்றும் உரைத்தார்.

பொறுமை காப்போம்  

ஒரு விவசாயி எவ்வளவுதான் நன்றாகவும் ஏராளமாகவும் விதைகளை மண்ணில் விதைத்தாலும், அவர் எவ்வளவுதான் நன்றாக மண்ணைத் தயாரித்தாலும், செடிகள் அதில் உடனடியாக முளைக்காது, அதற்கு நேரம் எடுக்கும்! ஆகவே, விதைகளை விதைத்த பிறகு, அவைகள் சரியான நேரத்தில் முளைத்து வளர்ந்து இறுதியில் நாம் எதிர்பார்க்கும் அளவிற்கு ஏராளமான விளைச்சளைப் பெற நாம் காத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம் (வச. 28-29) என்பதையும் தனது உரையில் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.

நிலத்தைப் பராமரிப்போம்

அதேவேளையில், விதைக்கப்பட்ட அந்த விதைகள் மண்ணுக்கடியில் பெரிய அளவில் வளர்ந்துகொண்டிருக்கும் ஓர் அதிசயம் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றது. ஆனால், அது நம் கண்களுக்குத் தெரிவதில்லை, அதற்குப் மிகுந்த பொறுமை தேவை என்று குறிப்பிட்ட திருத்தந்தை, இதற்கிடையில், விதைகள் விதைக்கப்பட்ட மண்ணின் மேற்பரப்பில் எதுவும் நடப்பதாகத் தெரியவில்லை என்றபோதிலும், அம்மண்கட்டிகளைப் பராமரிப்பது, தண்ணீர் ஊற்றுவது மற்றும் அவற்றை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் அவசியம் என்பதையும் கோடிட்டுக்காட்டினார்.

நற்பயன் தரும் தானியக் கதிர்களாவோம்

இயேசுவின் இறையாட்சியும் இதுபோன்றதுதான் என்ற திருத்தந்தை, அவர் தம்முடைய வார்த்தை மற்றும் அருளின் விதைகளை, நல்ல மற்றும் ஏராளமான விதைகளை நம்மில் விதைக்கிறார், பின்னர், எப்போதும் அவர் நம்முடன் தொடர்ந்து பயணித்து அவ்விதைகள் முளைத்தெழும்பி பயன்தரும் வரை மிகவும் பொறுமையுடன் காத்திருக்கிறார் என்றும் விளக்கினார்.

ஒரு தந்தைக்குரிய நம்பிக்கையுடன் அவர் நம்மைத் தொடர்ந்து கவனித்துக்கொள்கின்றார் என்றும், அதேவேளையில், நம்மில் விதைக்கப்பட்ட விதைகள் முளைத்து செழித்து வளர்ந்து நல்ல விளைச்சளைத் தருவதற்கான போதிய கால அவகாசத்தையும் அவர் நமக்கு வழங்குகிறார் என்றும் தெளிவுபடுத்தினார் திருத்தந்தை.

மேலும் இறையாட்சி என்னும் தனது நிலத்தில் எந்தவொரு விதையும் பலன்தராமல் போய்விடக்கூடாது என்று விரும்பி அவர் நமக்குப் கால அவகாசம் வழங்குவதால், எல்லா விதைகளுமே முழு முதிர்ச்சியை அடைகின்றன என்று எடுத்துக்காட்டிய திருத்தந்தை, நற்பயன் தரும் தானியக் கதிர்களாக நாம் வளர வேண்டும் என்று அவர் விரும்புகிறார் என்றும் தெரிவித்தார்.

நற்செய்தியை நம்பிக்கையுடன் விதைப்போம்

அதுமட்டுமன்றி, பெற்றோராக, அருள்பணியாளர்களாக, இருபால் துறவியராக, ஆசிரியர்களாக, மறைக்கல்வியாளர்களாக,  பயிற்றுநர்களாக  நாம் எந்தச் சூழ்நிலையில் வாழ்ந்தாலும், நற்செய்தியை நம்பிக்கையுடன் விதைக்கக் இயேசு நமக்குக் கற்றுக்கொடுக்கிறார் என்று கூறிய திருத்தந்தை, நம்மால் விதைக்கப்பட்ட விதை வளர்ந்து நம்மிலும் பிறரிலும் பலனளிக்கும் வரை காத்திருப்போம் என்றும் அவர் திருப்பயணிகளைக் கேட்டுகொண்டார்.

மேலும் ஊக்கம் குறையாமலும், ஒருவருக்கொருவர் ஆதரவு வழங்குவதை நிறுத்தாமலும் விதைகளின் பலனை எதிர்பார்த்து பொறுமையுடன் காத்திருப்போம் என்று அறிவுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நமக்குத் தெரியாமலேயே நாம் விதைத்த விதைகள் உள்ளுக்குள்ளேயே அற்புதமாக வளர்ந்துகொண்டிருக்கின்றன என்றும், சரியான நேரம் வரும்போது அவை ஏராளமான பலன்களைத் தரும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

கேள்விகள் எழுப்பிச் சிந்திப்போம்

நான் வாழும் சூழலில் கடவுளுடைய வார்த்தையை நம்பிக்கையுடன் விதைக்கிறேனா? நான் பொறுமையாகக் காத்திருக்கிறேனா அல்லது உடனடியாக முடிவுகளை எதிர்பார்த்து, அவை கிடைக்காததால் நான் சோர்வடைகிறேனா? நற்செய்தியை அறிவிக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்யும்போது, ​​எல்லாவற்றையும் அமைதியாக இறைவனிடம் ஒப்படைக்க என்னால் முடிகிறதா? என்பன போன்ற கேள்விகளை நமக்குள்ளேயே எழுப்பிச் சிந்திப்போம் என்றும் திருப்பயணிகளிடம் விண்ணப்பித்தார் திருத்தந்தை.

அன்னை மரியாவின் துணையை வேண்டுவோம்

வார்த்தையின் விதையாகிய இயேசுவை தன்னுள் வரவேற்று அதனை தனது கருவறையில் வளரச் செய்த அன்னை கன்னி மரியா, நற்செய்தியை தாராளமாகவும் நம்பிக்கையுடனும் விதைப்பவர்களாக இருக்க நமக்கு உதவட்டும் என்று கூறி தனது மூவேளை செபவுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 June 2024, 11:01