அமைதிக்காக குரல் கொடுக்கும்  திருத்தந்தை அமைதிக்காக குரல் கொடுக்கும் திருத்தந்தை  (AFP or licensors)

புனித பூமிக்கான அமைதி ஒலிவ மரம் நட்டு 10 ஆண்டுகள் நிறைவு

அன்பும் நட்புணர்வும் மேலோங்க வேண்டும் எனவும், இவ்வுலகை வருங்காலத் தலைமுறைக்கு நன்முறையில் ஒப்படைக்கவேண்டிய நம் கடமையையும் வலியுறுத்தும் திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

சரியாக 10 ஆண்டுகளுக்கு முன்னர் வத்திக்கான் தோட்டத்தில் புனித பூமியின் அமைதிக்காக இஸ்ராயேல் மற்றும் பாலஸ்தீனிய தலைவர்களுடன் இணைந்து ஒலிவ மரம் ஒன்றை நட்ட திருத்தந்தை, அதே நாளில் அமைதிக்கான அழைப்பை மீண்டும் புதுப்பிக்க உள்ளார்.

2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8ஆம் தேதி, இஸ்ராயேல் அரசுத்தலைவர் Shimon Peres, பாலஸ்தீன அரசுத்தலைவர் Mahmoud Abbas, கான்ஸ்டான்டிநோபிலின் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும்தந்தை முதலாம் பர்த்தலேமேயு ஆகியோருடன் இணைந்து திருத்தந்தை வத்திக்கான் தோட்டத்தில் புனித பூமியின் அமைதிக்கென ஒலிவ மரம் ஒன்றை நட்ட அதே நாளில் பத்து ஆண்டுகளுக்குப்பின் அமைதி விண்ணப்பம் ஒன்றை மீண்டும் அதே இடத்திலிருந்து விட உள்ளார் திருத்தந்தை.

போர் தொடர்ந்து இடம்பெற்றுவரும் புனித பூமியின் அமைதிக்கான விண்ணப்பத்தை பலமுறை விடுத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன் 8ஆம் தேதி அமைதிக்கான வழிபாட்டை, அமைதிக்கான ஒலிவ மரம் நடப்பட்ட பகுதியில் நடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்து ஆண்டுகளுக்கு முன்னர் வத்திக்கான் தோட்டத்தில் அமைதிக்கான ஒலிவ மரம் நடப்பட்ட வேளையில், அன்பும் நட்புணர்வும் மேலோங்க வேண்டும் எனவும், இவ்வுலகை வருங்காலத் தலைமுறைக்கு நன்முறையில் ஒப்படைக்கவேண்டிய நம் கடமையையும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ். 

போர்களை தவிர்த்து சந்திப்புகளுக்கு ஆம் சொல்வதற்கும், வன்முறைகளைத் தவிர்த்து பேச்சுவார்த்தைகளுக்கு ஆம் சொல்வதற்கும்,  முரண்பாடுகளை தவிர்த்து கலந்துரையாடல்களுக்கு ஆம் சொல்வதற்கும், விதிமீறல்களைத் தவிர்த்து ஒப்பந்தங்களை மதிப்பதற்கு ஆம் சொல்வதற்கும், ஏமாற்று வேலைகளைக் கைவிட்டு உண்மைத்தனத்திற்கு ஆம் சொல்வதற்கும் மனவுறுதி தேவைப்படுகின்றது எனவும் அந்நாளில் உரைத்திருந்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 June 2024, 13:22