பேதுருவிடம் உள்ள திறவுகோல்கள் திருஅவைக்கான பணியின் அடையாளம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
விண்ணரசின் திறவுகோல்களை புனித பேதுரு பெற்றது அவர் குறைபாடற்றவர் என்பதால் அல்ல, மாறாக, அவர் பணிவு மற்றும் நேர்மையும் கொண்டவர் மற்றும் இறைத்தந்தையே அவர் உறுதியான நம்பிக்கைகொண்டவர் (காண்க மத் 16:17) என்பதை வெளிப்படுத்தி இருந்ததால்தான் என்றும், அதனால்தான், கடவுளின் இரக்கத்தை நம்பி, இயேசு கேட்டுக்கொண்டபடி, அவருடைய சகோதரர்களை ஆதரிக்கவும் பலப்படுத்தவும் அவரால் முடிந்தது (காண். லூக் 22:32) என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜூன் 29, சனிக்கிழமை இன்று, திருத்தூதர்கள் புனித பேதுரு மற்றும் பவுல் பெருவிழாவை முன்னிட்டு நண்பகல் 12 மணிக்கு வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய சிறப்பு மூவேளை செபவுரையில் இவ்வாறு கூறினார் திருத்தந்தை.
பேதுருவின் கரங்களில் திறவுகோல்கள்
"விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடைசெய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்” (மத் 16:19) என்று இயேசு பேதுருவுக்குக் கூறிய வார்த்தைகளை எடுத்துக்காட்டிய திருத்தந்தை, இதன் காரணமாகவே அவருடைய கரங்களில் இரண்டு திறவுகோல்களைக் காண்கிறோம் என்றும், அவை முழு திருஅவைக்கும் சேவை செய்ய இயேசு அவரிடம் ஒப்படைத்த அதிகாரப் பணியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன என்றும் விளக்கினார்.
ஆனாலும் இந்தத் திறவுகோல்கள் குறித்த உண்மைப் பொருளை அறிந்துகொள்வதில் நாம் மிகவும் கவனமாக இருப்போம் என்றும் கூறிய திருத்தந்தை, பேதுருவின் கரங்களில் இருந்த விண்ணரசுக்கான இந்தத் திறவுகோல்கள் உண்மையில், பாதுகாப்பான பெட்டகத்துக்கு உரியதாக இயேசு விவரிக்கவில்லை, ஆனால் ஒரு சிறிய விதை, ஒரு விலைமதிப்பற்ற முத்து, ஒரு மறைக்கப்பட்ட புதையல், புளிப்பு மாவு (காண்க மத் 13:1-33) போன்ற உருவகங்களைக் குறித்த பாடங்களையும் நமக்குப் படிப்பிக்கின்றன என்றும் விளக்கினார்.
அதனால் இதனை அடைய பொறிமுறைகள் மற்றும் பாதுகாப்பு பூட்டுகளை (mechanisms and safety locks) இயக்குவது அவசியமில்லை, ஆனால் இது, பொறுமை, கவனம், நிலைத்தன்மை, பணிவு போன்ற நற்பண்புகளை வளர்ப்பது என்பதைக் குறிக்கிறது என்றும் எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.
எனவே, இயேசு பேதுருவிடம் ஒப்படைக்கும் இந்தப் பபணி என்பது, வீட்டின் கதவுகளைப் பாதுகாப்பதோ அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட சில விருந்தினர்களை மட்டுமே அணுக அனுமதிப்பதோ அல்ல, மாறாக, இயேசுவின் நற்செய்திக்குப் பிரமாணிக்கமாக இருக்க அனைவரும் தங்கள் வழியைக் கண்டறிய உதவுவதாகும் என்றும் எடுத்துரைத்தார்.
கேள்விகள் எழுப்பிச் சிந்திப்போம்
கடவுளின் அருளுடன், அவருடைய விண்ணரசில் நுழைவதற்கும், அவருடைய உதவியுடன், மற்றவர்களுக்கும் அதை வரவேற்கும் பாதுகாவலராக இருக்க வேண்டும் என்ற விருப்பத்தை நான் வளர்த்துக்கொள்கிறேனா? இதைச் செய்வதற்கு, என்னில் வாழும் இயேசு மற்றும் அவரது தூய ஆவியாரால் மெருகூட்டப்பட்ட, மென்மையாக, மாதிரியாக இருக்க நான் என்னையே அனுமதிக்கிறேனா? என்பன போன்ற கேள்விகளை எழுப்பிச் சிந்திப்போம் என்று திருப்பயணிகளிடம் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
அன்னை மரியாவின் துணையை வேண்டுவோம்
கிறிஸ்துவுடனான சந்திப்புக்கு நாம் ஒருவருக்கொருவர் வழிகாட்டியாகவும் ஆதரவாகவும் இருக்க, திருத்தூதர்களின் அரசியும், மற்றும் திருத்தூதர்களான பேதுரு மற்றும் பவுலும் தங்களின் பரிந்துரை செபங்கள் வழியாக நமக்கு இறையருளைப் பெற்றுத்தருவார்களாக என்று கூறி, தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கி தனது சிறப்பு மூவேளை செபவுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்