திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்   (VATICAN MEDIA Divisione Foto)

மோதல்களுக்கு அமைதியான தீர்வுகள், பேச்சுவார்த்தைகள் தேவை!

உக்ரைன், பாலஸ்தீனம், காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் இஸ்ரேல் நாடுகளைச் சிறப்பாக நினைவுகூர்ந்து அவைகளில் நிலையான அமைதி நிலவிட இறைவேண்டல் செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

உலகில் மோதலைத் தூண்டும் எந்தவொரு செயலையும் வார்த்தையையும் தவிர்க்கவும், மோதல்களுக்கு அமைதியான தீர்வை உறுதியுடன் நோக்கவும், தூய ஆவியார், ஆட்சியாளர்களின் மனதை தெளிவுபடுத்துவாராக மற்றும், அவர்களுக்கு ஞானத்தையும் பொறுப்புணர்வையும் தந்தருள்வாராக! என்று கூறினார் திருத்தந்தை.

ஜூன்23, இஞ்ஞாயிறன்று, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய மூவேளை செப உரைக்குப் பின்பு இவ்வாறு கூறினார் திருத்தந்தை.

புனித பூமியிலும் உக்ரைனிலும் நடைபெற்று வரும் சோகமான நிகழ்வுகள் மற்றும், மோதல்களை சமாளிக்க, பேச்சுவார்த்தைகள் தேவை என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை, உலகை ஆட்டிப்படைக்கும் போர்கள் பற்றிய தனது கருத்துக்களையும் சிந்தனைகளையும் அங்குக் குழுமியிருந்த விசுவாசிகளிடம் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை.

அமைதிக்காகத் தொடர்ந்து இறைவேண்டல் செய்வோம் என்று திருப்பயணிகளிடம் வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உக்ரைன், பாலஸ்தீனம், காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் இஸ்ரேல் நாடுகளைச் சிறப்பாக நினைவுகூர்ந்தார்.

மேலும் போரால் துன்புற்று வரும் உக்ரைன் மக்களின் அமைதிக்காக சிறப்பானதொரு வழியில் இறைவேண்டல் செய்வோம் என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை, அங்கு அமைதியை ஏற்படுத்த அதன் ஆட்சியாளர்கள் பொறுப்புடன் செயல்பட்டு மோதல்களை முடிவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விண்ணப்பித்துக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 June 2024, 12:51