நாம் அனைவரும் நம்பிக்கையின் திருப்பயணிகள்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
நீசேயா நம்பிக்கை அறிக்கை கூறுவதுபோல், நமது பொதுவான ஆன்மிகத் தொடக்கம் என்பது பாவமன்னிப்புக்கான ஒரே திருமுழுக்கு என்பதை நினைவுகூர்வோம் என்றும், நம்பிக்கையின் திருப்பயணிகளாக நமது பயணத்தைத் தொடர்வோம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜூன் 20, இவ்வியாழனன்று, லூத்தரன் உலகக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளைத் திருப்பீடத்தில் சந்தித்து மகிழ்ந்தபோது, அவர்களுக்கு வழங்கிய உரையில் இவ்வாறு தெரிவித்த திருத்தந்தை, நம்மோடு பயணிக்கும் நம்பிக்கையின் கடவுள், உண்மை மற்றும் அறச்செயலுக்கான நமது உரையாடலில் நம்மைத் தொடர்ந்து ஆசீர்வதிப்பாராக! என்றும் உரைத்தார்.
"எதிர்நோக்கைத் தரும் கடவுள், நம்பிக்கையால் உண்டாகும் பெருமகிழ்ச்சியாலும், அமைதியாலும் உங்களை நிரப்புவாராக! அவ்வாறு தூய ஆவியின் வல்லமையால் நீங்கள் இன்னும் மிகுதியான எதிர்நோக்குடன் வாழ அருள்புரிவாராக" (காண்க உரோ 15:13) என்ற பவுலடியாரின் வார்த்தைகளுடன் தனது உரையைத் தொடங்கிய திருத்தந்தை, ‘நாம் அனைவரும் நம்பிக்கையின் திருப்பயணிகள்’ என்ற யூபிலி 2025-ஆம் ஆண்டிற்கான மையக்கருத்தையும் எடுத்துக்காட்டினார்.
கடந்த மூன்று ஆண்டுகளிலும் இவ்வமைப்பினரைத் தான் சந்தித்தபோது அவர்களுக்கு வழங்கிய சிந்தனைகளை, கருத்துக்களை நினைவு கூர்ந்த திருத்தந்தை, பழங்கால நீசேயாவின் நம்பிக்கை அறிக்கையின் 1700-வது ஆண்டு நிறைவை 2025-இல் கொண்டாடுவோம் என்றும், கிறிஸ்துவை மையமாகக் கொண்ட ஒரு கிறிஸ்தவ ஒன்றிப்பை இது உருவாக்குகிறது என்றும் உரைத்தார்.
இதன் பின்னணியில், கத்தோலிக்கர் மற்றும் லூத்தரன் திருஅவையினருக்கு இடையிலான நல்லிணக்க வரலாற்றில் ஒரு சிறப்பு இடத்தைப் பெற்றுள்ள நம்பிக்கையின் அழகான அடையாளத்தை நீங்கள் சரியாக நினைவு கூர்ந்துளீர்கள் என்றும் அவர்களிடம் பெருமிதத்துடன் கூறினார் திருத்தத்தை.
இயேசு கிறிஸ்து கிறிஸ்தவ ஒன்றிப்பின் இதயம், அவர் இறைஇரக்கத்தின் மனுவுருவெடுப்பு என்றும், இதற்கு சான்று பகர்வதே நமது கிறிஸ்தவ ஒன்றிப்பின் பணியாகும் என்றும் எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.
நமது ஏற்புடைமை மறைப்படிப்பினையின் கூட்டு அறிக்கையின்படி (Joint Declaration on the Doctrine of Justification) கத்தோலிக்கர் மற்றும் லூத்தரன் திருஅவையினாராகிய நாம் ஒரு பொதுவான இலக்கை வகுத்துள்ளோம் என்று கூறிய திருத்தந்தை, "கடவுள் ஒருவரே. கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே இணைப்பாளரும் ஒருவரே. அவரே இயேசு கிறிஸ்து என்னும் மனிதர். அனைவரின் மீட்புக்காக அவர் தம்மையே ஈடாகத் தந்தார்; குறித்த காலத்தில் அதற்குச் சான்று பகர்ந்தார்" (காண்க 1 திமோ 2:5-6) என்ற புனித பவுலடியாரின் வார்த்தைகளுக்குச் சான்று பகர அழைக்கப்படுகிறோம் என்றும் உரைத்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்